பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமான மஹபொல கண்காட்சி, அதிகமானவர்களுக்கு உயர்கல்விக்கான கதவுகளை திறக்கும்.

– மறைந்த லலித் அத்துலத்முதலியின் பெயரில் சீதாவக பல்கலைக்கழக பட்டப் பின்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம்.

– ஜனாதிபதி

மஹபொல ஊடாக கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் திறந்த பொருளாதாரத்தின் நன்மைகளை கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பத்து வருடங்களின் பின்னர் மஹபொல கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சியை மீள ஆரம்பிப்பதன் மூலம் அதிகமானவர்களுக்கு உயர்கல்விக்கான கதவுகள் திறக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை ஆரம்பித்து வைத்து இலங்கையின் கல்விக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சீதாவக பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு ஆராய்ச்சி மையமான Post Graduate for Research நிறுவனத்திற்கு அவரது பெயரிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மஹபொல 2023 கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று (14) மாலை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டின் மிகப்பெரிய கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சியான ‘மஹபொல 2023’ கண்காட்சி கடந்த 13 ஆம் திகதி ஜா-எல நகர சபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நாட்டின் வறிய பெற்றோரின் பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றும் நோக்கில் மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியினால் ஆரம்பிக்கப்பட்ட மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதிக்கு ஆதரவாக மஹபொல வர்த்தகக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

10 வருடங்களின் பின்னர் இந்த வருடம் 226 ஆவது மஹபொல கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இக்கண்காட்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

இக்கண்காட்சியானது 350இற்கும் மேற்பட்ட பல்துறைசார் கண்காட்சிக் கூடங்களைக் கொண்டுள்ளது. இது புத்தாக்க மற்றும் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளுக்கான சந்தையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இரண்டாவது நாளான நேற்று, கல்விக்காக ஒதுக்கப்பட்டதுடன், கண்காட்சி கூடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
கண்காட்சியை பார்வையிட வந்த பாடசாலை மாணவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

லலித் அத்துலமுதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்திற்கான ஒன்லைன் நன்கொடை (online donation facility) வசதிக்காக www.eservices.mahapola.lk என்ற இணையத்தளத்தையும் ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்

அந்த நிதிக்கான முதல் நன்கொடையை பராக்கிரம பண்டார வழங்கினார். மஹபொல 2023 உடன் இணைந்து நடத்தப்பட்ட கலை, கட்டுரை, குறும்படம் மற்றும் வீதி நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்துகொண்டார்.

மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதத்தலைவர்கள், வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், மேல் மாகாண ஆளுநரும் விமானப் படைத் தளபதியுமான எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உட்பட பல அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.