2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்
- கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு தொடங்கியுள்ள திட்டங்களின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் – ஜனாதிபதி.
விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத் திட்டங்களையும் வெற்றியடையச் செய்வதற்கு கிராமிய ரீதியாக செயற்படும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு (08) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
2023 டிசம்பர் 2 ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராம உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை முடிவுகளின்படி, பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகஸ்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
அடையாளமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
அஸ்வெசும, உறுமய போன்ற வேலைத் திட்டங்கள் குறித்து புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறும் மக்களை மேம்படுத்த அரசாங்கம் இந்த திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும், தமது பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்த வேலைத் திட்டங்களில் இணைந்து தீவிரமாக செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”இன்று கிராம அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இன்று முதல் நீங்கள் அரசாங்க சேவையில் வெற்றிகரமான அங்கமாக மாறியுள்ளீர்கள். இந்த நாட்டின் அனைத்து மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்ப முயற்சி செய்து வருகிறோம். நாட்டின் அடிப்படை நிர்வாகப் பிரிவான கிராம அலுவலர் பிரிவாக உங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். நாங்கள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதோடு அதிலுள்ள பல நிபந்தனைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போதைய அபிவிருத்தித் திட்டம் கிராமத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெற்றிகரமான அறுவடையைப் பெற முடிந்தது. மேலும், 2023 ஆம் ஆண்டின் பெரும் போகத்தில், மீண்டும் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றோம். இந்த பங்களிப்பின் காரணமாக இன்று நாம் பொருளாதார ரீதியில் வலுவடைந்துள்ளோம்.
இதன் மூலம் இன்று 2100 கிராம உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள முடிந்தது. நிர்வாகப் பணிகள் மட்டுமின்றி, கிராமப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பொறுப்பும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்பட வேண்டிய 04 பிரிவுகளை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பயனாளிகள் குறித்த தகவல்களை கணினிமயமாக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். அதற்கமைய, அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும். அதன்படி, கிராமத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து, பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
அத்துடன், இந்த மக்களின் வாழ்வாதார வழிகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வருவாய் கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். மேலும், கடந்த புத்தாண்டு காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம். இது இம்மக்களுக்கு மேலும் நிவாரணத்தை அளிப்பதுடன், சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து இந்த அரிசி கொள்வனவு செய்யப்பட்டதால் அவர்களுக்கும் ஓரளவு நன்மை கிடைத்துள்ளது. கிராமத்தின் வளர்ச்சிக்காக இந்தப் பணி தொடர வேண்டும்.
அத்துடன், மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். இந்த காணி உரிமையால், அவர்களின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் ஏற்படும்.
மேலும், விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் கிராமப் பொருளாதாரம் வலுப்பெறுகிறது. முற்காலத்தில் ரஜரட்ட பிரதேசத்தில் விவசாயம் செழிப்பாக இருந்தது. தம்பதெனிய முதல் கண்டி வரையிலான ஈரப்பதம் உள்ள பிரதேசத்தில் கறுவா உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி பொருளாதாரம் காணப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு என்பன ஏற்றுமதி செய்யப்பட்டன.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் அபிவிருத்தி செய்ய விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். எனவே இப்பணிகளை பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கமநல சேவை மையங்கள் மட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் குழுக்களை நியமித்து விவசாயிகளை திரட்டி தனியார் பங்களிப்புடன் கிராமிய விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளோம். இதற்காக 25 பிரதேச செயலகங்கள் அடையாளம் காணப்பட்டு ஒவ்வொன்றிற்கும் 25 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திற்குள் இதற்காகப் பயன்படுத்தப்படும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை 100 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமிய விவசாயத்தை மேம்படுத்தாமல் கிராமத்தின் வறுமையை ஒழிக்க முடியாது. எனவே விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தெற்கில் சில பகுதிகள் சுற்றுலாத்துறையால் வளர்ச்சியடைந்துள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் கிராமத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உங்கள் பிரதேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த நீங்கள் அனைவரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மேலும், கிராமப்புறக் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். அதற்கு உங்கள் பங்களிப்பும் அவசியம்.
உறுமய வேலைத் திட்டம் தொடர்பான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் பணியை வினைத்திறனாக்கும் வகையில், பிரதமருடன் கலந்துரையாடி நடமாடும் சேவையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்படி எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கிறோம்”என்று ஜனாதிபதி தெரிவித்தார் .
பிரதமர் தினேஷ் குணவர்தன,
”புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் எனது வாழ்த்துகள். அரச சேவை என்பது உன்னதமான சேவை. நாட்டின் இருப்பு, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைப் பாதுகாப்பதில் அரச ஊழியர்களின் அர்ப்பணிப்பு விசேடமான பொறுப்பாகக் கருதப்படுகிறது.
ஏனைய சேவைகளை விட அரச சேவை மிகவும் முக்கியமானது. கடந்த காலத்திலிருந்து கிராம உத்தியோகத்தர் சேவை ஒரு உன்னத சேவையாக கருதப்படுகிறது.இன்று கிராம அதிகாரியாக பொறுப்பேற்கும் நீங்கள் அனைவரும் இதை ஆழமாக புரிந்து கொண்டு செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்.
துறைசார் பொறுப்புகளை நிறைவேற்றி, பின்னர் அமைச்சின் செயலாளர்களாகவும், மேலதிக செயலாளர்களாகவும், மாவட்ட செயலாளர்களாகவும் சிறப்பாக சேவையாற்றிய கிராம உத்தியோகத்தர்களைப் பற்றி நமது நாட்டு வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.
பெரும் வெள்ளம் போன்ற எதிர்பாராத இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டால் முதலில் மக்களிடம் செல்வது நீங்கள்தான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கிராம உத்தியோகத்தர்கள் செயற்பட்டுள்ளனர்.
அது போன்று விழிப்புடனும் அர்ப்பணிப்புடனும் இருக்கும் அதிகாரிகள் இன்றும் இருக்கிறார்கள். அத்தகைய அதிகாரங்கங்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி மிகவும் ஆழமாக சிந்தியுங்கள். கடமையின் நோக்கங்களையும் இலக்குகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் அரசாங்கம் இன்று இந்தப் பொறுப்புகளை உங்களுக்கு வழங்குகிறது.
நீங்கள் அனைவரும் 2021 இல் 2000 கிராம சேவை நியமனங்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளீர்கள். அதன் பின்னர் நீண்ட காலம் கடந்த போதிலும், ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடனும் ஒப்புதலுடனும் பொது நிர்வாக அமைச்சு நிதி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்து, பரீட்சையை நடத்தி, பெறுபேறுகளின் அடிப்படையில் நியமனங்களை வழங்க முடிந்தது. வெற்றிடமாக உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள். பரீட்சையில் புள்ளி பெற்று, நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படுகிறது.
இந்த நியமனங்களை வழங்குவதில் எந்த விதத்திலும் பக்கச்சார்பு காட்டப்படவில்லை. பரீட்சை ஆணையாளர் நடத்திய பரீட்சையின் பெறுபேறுகளின்படி செயற்பட எம்மால் முடிந்தது. அது உங்கள் மீதான நம்பிக்கை. உங்கள் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம்” என்றார்.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த,
”தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் இல்லாமல் இந்த நியமனங்கள் உங்களுக்கு கிடைத்திருக்காது. அரச துறையை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். சில நாசகார கும்பல்களும் குழுக்களும் அரச சேவையை அழிக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றன.
அரச நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை சிலர் மறந்து விடுகின்றனர். அரச அதிகாரிகளின் முக்கிய பொறுப்பு நிர்வாகத்தின் அரசாங்க கொள்கைகளை செயல்படுத்துவதாக இருக்க வேண்டும். குழப்பம் ஏற்படுத்துவது அரச ஊழியரின் வேலையல்ல.
அன்று வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தலைமைத்துவம் பங்காற்றியது. அரச அதிகாரிகளாகிய நீங்கள் அவருடைய முறையான பொறிமுறையை கற்றுக்கொள்ள வேண்டும்.
அவர் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாவிட்டால் இந்த நாடு அழிந்திருக்கும். எனவே, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு உங்கள் ஆதரவு தேவை.
கிராமத்தில் உள்ள ஒரு தரப்பினருக்கு மாத்திரம் நாட்டின் சட்டம் வழங்கப்படக்கூடாது. இந்த நியமனங்களை பெறுவதில் நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உங்கள் சேவைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்திற்கு பொறுப்பான உண்மையான அரச அதிகாரியின் பொறுப்பை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அரச நிர்வாகம், சட்டவாக்கத்தையும் நிர்வாகத்தையும் புறக்கணித்து பயணிக்க முடியாது. அழிவு அரசியலில் இருந்து அரசஅதிகாரிகள் விலகி இருக்க வேண்டும். அரச அதிகாரிகள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின்படி செயல்படக்கூடாது. அரச அதிகாரிகளாகிய நீங்கள் நிர்வாகத்தின் முடிவுகளைச் செயல்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்றார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, எஸ். பி. திஸாநாயக்க, மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எச். எம். நந்தசேன மற்றும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.