2024 பட்ஜெட் என்பது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவு செலவுத்திட்டமாகும்

  • இந்தத் திட்டத்துடன் நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கட்சி போதமின்றி இணையுங்கள் -ஜனாதிபதி.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவு செலவுத் திட்டம் எனவும் அத்துடன் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார முறைமைக்கு அடித்தளமிடும் வரவு செலவுத் திட்டம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அந்த வேலைத்திட்டத்துடன் நாட்டிற்கு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை என்ற தொனிப்பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

2024 வரவு செலவுத்திட்ட முழுமையான உரை பின்வருமாறு.

புத்தரின் போதனைகளில் சமநிலைவாழ்வு என்று ஒரு சொல் உள்ளது. புத்தர் வியாக்கபஜ்ஜ சூத்திரத்தில் சகவாழ்வைப் பற்றி போதித்தார். அதற்கேற்ப வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிப்பது பற்றி ; சமநிலைவாழ்வு மூலம் எமக்குக் கற்றுத்தருகின்றது.

குறைந்த வருமானத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது தவறு என்றும், உண்மையான புரிதல் உள்ள ஒருவர் வரவு செலவை சமப்படுத்தி தனது வாழ்க்கைத் தரத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றது.

வருமானத்திற்கு ஏற்ப செலவுகள் செய்யப்பட வேண்டும். அதைத்தான் பௌத்த பொருளாதார தத்துவம் நமக்குக் காட்டுகிறது. ஆனால், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாக நாம் வருமானத்துக்கு ஏற்ப செலவு செய்யவில்லை.

இதை நான் கூறும்போது, இந்நாட்டு அரசாங்கங்கள் வீண் செலவு செய்துள்ளன என்று நினைக்கலாம். அரசாங்கங்கள் மட்டுமல்ல. இந்த நாட்டில் உள்ள நாம் அனைவரும் அந்த தவறை செய்துள்ளோம்.

தொழில்வாய்ப்புகளை வழங்கியமை, சம்பளம் அதிகரித்தமை, இலவசமாக அரிசி வழங்கியமை, சலுகைகள் வழங்கியமை மற்றும் அரச நிறுவனங்கள் பராமரிக்கப்பட்டமை அனைத்தும் கடன் வாங்குவதன் மூலமோ அல்லது பணத்தை அச்சிடுவதன் மூலமோ மேற்கொள்ளப்பட்டது. அரசாங்க வேலைவாய்ப்பு வழங்குதல், அரசாங்க வளங்களைப் பாதுகாத்தல், நிவாரணப் பொதிகள் வழங்குதல், பொருட்களின் விலைகளைக் குறைத்தல், கூடுதலான சம்பளம் வழங்குதல் போன்ற வாக்குறுதிகளின் மூலம்தான் தேர்தல்கள் வெற்றிகொள்ளப்பட்டன. இவ்வாறான வருமானமல்லா சுகவாழ்வு வாழ்வதற்கு நாம் நாட்டுக்கும் உலகத்திற்கும் கடன்பட்டோம்.

புத்தர் சாமஞ்ஞபல சூத்திரத்தில், கடன்களை முதலீட்டிற்காக எடுக்க வேண்டுமேயன்றி நுகர்வுக்காக அல்ல என்று சுட்டிக்காட்டுகிறார். ஆனால் நாம் நுகர்வுக்காக கடன் வாங்கினோம். இவ்வாறு கடன் வாங்குவதும் வட்டி செலுத்துவதும் மிகவும் ஆபத்தானது என அங்குத்தர நிபாதவின் இண சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமநிலைவாழ்வு மற்றும் பௌத்த பொருளாதார தத்துவத்தை புறக்கணித்ததன் விளைவாக, சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னரும், நாம் பெரும் ஆபத்திற்கு உள்ளாகினோம். நமது பொருளாதாரம் முற்றிலும் வீழ்சிசியடைந்தது. வங்கரோத்து அரசாக மாறியது.

இரண்டு அல்லது மூன்று லீட்டர் பெற்றோலுக்கு சண்டைபிடித்தோம். எரிவாயு தாங்கிகளுக்காக வாக்குவாதம் செய்தோம். ஒரு நாளைக்கு பத்து பதினைந்து மணித்தியாலங்கள் இருட்டில் இருந்தோம். பல்பொருள் அங்காடிகள் விறகுக்கட்டுகளை விற்கத் தொடங்கின. வியாபாரங்கள் வீழ்ச்சியடைந்தன. சுற்றுலாத் துறை விழ்ச்சியடைந்தது.

வேலைவாய்ப்புகள் இல்லாமல்போனது. அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் போனது. எல்லா இடங்களிலும் வரிசைகள். பொது போக்குவரத்து சேவைகள் முடங்கின. பள்ளிகள் மூடப்பட்டன. பரீட்சைகளை நடத்த முடியவில்லை. உரத் தட்டுப்பாட்டால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. எமக்கு எஞ்சியது நாடு அல்ல, ஒரு நரகம்.

இந்த நரகத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றும் சவாலை யாரும் ஏற்க விரும்பவில்லை. அந்தரே கல்லை தூக்கியது போன்று பல்வேறு காரணங்களை கூறி சவால்களை தட்டிக்கழித்தனர். சிலர் ஜாதகம் பார்த்தார்கள். மற்றவர்கள் அரசியலமைப்பு ரீதியாக நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.

இந்தப் பின்னணியில்தான் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.

அந்த நேரத்தில் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு நோயாளியை நான் ஏற்றுக்கொண்டேன். நரகமாக மாறியிருந்த ஒரு நாடு. தடம் புரண்டு நாலாபுறமும் வீழ்ந்துகிடந்த பொருளாதாரம்.

பல்வேறு தடைகள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் முறையான மற்றும் முறைமைவாய்ந்த திட்டத்தின் கீழ் நாங்கள் இரவு பகல் பாராது வேலைசெய்ய ஆரம்பித்தோம். நாட்டை நரகத்திலிருந்து காப்பாற்றுவதற்கு போராடினோம். அரச உத்தியோகத்தர்கள் அயராது உழைத்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிக்கு உதவிசெய்தனர். எங்களுடைய அனைத்து நட்பு நாடுகளும் தங்களால் இயன்றவரை எங்களை கவனித்துக்கொண்டன. நிவாரணங்களை வழங்கின.

அப்போது, விரிவான சீர்திருத்தத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், பொருளாதாரத் துயரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றவும் கடுமையாகப் பாடுபடுவேன் என்று உங்கள் அனைவருக்கும் பகிரங்கமாகக் கூறினேன். இந்த முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் பங்களிப்புச்செய்தது நான் மட்டுமல்ல. அதற்காக இந்நாட்டு மக்கள் கடுமையாக உழைத்தனர். அதற்காக அர்ப்பணித்தனர். அவ்வாறு செய்யாமல் நாட்டை பின்னுக்கு தள்ளுவதற்கு முயன்றவர்களும் இருந்தனர். ஆனால் தற்போது அவர்களின் எதிர்பார்ப்புகளை தகர்த்து நாட்டில் ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை தற்போது மீண்டும் சீரான பாதைக்கு எம்மால் கொண்டு வர முடிந்துள்ளது. அதற்காக ஏற்றுமதி கட்டுப்பாடுகள் போன்ற பல தற்காலிக நடவடிக்கைகளை எடுத்தோம். ஆனால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.

இப்போது நாங்கள் நீண்ட கால மற்றும் நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரமாகும். அப்போதுதான் தடம் புரண்ட பொருளாதாரம் மீண்டும் சீரான பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும். அப்போதுதான் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்ட பொருளாதாரத்தை முழுமையாக குணமடையச் செய்ய முடியும்.

இது எளிதான பணி அல்ல. ஆனால் நம்மால் அதனைச் செய்ய முடியும். நாம் செல்லும் பாதையில் மென்மேலும் புதிய எண்ணக் கருத்துக்களால் போசிக்கப்பட்டு தொடர்ந்து சென்றால் இந்த சவாலை நம்மால் வெற்றிகொள்ள முடியும்.

சமநிலைவாழ்வு என்ற கருத்திற்கு அப்பால் சென்று அரசியல் ஆதாயம் அடையக்கூடிய விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தி தீர்வுகளைக் காண முயல்வது தோல்விக்குறியது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. தோல்வி அடைவேன் என்று தெரிந்தும் ஏன் அதையே மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள்?

தேவதைக் கதைகளைச் சொல்வதால் நாடு முன்னேறாது. கனவு மாளிகைகளிலிருந்து வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளால் நாடு நீண்ட காலமாக பின்னோக்கி சென்றது. அதன் இறுதி முடிவு நாடு வங்குரோத்துநிலையை அடைவதுதான் என்பது நம் கண் முன்னே உறுதி செய்யப்பட்டது. ஆனால் துரதி~;டவசமாக, நாட்டில் உள்ள சில குழுக்கள் இந்த நிலைமையை இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

அரசியல் நோக்கத்திற்காக மாயைகளை பரப்புவதை நிறுத்துமாறு நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

நமக்கு நாமே நேர்மையாக இருப்போம். அரசியலை விட நாட்டை பற்றி சிந்திப்போம். நாட்டை மேலே உயர்த்தி வைப்பதற்கு ஒன்றுபடுவோம். நாடு வலிமையான பின்னர், அரசியல் இலக்குகளை பற்றி யோசிப்போம்.
ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட இப்போது நம் நாட்டில் நிலைமை நன்றாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் நல்ல நிலையில் உள்ளது என்று நான் கூறவில்லை. அன்று இருந்ததை விட ஒப்பீட்டளவில் இன்று சிறப்பாக உள்ளது. சிரமங்களை எதிர்கொண்டு அந்த நிலையைப் பெற்றோம். அர்ப்பணிப்புகளைச் செய்து, துன்பங்களை எதிர்கொண்டு அந்த நிலையை அடைந்தோம்.

இந்த கடினமான பாதையில் நாம் படிப்படியாக முன்னோக்கிச் சென்றால், குறுகிய காலத்தில் நாம் ஒரு சிறந்த பொருளாதார சூழலை நிச்சயமாக உருவாக்க முடியும். நாம் செல்லும் இந்தப் பாதை சரியானது என்பதை கடந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கும்போது, 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் பெற்றோலுக்கு ஒரு மனிதனைக் கொன்ற நாடு இன்று வரிசையோ அல்லது வரையறைகளோ இல்லாமல் பெற்றோல் பெறுகிறது. எரிவாயு சிலிண்டர் ஒன்றை வாங்குவதற்கு வாரக்கணக்கில் தெருத் தெருவாக அலைந்து திரிந்த நாடு, இன்று ஒரே தொலைபேசி அழைப்பில் வீட்டுக்கு எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்கின்றது. ஒரு நாளைக்கு பத்துப் பன்னிரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்த நாடு இன்று தொடர்ச்சியாக மின்சாரத்தைப் பெற்று வருகிறது.

பல்பொருள் அங்காடிகள் முதல் மளிகைக் கடைகள் வரை விறகுக் கட்டுகளை விற்று வந்த நாடு இன்று மாற்றமடைந்துள்ளது. அதாவது நாம் சரியான பாதையில் செல்கிறோம். எங்கள் திட்டங்கள் சரியானவை. எங்கள் உபாயத்திட்டம் சரியானது. எனவே, கடினமாக இருந்தாலும், இந்த பயணத்தில் நாம் முன்னோக்கிச் செல்வோம்.

இந்தப் பயணம் இதுவரை முன்னேறியிருந்தாலும், சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. அவைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். நாங்கள் மிகவும் பணிவுடன் அந்தக் குறைகளையும் தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கு செயல்பட்டு வருகிறோம்.

தடம் புரண்ட பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் வைப்பதால் மட்டும் நாம் திருப்தியடைய முடியாது. அது மாத்திரம் நமக்கு பெரிய நிம்மதியையும் ஆறுதலையும் தரப்போவதில்லை. எங்கள் கடினமான காலம் இன்னும் முடிவடையவும் இல்லை. முழு நாடும் வெவ்வேறு வழிகளில் சிரமங்களை எதிர்கொள்கிறது.

பணவீக்க வேகத்தை ஒற்றை இலக்கத்திற்குக் கொண்டு வர முடிந்தபடியினால், அதிக பணவீக்கத்தின் அழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால் இந்த கடுமையான நெருக்கடியின் காரணமாக, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பளத்தையும் வருமானத்தையும் இன்னும் அதிகரிக்க முடியவில்லை. எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஒவ்வொரு குடும்பமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிக்கப்பட்டதால், தனிநபர்கள் மட்டுமின்றி, சிறு வியாபாரங்கள் முதல் பெரிய அளவிலான வணிகங்கள் வரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

நாட்டு மக்கள் படும் இன்னல்கள் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். நிலையான மற்றும் வளர்ச்சியடையும் பொருளாதாரத்திற்கான பயணம் அழகானதாக இல்லை. அது கடினமானது; முட்கள் கொண்டது; சவால்மிக்கது.

வங்குரோத்து அடைந்த நாட்டை மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும். இந்த இக்கட்டான காலத்தை கடந்துவிட்டால், வசதியான, அழகான சமுதாயத்தை உருவாக்க முடியும். அவ்வாறு இல்லையெனில், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கனவு மாளிகைகளைக் கட்ட முற்பட்டால், நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும்.

நாங்கள் இது வரை வந்த பயணத்தில் எனது வெற்றிக்குக் காரணம், நாம் தொடங்கிய பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டமாகும். இந்த சீர்திருத்தத் திட்டம் 2022 ஆம் ஆண்டைப் போல் பொருளாதார நரகத்தில் விழாமல் முன்னேறுவதற்கு இந்த மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டம் அடித்தளம் அமைத்துள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் மின் உற்பத்திக்காக அரசு செலவழிக்கும் தொகைக்கு ஏற்றவாறு மின்கட்டணத்தை திருத்தும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால், மின்சார சபைக்கு கடும் நட்டம் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டு வரை இந்த நட்டங்களை ஈடுசெய்வதற்கு இரண்டு அரச வங்கிகளிலிருந்து நிதியைப் பெற்றுக்கொண்டது. மேலும், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நட்டமடைந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டமும் இரண்டு அரச வங்கிகளின் நிதியால் ஈடுசெய்யப்பட்டது. இந்த நிலைமை எவ்வளவு தூரம் தீவிரமடைந்துள்ளதென்றால், தற்போது இரண்டு அரச வங்கிகளின் ஐந்தொகைகளும் பலவீனமான நிலைக்குச் சென்றுள்ளன. இந்த இரண்டு வங்கிகளையும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நிதியை செலவழிக்க வேண்டியுள்ளது. அந்த நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

அந்த நிதியை மக்களிடமிருந்து அறவிடும் வரிப் பணத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் தங்கள் நட்டத்தை ஈடுசெய்வதற்கு அரச வங்கிகளிலிருந்து கடன் வாங்குகின்றன. எனவே, அரச வங்கிகள் பலவீனமாக இருக்கும்போது, வங்கிகள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நிதியை வழங்குகிறது. அந்த நிதியை சம்பாதிக்க வேண்டுமாயின், மக்கள் மீது அதிக வரிச் சுமையை சுமத்த வேண்டியேற்படுகின்றது.

சில குழுக்கள் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று அரச ஊழியர்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் கடினமான காலம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு, நாம் நாளுக்கு நாள், படிப்படியாக முன்னேற வேண்டும். இது கடினமான பயணம். ஒருபுறம் வேலை நிறுத்தங்களால் முன்னேற்றம் தடைப்படுகிறது. மறுபுறம், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

சம்பள உயர்வு பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். நினைத்தவாறு சம்பள உயர்வை வழங்க முடியாது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசின் வரி வருவாயில் 35 சதவீதம் செலவிடப்படுகிறது. மேலும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால், அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும்.

அரசாங்க வருவாயை அதிகரிக்காமலும் தேவைப்பட்டால் சம்பளத்தை அதிகரிக்கலாம். அது எப்படி? ஒன்றில் நீங்கள் பணத்தை அச்சிடல் வேண்டும் அல்லது வெளிநாட்டிலிருந்து கடன் பெற வேண்டும். அப்படி இல்லையென்றால் புதிதாக வரி விதிக்க வேண்டும். அந்த நடைமுறை சமநிலைவாழ்வு எண்ணக்கருவுக்கு எதிரானது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டை மீண்டும் பாதாளத்தில் தள்ளும்.

மின்சார சபை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பாரிய தொகையை செலவழிக்கிறது. இதன் விளைவாக, பெரிய அளவிலான, குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை பிரதான மின்கட்டமைப்பில் சேர்ப்பதற்குத் தேவையான சட்டரீதியான தடைகள் அனைத்தையும் நாம் அகற்றியுள்ளோம். வினைத்திறனற்ற மின்சார சபையை வினைத்திறன்மிக்க நிறுவனமாக அதனை மீள்கட்டமைப்புச் செய்வதற்கான சட்டவிதிகள் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. திறமையாக மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாக மாற்றங்களைச் செய்த பின்னர், மக்களின் மின் கட்டணம் தற்போது இருப்பதிலும் பார்க்க மிதமானதாக இருக்கும்.

சில அரசியல் குழுக்கள் மின்சார சபையை வினைத்திறன்மிக்க நிறுவனமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எப்படியாவது மின்கட்டணத்தைக் குறைக்குமாறு அவர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட காரியத்தில் என்ன நிகழ்கிறது என்றால், நாம் மீண்டும் அந்த தீய சுழற்சிக்கு பலியாகிவிடுகிறோம். அது சமநிலைவாழ்வு என்ற எண்ணக்கருவை நிராகரிப்பதாகும்.

அரச வரிகளை உயர்த்துவது குறித்தும் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. நாம் ஏன் வரியை உயர்த்த வேண்டி ஏற்பட்டது? வரிக் கட்டமைப்புகள் மாற்றங்கள் மற்றும் வரி சீர்திருத்தங்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டன. இதன் காரணமாக அரசிறைத் துறை நலிவடைந்தது. அதை மீண்டும் வலுவாக வைத்திருப்பதற்கு, கட்டாயமாக வரி அமைப்பில் கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருந்தது.

அரச துறையினரின் சம்பளத்தை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் 93 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

அஸ்வெசும, மருந்துகள் மற்றும் ஓய்வூதியம் போன்ற பொது மக்கள் நலன்புரிக்காக ரூபா 70 பில்லியன் செலவிடப்படுகிறது. அதேநேரம், ரூபா 220 பில்லியன் கடன் வட்டி கொடுப்பனவுகளுக்காக செலவிடப்படுகின்றது. இந்த விடயங்களுக்கு மாத்திரம் செலவாகின்ற மாதாந்த அரசாங்க செலவினம் ரூபா 383 பில்லியன் ஆகும். 2023 இன் முதல் 9 மாதங்களில், எங்கள் மாத வரி வருவாய் 215 பில்லியன் ஆகும். ரூபா 168 பில்லியன் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறையை நிரப்புவதற்கு, மேலும் கடன் வாங்க வேண்டியுள்ளது.

இதுவரை நிலுவைத் தொகையை செலுத்தியது எவ்வாறு? வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக் கொள்கிறோம். இலங்கை வங்கிகளில் இருந்து மேலதிகப் பற்றுகளைப் பெறுகிறோம். இந்த இரண்டு முறைகளிலும் நிலுவைத் தொகையை கட்ட முடியாதபோது, பணத்தை அச்சிடுகிறோம்.

வெளிநாட்டு கடன்களை மீள்கட்டமைப்புச் செய்யும் வரை வெளிநாட்டு நிதி மற்றும் வெளிநாட்டு கடன்களை வரையறுக்கப்பட்ட அளவிலேயே பெற்றுக் கொள்ள முடியும். 2021 இல் 900 பில்லியன் ரூபாய் வங்கி மேலதிகப் பற்று பெறப்பட்டது. இப்போது வங்கி மேலதிகப் பற்றைப் பெறுவது ரூபா 70 பில்லியன் வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி பணத்தை அச்சிட முடியாது. இதன் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% இலிருந்து 15% ஆக அரசாங்க வருவாயை அதிகரிக்காவிட்டால், நாம் மீண்டும் பொருளாதார நரகத்தில் விழுவோம். வரி விலக்கு செய்யப்பட்டால், மற்றொரு வழியில் நிரப்புதல் செய்யப்பட வேண்டும். சில குழுக்கள் கூறுவது போல், எளிய – அழகான வாக்குறுதிகள் மூலம் இந்தப் பிரச்சினை தீராது.

இந்த ஆண்டு நாம் இலக்கு வைத்துள்ள அரச வருமானம் ரூபா 3415 பில்லியன் ஆகும். இதுவரை நாம் ஈட்டிய வருமானம் ரூபா 2410 பில்லியன். அதாவது இலக்கு வைக்கப்பட்ட வருமானத்தை ஈட்டத் தவறிவிட்டோம். இந்த உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசின் இலக்கு வருமானத்தை ஈட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில், அதிக வருமானம் உள்ளவர்களிடம் புதிய வரிக் கோப்பைப் பதிவு செய்யும்படி கேட்டிருந்தோம். ஆனால் பெரும்பாலானவர்கள் அவ்வாறு செய்யவில்லை. வரிக் கோப்பினைத் திறந்த பின்னர், இல்லாத பிரச்னைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்ற நம்பிக்கைதான் இதற்கு அடிப்படைக் காரணம். அது உண்மைதான். வரி விதிப்பில் தேவையற்ற சிக்கல்கள் உள்ளன. சில அதிகாரிகளின் தேவையற்ற செல்வாக்கிற்கு அடிபணிய வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. வரி செலுத்துவது ஒரு தலைவலியை ஏற்படுத்துகின்ற அளவிற்கு சில கட்டண முறைகள் மிகவும் சிக்கலானவை,

நமது வரி அமைப்பில் உள்ள இது போன்ற பல கடுமையான குறைபாடுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். தற்போது மொத்த வரிச்சுமை சமூகத்தின் வரையறுக்கப்பட்ட சில பிரிவுகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. வருவாய் சேகரிப்பு அமைப்புகளில் நீண்டகாலமாக இருந்துவருகின்ற பலவீனங்கள் மற்றும் கவனிக்காததன் காரணமாக வரி புறக்கணிப்பு ஏற்படுகிறது.

இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பல முன்மொழிவுகளை இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாங்கள் சேர்த்துள்ளோம். இந்த முன்மொழிவுகளை ஒரே இரவில் செயல்படுத்த முடியாது. அவை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். அந்த முன்மொழிவுகள் மூலம் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும் போது, இன்றைய காலத்தை விட அதிக வரிச்சலுகைகளை வழங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

அரச செலவினத்தைக் குறைப்பதன் மூலம் மக்களின் வரிச்சுமையைக் குறைக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் ஆனால் அரச செலவினங்களில் கூடுதலான சதவீதம் அதாவது 35 சதவீதம் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகிறது. தற்போது அரச பணியாளர்களின் எண்ணிக்கை 1.3 மில்லியனாக உள்ளது. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அவர்களை வேலையிலிருந்து நீக்க முடியாது. அப்படிச் செய்வது மிகப்பெரிய சமூக நெருக்கடியை உருவாக்கும். எனவே, இந்த பிரச்சனைகளை நாம் மிகவும் கவனமாகவும், உணர்வுபூர்வமாகவும் எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால் அரசின் வீண் செலவுகளை குறைக்க வேண்டும். அரச நிறுவனங்களில் எவ்வளவு பணம் வீணாகிறது? எவ்வளவு கால விரயம் ஏற்படுகின்றது? இவற்றையும் நாம் தவிர்க்க வேண்டும். ஒரு சாதாரண குடிமகன் அரச நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும்போது எவ்வளவு நேரமும், உழைப்பும், பணமும் விரயமாகிறது? இங்கே நாம் இந்த குறைபாடுகளையும் தவறுகளையும் திருத்திக்கொள்ள வேண்டும்.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களால் நாட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்களின் இழப்பை மக்கள் முழுமையாக தாங்கிக் கொள்கின்றனர். தேசிய வளங்கள் என்று கூறிக்கொண்டு மக்கள் மீது தமது சுமையை தொடர்ந்து சுமத்தும் அரசியல் குழுக்கள் நாட்டை பின்னுக்கு இழுக்கின்றன.

மேலும் ஊழலும் மோசடியும் நாடு முழுவதும் புற்று நோயாக பரவியுள்ளது. நாட்டின் செல்வங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் சட்டங்களை இப்போது சமர்ப்பித்துள்ளோம். நாட்டின் செல்வம் மற்றும் வளங்களை திருடுவதாக பல்வேறு மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆனால் நாட்டின் செல்வங்களையும் வளங்களையும் கொள்ளையடித்தவர்களைப் போலவே நாட்டின் எதிர்காலத்தையும் திருடியவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

சில அரசியல் குழுக்கள் வெற்றிகரமான வணிகங்களை மக்கள் மயமாக்கி நாட்டின் எதிர்காலத்தைத் திருடியுள்ளனர்.

திருகோணமலையில் எண்ணெய் தாங்கிகள் போன்ற வீணாகும் இடங்களை வேறு நாடுகளுக்கு குத்தகைக்கு விடுவதை எதிர்த்ததோடு நாட்டின் எதிர்காலத்தையும் திருடினார்கள். இன்னும் சிலர் ஆடைத் தொழிலை எதிர்த்து நாட்டின் எதிர்காலத்தைத் திருடினார்கள். துறைமுகங்களின் அபிவிருத்தியை எதிர்ப்பதன் மூலம் எதிர்காலம் திருடப்பட்டது. இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த மக்கள் செய்வதும் களவுதான்.

அனைத்து அபிவிருத்திக் கருத்திட்டங்களையும் எதிர்க்கும் அரசியல் குழுக்கள் திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை அபிவிருத்தி செய்ய அனுமதிக்கவில்லை. அந்த எண்ணெய் தாங்கிகள் துருப்பிடிக்க இடமளிக்கப்பட்டதைப் போன்று நுவரெலியா தபால் நிலையமும் இடிந்து விழுவதை அவர்கள் விரும்புகின்றனர்.

நுவரெலியா தபால் நிலையம் சுற்றுலாத் துறைக்காக ஒதுக்கப்பட்டமை ஒரு தனிச் சம்பவம் அல்ல. நுவரெலியா அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்காலத்தில் நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் எதிர்பார்ப்பும் எங்களிடம் இருக்கின்றது. நுவரெலியாவில் இன்னும் பல பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் நுவரெலியாவின் சூழலையும் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களையும் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்றன.

காலி கோட்டையில் உள்ள பழைய தபால் நிலைய கட்டிடத்திற்கும் இந்த மக்கள் இதனையே செய்தனர். தற்போது அந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. சரியான நேரத்தில் அந்தக் கட்டிடம் சுற்றுலாத் துறைக்காக ஒதுக்கப்பட்டிருந்தால், அந்த வரலாற்றுக் கட்டிடம் நமக்கும் உண்டு. அந்நியச் செலாவணியும் கிடைக்கும்.

பொருளாதார ஆய்வாளர் சுசந்த ஆரியரத்ன அண்மையில் முகநூலில் வெளியிட்ட பதிவை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

“அரச வளங்களை பாதுகாப்பதற்கான சூத்திரம் அரச வளங்களுக்கு கைவைக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்வதல்ல. அந்த வளங்களிலிருந்து அதிக பயனைப் பெற்றுக் கொள்வதாகும். அப்போது அவை யாருக்கும் பாரமாக இருக்க மாட்டாது.”

இதுவரை காலமும் அரச வளங்களைப் பாதுகாப்போம் என்ற கோஷத்தின் கீழ் செயற்பட்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாததாகும். அவற்றை நாடு தாங்க முடியாத அளவுக்கு சுமையாக மாற்றியமையாகும்.

சிந்தித்துப் பாருங்கள். இதுவரை நம் நாட்டில் செயல்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார கருத்துக்கள் தோல்வியடைந்து விட்டன. தயவுசெய்து அவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஊங்களுடைய அண்டை வீட்டாருக்கும் அதை புரியவையுங்கள். நாம் புதிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை உருவாக்கவில்லை என்றால், இங்கிருந்து முன்னோக்கி செல்ல வழியில்லை.

நாட்டில் இதுவரை காணப்பட்ட அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதார அமைப்பு முற்றிலும் தலைகீழாக மாற வேண்டும். கடந்த வரவுசெலவத் திட்டத்திலும் அதைத்தான் சுட்டிக் காட்டினேன். ‘மாரா சாத்‘ நாடகத்தில் சுகதபால டி சில்வா சொல்வது போல் – தலையணை உறையைப் போல் தலைகீழாகப் புரட்டி புதுக்கண்ணால் பார்க்க வேண்டும்.

கடந்த காலத்திலிருந்து நம் நாட்டில் வேரூன்றியிருந்த சமூக ஒருமித்த கருத்து, எல்லாவற்றையும் அரசாங்கமே செய்ய வேண்டும் என்பதாகும். அதனால்தான், தனியார் தொழில்களை முடக்கி, அந்தத் தொழில்களைக் கையகப்படுத்தி அனைத்து தொழில் முனைவோர் நடவடிக்கைகளிலும் அரச தலையிட்டது. ஆனால் சமூக உடன்பாடு தோல்வியடைந்த, காலாவதியான ஒன்று என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த கால அனுபவங்கள், உலகளாவிய போக்குகள் மற்றும் எதிர்கால சவால்கள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு நமக்கென்று ஒரு தனித்துவமான பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும். புதிய சமூக கருத்தொற்றுமை உருவாக்கப்பட வேண்டும்.

இந்த புதிய முறைக்கு அடித்தளமிட்டதன் மூலம், கடந்த ஆண்டில் நாம் பின்பற்றிய சரியான நடைமுறைகள் மற்றும் முறைகள் காரணமாக பொருளாதாரம் மீண்டு வருகிறது. இப்போது தட்டுப்பாடு இல்லாமல் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 30% ஆக உயர்ந்திருந்த வட்டி விகிதங்கள் இப்போது 15% ஆகக் குறைந்துள்ளன. மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. 2021 இல் நமது முதன்மை வரவுசெலவுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக இருந்தது. 2023 இன் முதல் பாதியில் முதன்மை வரவுசெலவுத் திட்ட மிகையை உருவாக்க முடிந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் வரி வருவாயை 50 வீதத்தால் அதிகரிக்க முடிந்தது. 2022 செப்டம்பரில் 70 சதவீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம், கடந்த செப்டம்பரில் 1.38 சதவீதமாகக் குறைந்துள்ளது. பூச்சியமாக சரிந்த அந்நியச் செலாவணி கையிருப்பு, டொலர் 3.5 பில்லியன்களாக உயர்ந்தது. வெளிநாடுகளின் நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டிற்காக நேர்மையான நோக்கத்துடன் செய்த தியாகங்களினாலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு அவர்கள் வழங்கிய தைரியத்தின் காரணமாகவும் கடந்த வருடத்தில் நாம் அபிவிருத்தி முன்னேற்றத்தை அடைய முடிந்தது. இந்த சிரமங்களைப் போக்குவதற்குத் தேவையான பின்னணியை அரசு முறையாக வழங்கி வருகிறது. நமது பொருளாதாரம் மீண்டு வரும்போது, நமது பொருளாதாரம் உறுதியானதாகும் போது, மக்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

2022 இல் மீண்டும் அதே நரகத்தில் நம் நாடு விழுவதை அனுமதிக்க முடியாது. அந்த நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு வந்து தமது அரசியல் இலக்குகளை நிறைவேற்ற சில குழுக்கள் இரவு பகலாக முயற்சித்து வருகின்றன.

ஆனால் எங்களுக்கு அரசியல் இலக்குகள் இல்லை. நாட்டை உயர்த்துவது மட்டுமே எங்களின் ஒரே நோக்கமாகும்.

சிலர் இந்த வரவுசெலவுத் திட்டத்தை தேர்தல் வரவுசெலவுத் திட்டம் என்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் இவ்வாறு அழைக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முடிவில்லாத சலுகைகளையும் சம்பள அதிகரிப்பையும் வழங்குவதே அத்தகைய தேர்தல் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. சுதந்திரம் அடைந்த பின்னரும் 75 வருடங்களில் பலமுறை அதுதான் நடந்தது.

ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் வித்தியாசமானது. இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவுசெலவுத்திட்டமாகும். தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப ஒரு புதிய பொருளாதார அமைப்பின் அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டம். பலமான எதிர்காலத்திற்கான முன்னுரை.

தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே எனக்கு முக்கியம். இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் வெற்றிக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும். பௌத்த பொருளாதார தத்துவத்தின்படி தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம். சமநிலைவாழ்வு என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், நாட்டுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் பல முன்மொழிவுகள் இந்த வரவுசெலவுத திட்ட ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நான் தற்போது 2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைக்கிறேன்.

1. அரச ஊழியர்களின் சம்பளம்
அரச ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் பின்னர் சம்பள அதிகரிப்புக் கிடைக்கவில்லை. இதனால் அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் சமநிலை பாதிக்கப்படாத நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நான் முன்மொழிகின்றேன்.

தற்பொழுது அரச ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 1.3 மில்லியன் (1,300,000) ஆகும். அவர்களது குடும்ப அங்கத்தவர்ளது மொத்த எண்ணிக்கை 5 மில்லியனுக்கு அதிகமாகும். இந்த அரச ஊழியர்களுக்கு தற்பொழுது கிடைப்பது ரூபா 7,800 மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மாத்திரமாகும். நாம் 2024 ஜனவரி முதல் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவினை ரூபா 17,800 வரை அதிகரிப்போம்.

திறைசேரிக்கு குறித்த வருடத்திற்குரிய வருமானம் கிடைக்க ஆரம்பிப்பது பெப்ரவரி, மார்ச் மாதங்களின் போதாகும்.

எனவே, இக்கொடுப்பனவு அதிகரிப்பினை மாதாந்த சம்பளத்திற்கு சேர்த்துக்கொள்வது ஏப்ரல் மாதத்திலிருந்தாகும்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான நிலுவைத் தொகையினை ஒக்தோபர் மாதத்திலிருந்து தவணை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

2. ஓய்வூதியம்
அரச ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 730,000 ஆகும். அவர்களுக்கு தற்போது கிடைப்பது ரூபா 3,525 மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாகும். அரச ஓய்வூதியதாரர்களின் மாதாந்த வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவை ரூபா 6,025 வரை அதிகரிப்போம். இந்த அதிகரிப்பு 2024 ஏப்ரல் மாதம் முதல் அமுல்படுத்தப்படும். 2024 ஆண்டில் ரூபா 386 பில்லியன் ஓய்வூதியத்திற்காக செலவு செய்யப்படும்.

3. விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம்
விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியமானது, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பாகும். இதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபா 65 பில்லியன் செலவு செய்கிறது.

ஊழியர்களிடமிருந்து இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூபா 38 பில்லியன் அறவிடப்படுகிறது. எனவே, அரசதுறை ஊழியர்களின் பங்களிப்பு, இதனை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை. எனவே இவ் ஓய்வூதியப் பங்களிப்பிற்காக அறவிடப்படும் சதவீதத்தை 2024 ஏப்ரல் முதல் அனைத்து சேவைப் பிரிவினருக்கும் 8 சதவீதமாக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகிறேன். இச்சரிசெய்தல் மூலம்; ஆண்டுதோறும் ரூபா 09 பில்லியனை மேலதிகமாக அறவிடுவதற்கு முடிவதுடன் இது விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துவதையும் உறுதிப்படுத்துகிறது.

4. உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவு
பொலிஸ் சேவை அலுவலர்கள் தூர இடங்களுக்கு கடமைக்காக சென்று வருகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் பிரயாணக் கொடுப்பனவு நடைமுறைக்கு உகந்ததாக இல்லை. எனவே, தற்போது செயற்படுத்தப்படும் குறித்த கொடுப்பனவிற்குப் பதிலாக மூன்று பொலிஸ் அலுவலர் குழுக்களுக்கு பொருத்தமான சீராக்கத்துடன் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பவினை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

5. இடர் கடன் வசதி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அரச செலவினங்களை கவனமாக முகாமை செய்யும் முகமாக நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டன. இச்செயன்முறை மூலம், அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் எதிர்பாராத மற்றும் அவசர நிலமைகளின் போது வழங்கப்படும் இடர் கடனுக்கான தகைமை சில வரையறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. எனவே, 2024 ஜனவரி 01 முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் கடந்த ஆண்டுகளைப் போலவே இடர் கடன் வசதியை வழங்க நான் முன்மொழிகிறேன்.

6. சேவையினை உறுதிப்படுத்தல்
பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் வேறுபட்ட தற்காலிக திட்டங்களின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பல ஊழியர்களது சேவை இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை. 180 நாட்களுக்கு அதிக காலம் சேவை புரிந்த அத்தகைய அமைய ஊழியர்களை அரசாங்கத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

7. அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டம்
அஸ்வெசும நிவாரணம் வழங்கும் திட்டத்தினை நாம் ஆரம்பித்தது உலக வங்கி உள்ளிட்ட அபிவிருத்தி பங்காளர்களின் ஒத்துழைப்பினால் ஆகும். ஆயினும், அடுத்த வருடத்தில் எமது மக்களுக்கு நிவாரணம் வழங்குவது எமது பணத்தினால் ஆகும். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்காக முன்னைய வருடங்களில் ரூபா 60 பில்லியன் செலவிடப்பட்டது. அது இப்பொழுது ரூபா 250 பில்லியன் வரை உயர்ந்துள்ளது. சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்காக முன்னைய வருடங்களில் செலவிட்டதனைப் போன்று மூன்று மடங்கு 2024 ஆம் வருடத்தில் அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்திற்காக செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 மில்லியன் பயனாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்படுவது நியாமமான தெரிவு அளவுகோல்களின் அடிப்படையிலாகும். புதியதொரு நிகழ்ச்சித்திட்டத்திற்கு மாறுகின்றபோது ஏற்படுகின்ற செயற்படுத்தத் தாமதங்களினை நிவர்த்தி செய்து வருகின்றோம். அநீதி இழைக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் வழங்குவதற்கான செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. நன்மைகளை பெறுவதற்கு தாமதமாகி தகைமைபெற்ற பயனாளர்களுக்கு ஆரம்பத்திலிருந்து பயன்வலுப்பெறும் வகையில் கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூர்த்தி அலுவலர்களின் அனுபவம் மற்றும் அறிவு எமது அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் சுமார் 150,000 பேருக்கு ரூபா 5,000 மாதாந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இக்கொடுப்பனவை ரூபா 7,500 வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இது 50 சதவீத அதிகரிப்பொன்றாகும். அதேபோல், முதியோர்களுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு ரூபா 2,000 ஆனது ரூபா 3,000 வரை உயர்த்தப்படும். இத்திட்டத்தினால் 600,000 பேர் பயனடைவர்.

காத்திருப்போர் பட்டியலில் இருப்போரும் ஏற்கனவே நிதி உதவி பெறும் பயனாளிகளும் 2024 ஆம் ஆண்டு முதல் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுவர். இதற்காக ரூபா 142 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

சில குடும்பங்கள் எதிர்பாராத அனர்த்தங்களுக்கு உட்படுகின்றனர். குடும்பத்தில் வருமானம் உழைப்பவர் மரணமடைகின்றார். விபத்துக்குள்ளாகின்றனர். தொழில் வாய்ப்பை இழக்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் முழுக் குடும்பமும் அனாதரவாகின்றது. இவ்வாறான குடும்பங்களுக்கு நடைமுறையிலுள்ள திட்டத்திற்கு அமைவாக அஸ்வெசும நன்மையினை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் நாம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அஸ்வெசும பயனாளர்களை மீளாய்வுக்கு உட்படுத்துவோம். புதிய குடும்பங்களை எவ்வித தாமதமின்றி பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை அடுத்த வருடத்தில் ரூபா 205 பில்லியன் வரை அதிகரிக்கப்படும்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ரூபா 4,500 மாதாந்த தொகை வழங்கும் முறைமையில் அதிகளவு குறைபாடும் பலவீனங்களும் எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது. இக்குறைபாடுகளை நீக்கி இந்நிகழ்ச்சித்திட்டத்தினை மிகவும் ஒழுங்குபடுத்துவதற்கு ரூபா 10 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

8. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள்
பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தன. அண்மையில் இடம்பெற்ற ஆய்வொன்றில் இவ்வாறான தொழில்முயற்சிகளில் 20 சதவீதமானவை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை தெரியவந்தது. அதேபோன்று தற்பொழுது தொழிற்படுகின்ற தொழில்முயற்சிகளின் செயலாற்றுகை வீழ்ச்சியடைந்தமையும் ஆய்வு மூலம் வெளிப்படுத்தப்பட்டது. உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தினை மீண்டும் மீண்டும் துரிதப்படுத்துவதற்கு எமக்கு அவசியமாகும். எனவே, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு மேலும் சக்தியினையும் தைரியத்தையும் வசதிகளையும் வழங்குவதற்கு முடியும். இந்நோக்கத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ரூபா 30 பில்லியனை சலுகைக் கடன் வசதி அடிப்படையில் நாம் அறிமுகப்படுத்துவோம்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு பெரும் உத்வேகத்தை வழங்கும் முதல் சந்தர்ப்பமாகும். சலுகைக் கடன் வசதிகளுக்கு மேலதிகமாக பெரிய நிறுவனங்களின் மதிப்புச் சங்கிலிகளுடன் தொடர்புடைய தொழில்துறை செங்குத்துகளுடன் இணைக்கும் நடவடிக்கைகளால் நிதியுதவி திட்டங்கள் பூர்த்திசெய்யப்படும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வலுப்படுத்துவதற்காக ரூபா 20 பில்லியனை ஒதுக்கீடுசெய்யப்படும்.

இதற்கமைவாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்படும் மொத்த ஏற்பாடு ரூபா ஐம்பது பில்லியனாகும். இதனால் ரூபா 250 பில்லியன் பெறுமதியான நிதி இடைவெளியொன்று ஏற்படும்.

9. காணி உரித்து நிகழ்ச்சித்திட்டம்
1897 இல் இலங்கை தரிசு நிலக் கட்டளைச்சட்டம் சட்டமாக்கப்பட்டது. அதன்கீழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் கிராமிய காணிகள் பிரித்தானிய அரசினால் கையகப்படுத்தப்பட்டன. அதன் பின்னர் இலங்கையின் விவசாயிகளுக்கு 1935 இன் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின்கீழ் பல்வேறு அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில் காணித்துண்டுகள் வழங்கப்பட்டன. எவ்வாறாயினும், நூறு வருட காலம் கடந்தும் இந்த விவசாயிகளுக்கு காணிகளின் முழுமையான உரித்துரிமையினை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. தேவையான சட்ட ரீதியான செயன்முறைகளைப்பின்பற்றி இவ்வாறான அனுமதிப்பத்திரங்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு எவ்வித தடையுமற்ற உறுதிகளை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். இந்த வேலைத்திட்டமானது ஒரு வருடத்திற்குள் நிறைவுசெய்யப்பட முடியாததாயினும் 2024 இது ஆரம்பிக்கப்படும். இதன் மூலம் இருபது இலட்சம் (2,000,000) குடும்பங்களுக்கு காணிபூமி மற்றும் விவசாய நிலங்கள் பெற்றுக்கொடுக்கப்படும். இதற்காக ரூபா 2 பில்லியனை ஒதுக்கீடு செய்யப்படும்.

10. நகர வீட்டு உரித்துரிமை
பல்வேறு நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் கடந்த காலத்தில் ரூபா 3,000 மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், குறைந்த வருமானமுடைய நகர வீட்டு உடமையாளர்களுக்கு மாதாந்த வாடகைக் கட்டணத்தினை முழுவதுமாக விலக்களிப்பதற்கும் வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு முழு உரிமைகளையும் வழங்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன். இத்திட்டத்தின்கீழ் நகரத்திலுள்ள வறியவர்களுக்கு வீடுகளின் உரித்தினை வழங்குவதன் மூலம் 2024 இல் 50,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நான் விரும்புகின்றேன். இந் நோக்கத்திற்காக ரூபா 3 பில்லியனை வரவு செலவுத்திட்ட ஏற்;பாடாக ஒதுக்கீடுசெய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

மேற்படி காணி மற்றும் வீட்டினது உரித்து மக்களுக்கு வழங்கப்படும் நிகழ்ச்சித்திட்டம் முழுமையாக செயற்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்படும் பொழுது இந்நாட்டு மக்களில் 70 சதவீதமானவர்கள் காணி மற்றும் வீட்டு உரிமையாளர்களாக மாறுவர்.

11. பெருந்தோட்ட வீடமைப்பு
பெருந்தோட்டப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் வீட்டு உரிமை பெறாதவர்களாவர். எனவே, அவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு காணி உரித்தினை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். இதன் ஆரம்ப கட்டமாக ரூபா 4 பில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

12. பிம்சவிய
1998 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 12 மில்லியன் காணித்துண்டுகள் மத்தியில் தற்போது வரை ஒரு மில்லியன் காணித்துண்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சித்திட்டத்தினை விரைவுபடுத்தும் பொருட்டு தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக ரூபா 600 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

13. பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டம்
நாட்டிலுள்ள கஷ்டமான சூழ்நிலை மற்றும் கடந்த காலத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான நிதி பற்றாக்குறை காரணமாக பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாதுபோனது. இந்த நிகழ்ச்சித்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் பிரதிநிதிகள் கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் போனது.

பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தினை நாம் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளோம். இதற்காக ரூபா 11 பில்லியன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஊடாக வழங்கப்படும். இந்த நிகழ்;ச்சித்திட்டமானது தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேற்பார்வையின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

14. “கந்துரட தஷகய” ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்.
மலைநாட்டில் கிடைக்கக்கூடிய பொது உட்கட்டமைப்பு மற்றும் சேவைகள் பல்வேறு காரணங்களினால் வளங்களின் பகிர்வில் முரண்பாடுகள் காணப்படுவதனால் ஒப்பீட்டு ரீதியில் இப்பிரதேசம் அபிவிருத்தி குன்றிக் காணப்படுகின்றது. இந்த முரண் நிலைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் பிரதிபலிக்கின்றது. மலைநாட்டில் கிராமிய அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை அரசாங்கம் உணர்ந்துள்ளது. சப்பிரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் அதேபோன்று பதுளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை உள்ளடக்கிய மலைநாட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளக்கியதாக 10 வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமுதாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றினை 2024 வருடத்திலிருந்து செயற்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இந்நோக்கத்திற்காக 2024 ஆம் வருடத்திற்கு ரூபா 10 பில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றேன்.

15. அபிவிருத்திக் கருத்திட்ட முன்மொழிவுகளை அங்கீகரித்தல்
அரசாங்கத்தினால் அனுபவித்துவரும் குறிப்பிடத்தக்க அரசிறைக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோரின் பணத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் பொருளாதார மற்றும் சமூக வருவாயின் அடிப்படையில் பணத்திற்கான உகந்த மதிப்பை வழங்குவதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.

இந்தப் புதிய பொறிமுறையின் கீழ், அரசாங்கத்தின் மூலதனச் செலவினம் பொருளாதார வளர்ச்சி மற்றும் மீட்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அரசிறை மற்றும் படுகடன் நிலைத்தன்மையின் முக்கிய அங்கமாகும். இந்த நோக்கத்திற்காக 2024 இல் வரவு செலவுத் திட்ட மூலதனச் செலவின ஒதுக்கீட்டை ரூபா 1,260 பில்லியன் வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகிறேன். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்திற்கு சமமானதாகும்.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள மூலதனக் கருத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கும், இந்த வரவு செலவுத் திட்ட உரையில் என்னால் முன்வைக்கப்பட்டுள்ள மூலதனச் செலவுக் கருத்திட்டங்களுக்கும் தேவையான ஏற்பாடுகளுக்காக ரூபா 55 பில்லியன் ஒதுக்கப்படும்.

இந்த தொகையினை நாம் பெற்றுக்கொள்வது திறைசேரியின் பல்வேறு செலவினத் தலைப்புகளுக்கு ரூபா 55 பில்லியன் மீண்டெழும் செலவினத்தினை மாற்றுவதன் மூலமாகும். அப்பொழுது அடுத்த வருடத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாம் பயன்படுத்தும் மீண்டெழும் செலவு ரூபா 1260 பில்லியனாகும்.

அதேபோன்று வெளிநாட்டு கடன் மற்றும் உதவியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கருத்திட்டங்கள் பல இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் அவற்றினை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கும்.

எனவே, 2024 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு நிரல் அமைச்சிலும் ஒரு விசேட அலகைத் தாபிப்பதற்கும் நிரந்தரப் பணியாளர்களின் பணி விவரங்களுக்கு கருத்திட்டங்கள் தொடர்பான பணிகளை கூட்டிணைக்கவும், தேவைப்படும் போது, அரசாங்க சேவையில் நிபுணர்கள் இல்லாதபோது மாத்திரம் ஒப்பந்த அல்லது குறித்தொதுக்கல் அடிப்படையில் தேவையான மனித வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நான் முன்மொழிகிறேன். இந்த செயல்முறையின் மூலம், கருத்திட்டத்தின் இறுதி வெளியீட்டிற்கு பொறுப்புக்கூறும் அரசு அதிகாரிகளின் அணியொன்று உருவாக்கப்படும்.

16. கிராமியப் பாதை
கடந்த சில வருடங்களாக கிராமிய பாதைகளின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவத்தினை முறையாக முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படவில்லை. சிதைவடைந்து காணப்படுகின்ற அத்தகைய பாதைகளை புதுப்பிப்பதற்காக ரூபா 10 பில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

17. இயற்கை அனர்த்தம்
கடந்த சில மாதங்களாக நாம் பாதகமான காலநிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தக் காலப்பகுதியில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டில் வீதி அமைப்பு பாரியளவில் சேதமடைந்துள்ளது. எனவே அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்கு 2,000 மில்லியன் ரூபா ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

18. குடிநீர்
நாட்டின் எல்லா பாகங்களிலும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை பயன்படுத்துகின்றபொழுதும் வெளிநாட்டுக் கடன் உதவி மூலம் பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட குடிநீர் கருத்திட்டங்களுக்கு நாம் முன்னுரிமை வழங்குவோம்.

கல்வி
நவீன யுகத்திற்கு பொருத்தமான கல்வியினை அறிமுகப்படுத்துவதன் வாயிலாகவே நாட்டின் எதிர்காலத்தை நிலை நாட்ட முடியும். எமது நாட்டில் காணப்படுவது மனப்பாடம் மூலம் உருவாகும் காலங்கடந்த கல்வி முறையானது.

இம்முறைமையின் கீழ் ஆக்கத்திறன் மிக்கோரை உருவாக்க முடியாது. அதேபோன்று இலவசக் கல்வியின் பிரதிலாபம் முழுமையாக மக்களுக்கு கிடைப்பதில்லை.

ஆகையினால் நாம் முழுமையான கல்வி சீர்திருத்தத்தினை நாம் நடைமுறைப்படுத்தவுள்ளோம். இப்புதிய தேசிய கல்வி கொள்கைக் கட்டமைப்பினை தயார்படுத்துவதற்காக நாம் 25 நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்தோம். இம்முன்மொழிவுக்கு எனது தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சரவைக் குழுவொன்றின் வழிகாட்டல் மிகவும் உசிதமாகவிருந்தது. இக்கொள்கைக் கட்டமைப்பு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பின் மூலம் தாபிக்கப்படும் முக்கியமான நிறுவனங்கள் தொடர்பாக நான் இந்த சபைக்கு அறிவிப்பதற்கு விரும்புகின்றேன். அவை கல்வி தொடர்பான தேசிய உயர் பேரவை, தேசிய உயர் கல்வி ஆணைக்குழு, தேசிய திறன்விருத்தி ஆணைக்குழு என்பனவாகும். இது தொடர்பிலான விரிவான விபரங்கள் கல்வி அமைச்சர் மூலம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இச்சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

அண்மையில் அஜானா முகநூலில் பதிவிடப்பட்ட இக்குறிப்பு எமது கவனத்தை ஈர்த்தது.

“வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் எண்ணத்துடன் தேசிய பாடவிதானத்தைக்கற்ற எனது பிள்ளை நாள் கிழமை மாதம் மற்றும் ஆண்டு காலமாக பாடுபட நேர்ந்தது. சர்வதேச பாடவிதானத்தைக் கற்ற எனது பிள்ளையின் நண்பர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றனர்”.

இதுதான் உண்மையான நிலைமை. ஆகவே, நாம் உயர்தரம் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக படிப்பினை எவ்வித தாமதமின்றி பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.

19. பல்கலைக்கழக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்துதல்
நடைமுறை தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியினை கவனத்திற்கொண்டு நாம் புதிய பல்கலைக்கழகங்கள் நான்கினை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

1. சீதாவக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (இதற்கு லலித் அதுலத்முதலி பட்டப்பின் படிப்பு நிறுவனம் சேர்த்துக்கொள்ளப்படும்.)

2. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் குருணாகல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்.

3. முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

4. காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச பல்கலைக்கழகம்
அதேபோன்று கீழ்வரும் தற்பொழுது தொழிற்பட்டு வருகின்ற தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை அங்கீகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.

1. வியாபார முகாமைத்துவ தேசிய கல்லூரி
2. இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
3. ஹொரைசன் வளாகம்
4. றோயல் இன்ஸ்ரிடியூட்

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளும் பல்கலைக்கழங்களை ஆரம்பிப்பதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மாகாண சபைகளின் மூலமும் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் என நான் முன்மொழிகின்றேன்.

20. கல்விக்கான பல்கலைக்கழகம் ஒன்றைத் தாபித்தல்
தேசியக் கல்விப் பீடங்கள் 19 இனை இணைத்து கல்விப் பல்கலைக்கழகத்தை தாபிப்பது கல்வி அபிவிருத்திக்கான காலத்தின் தேவையாகும். தற்போதுள்ள கல்விப் பீடத்தில் 4 வருட கற்கைநெறியை பூர்த்திசெய்த பின்னர், தொடர்புடைய தரங்களுக்கு இணங்க இந்த புதிய பல்கலைக்கழகங்கள் மூலம் அந்த மாணவர்களுக்கு கல்வி இளமானி பட்டத்தை வழங்குவதற்கு நான் முன்மொழிகிறேன். இந்த நிகழ்ச்சித்திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு 2024 ஆம் ஆண்டிற்காக ரூபா 1 பில்லியன் வரவுசெலவுத்திட்ட ஏற்பாட்டைச் செய்வதற்கு நான் முன்மொழிகிறேன்.

21. புதிய தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம்
இந்தியாவில் சென்னை நகரில் அமைந்துள்ள சென்னை இந்திய தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் கீர்த்திமிக்க கல்வி நிறுவனமொன்றாகும். அது தொழில்நுட்பவியல் கல்வியில் அடிப்படை மற்றும் வணிக ஆராய்ச்சிகள், புத்தாக்கங்கள், தொழில்முயற்சி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பிரபல்யமாக பெயர் பெற்றதாகும். சென்னை இந்திய தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக வழிகாட்டலுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை நாம் ஆரம்பிப்போம். இதற்கு இந்தியா எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும்.

22. அரச பல்கலைக்கழகங்கள்;
புதிய சகாப்தத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டத்தை மாநில பல்கலைக்கழகங்கள் செயல்படுத்தி வருகின்றன. இது பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.

2042 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாவை இலக்காகக் கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகம் நீண்ட கால திறன் மற்றும் சேவை ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூபா 500 மில்லியன்களை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகிறேன்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு நிறுவனம் தேசிய ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு நிறுவனமாகத் தரமுயர்த்தப்படும். நடுத்தர கால வரவுசெலவுத் திட்ட வரைசட்டகத்தின் கீழ், இந்த நிறுவனத்திற்குத் தேவையான ஆய்வுகூடங்கள் மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், இந்த நோக்கத்திற்காக 2024 ஆம் ஆண்டிற்கு ரூபா 40 மில்லியன்களை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகிறேன்.

அதன் பின்னர் கொழும்பு, களனி, மொரட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்கள் மீதே எமது கவனம் செலுத்தப்படும். அதற்கான முறையான திட்டங்களை தயாரித்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

23. அரசசார்பற்ற பல்கலைக்கழகங்கள்;
அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சக்திவாய்ந்த சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளின் தொகுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, உலகிலுள்ள எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனமும் இலங்கையில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதிக்கிறோம். இதன் மூலம் உயர் தரப் பரீட்சையில் சித்தியடையும் ஒவ்வொரு மாணவனும் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்கும், வெளிநாட்டுக் மாணவர்கள் மூலம் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்குமான வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த அரசசார்பற்ற பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்கு மேலதிகமாக, வணிக வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய மாணவர் கடன் திட்டத்தை செயல்படுத்த நான் முன்மொழிகிறேன். அவர்களுக்கான தொழில்வாய்ப்புகள் கிடைத்தவுடன் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

24. தேசிய உயர் கல்வி ஆணைக்குழு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் மூன்றாம் நிலை மற்றும் வாழ்க்கைத்தொழிற்கல்வி ஆணைக்குழு இரண்டினையும் இணைத்து தேசிய உயர்கல்வி ஆணைக்குழு தாபிக்கப்படும். உயர்கல்வியினை விரிவுபடுத்தல் மற்றும் வலுப்படுத்துவதற்கு தேவையான தீரமானங்கள் எடுத்தல் போன்று ஒருங்குமுறைப்படுத்தல் அதிகாரமும் ஆணைக்குழுவிற்கு வழங்கப்படும்.

25. தேசிய திறன்விருத்தி ஆணைக்குழு
நிகழ்கால சவால்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற வகையில் தேசிய திறன்விருத்தி ஆணைக்குழு தாபிக்கப்படும். இதன்கீழ் தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய தொழிற்பயிலுனர் மற்றும் தொழில்நுட்பப்பயிற்சி அதிகாரசபை போன்ற நிறுவனங்கள் ஒன்று சேர்க்கப்படும்.

26. மாகாண சபைகளுக்கான தொழிற்கல்வி
இலங்கையில் தற்போது இயங்கிவரும் ஒன்பது மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தொழிற் கல்வி நிறுவனங்களை கையளிப்பதற்கும் மாகாண சபைகளில் தொழிற் கல்விக்கான மாகாண சபைகளை நிறுவுவதற்கும் நான் முன்மொழிகிறேன். எதிர்காலத்தில், தொழிற்கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், உரிய முறையில் மாகாண சபைகள் மூலம் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் தேவையான வழிகாட்டுதல்கள் மட்டுமே அரசாங்கத்தால் வழங்கப்படும்.

தொழில்நுட்ப தொழில் திறன்களை மேம்படுத்துவதற்கு ஒரு நிதியத்தை தாபிப்பதற்கும் தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். இந்த நோக்கத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான கலந்துரையாடல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கு மேலதிகமாக, இந்த நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கு ரூபா 450 மில்லியன்களை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகிறேன்.

27. தகவல் தொழில்நுட்ப பயிற்சி
தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புபட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் பட்டதாரிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுப்பேன். இந்த பட்டதாரிகளுக்கு ஆகக்குறைந்தது 6 மாதங்களுக்குள் பயிற்சி மற்றும் சேவை அனுபவம் வழங்கப்படும். இக்காலப்பகுதியில் அவர்களுக்கு ரூபா 45,000 மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். அதில் ரூபா 25,000 இனை அரசாங்கம் பொறுப்பேற்கும். மீதி ரூபா 20,000 குறித்த தனியார் நிறுவனத்தினால் வழங்கப்படும்.

நிர்மாணம், பராமரிப்பு சேவை, சுற்றுலாத்துறை போன்ற ஏனைய திறன்பற்றாக்குறை நிலவுகின்ற துறைகளுக்கும் இவ்வாறான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

28. இளைஞர் மற்றும் வயதுவந்தோர் கல்வி
பல்கலைக்கழக கல்விக்கு தகைமை பெறாத இளைஞர் சமூகத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுதல் வேண்டும். அதேபோன்று, அரசாங்க சேவை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற வயதுவந்தோருக்கு புதிய அறிவினை பெற்றுக்கொள்வதற்கு தேவையான பின்னணியும் தயாரித்தல் வேண்டும். இந்த நோக்கத்தை இலக்காகக்கொண்டு பயிற்சிக் கற்கைநெறிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் பௌதீக நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை மன்றக் கல்லூரிக்கு ரூபா 150 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

29. அனைவருக்கும் ஆங்கிலம்
இலங்கையில் ஆங்கில எழுத்தறிவை விரிவு படுத்துவதற்கு ஒரு தேசிய நிகழ்ச்சி திட்டத்தை விருத்தி செய்வது அவசியமாகும். 2034 ஆம் ஆண்டளவில் ஆங்கில மொழி அறிவை அனைவருக்கும் வழங்குவது இந்த நிகழ்ச்சிதிட்டத்தின் நோக்கமாகும். இது ஒரு பத்தாண்டு நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ரூபா 500 மில்லியன்களை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகிறேன்.

30. சுரக்ஷா
2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது நடைமுறையில் இல்லாத மாணவர் காப்புறுதித் திட்டத்தினை மீள அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்கு அமைவாக அனைத்து அரசாங்கப் பாடசாலைச் சிறுவர்களும் மீண்டும் இந்தக் காப்புறுதிக் காப்பீட்டினைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவர்களாவர்.

சுகாதார சேவைகள்
சுகாதார சேவையின் தரத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்பதற்கு குறைபாடுகள், பலவீனங்கள் மற்றும் நெருக்கடிகளை அடையாளம் கண்டு இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.

31. மருந்துப் பொருட்கள் கொள்வனவு வழிகாட்டல்கள்
இந்தவகையில்; மருந்துப் பொருட்கள் கொள்வனவுக்கான பிரத்தியேக வழிகாட்டல்களை வழங்கும் வகையில் விஷேட நிறுவனமொன்று தாபிக்கப்படுவதுடன், அரசாங்கத்தின் மருந்துக் கொள்வனவுச் செயன்முறை தொடர்பான விபரமான ஆய்வொன்றினை நடத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

32. மருத்துவ மற்றும் சுகாதார ஆராய்ச்சி
இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சியினை உலகின் ஏனைய பிரதேசங்களுக்கு இணையாக மருத்துவ மற்றும் சுகாதார ஆராய்ச்சியில் முதலீட்டினை அதிகரிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அதன் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கும் நவீன மருத்துவ அறிவு மற்றும் தொழில்நுட்ப தேவையினை ஈடுசெய்வதற்கு ஆய்வுகூடங்களின் ஆற்றலினை அதிகரிக்காக ரூபா 75 மில்லியனை செலவிடுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

தேசிய மருத்துவ தரப்பரிசீலனை ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துவதற்கு மூன்று வருட திட்டத்தின் கீழ் அடுத்த வருடத்திற்கு ரூபா 25 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

33. பதுளைக்கு இருதய – நுரையீரல் இயக்கமீட்பு அலகு
ஊவா மாகாணத்திலுள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் இருதய நுரையீரல் இயக்கமீட்பு வசதிகள் இல்லை. நாம் இந்தக் குறைபாட்டினை நிவர்த்தி செய்கிறோம். பதுளை போதனா வைத்தியசாலையில் இருதய நுரையீரல் புத்துயிர் பெறும் பிரிவை நிறுவுவதற்கும் அவற்றுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் ரூபா 300 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

34. மருத்துவ அலுவலர்களுக்கான பதவி உயர்வு
விசேட வைத்தியர்கள் மற்றும் தரப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பொருத்தமான வகையில் பதவி உயர்வுத் திட்டத்திற்குத் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தப்படும். விசேட வைத்தியர்களின் மேலதிக பணிக்காக தற்போது மேற்கொள்ளப்படுகின்ற கொடுப்பனவு முறைக்குப் பதிலாக கொடுப்பனவொன்றாக அந்தக் கொடுப்பனவை செய்யும் வாய்ப்புக்கள் குறித்தும் நாம் ஆராய்கின்றோம்.

35. பட்டப்பின் படிப்பு வாய்ப்பு
மருத்துவர்களின் தொழிற்துறை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் மருத்துவர்களுக்காக பட்டப்பின் படிப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு முன்மொழிவுகளை நாம் சமர்ப்பித்தோம். தற்போது அந்த வேலைத்திட்டங்கள் தொழிற்படுகின்ற பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அடுத்த வருடத்திலிருந்து களனி, ஸ்ரீ ஜவர்தனபுர மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களையும் அந்த வேலைத்திட்டத்திற்கு உள்ளடக்கப்படும்.

உள்நாட்டு மருத்துவம்
எமது உள்நாட்டு மருத்துவ முறையை வலுவூட்டுவதற்கும் பிரபல்யப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்டும்.

36. இலங்கையில் சுகாதாரம் – இலங்கையர்களினால் குணப்படுத்துதல்
பாரம்பரிய வைத்திய மருந்துப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு மருந்துகள், துணை உணவுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தாவர மூலப்பொருட்களுக்கு சர்வதேச ரீதியில் கேள்வி நிலவுகின்றது. இந்த வாய்ப்பை உரிய விதத்தில் பயன்படுத்திக்கொண்டால் மென்மேலும், சர்வதேச சந்தையை விரிவுபடுத்திக்கொள்வதற்கு எமக்கு வாய்ப்புக் கிடைக்கும். சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவு மற்றும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுதாபனம் ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் அவ்வாறான முதலீடுகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு நான் முன்மொழிகிறேன்.

சுற்றுலா பயணிகளிக்கு சுதேச மற்றும் ஆயுர்வேத நலன்களை வழங்குவதற்கும் “இலங்கையில் சுகாதாரம் – இலங்கையர்களினால் குணப்படுத்துதல்” என்ற எண்ணக்கருவுக்கு இணங்கியதாக சுற்றுலா ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் ஆகியவற்றில் சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதற்காக ரூபா 100 மில்லியன்களை ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாய மற்றும் கடற்றொழிற்றுரையினை நவீனமயப்படுத்தல்

புதிய பொருளாதாரத்தின் கீழ் விவசாயத்தினை போட்டி மட்டத்திற்கு உயர்த்துதல் வேண்டும். பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்தியினை உருவாக்கதல் வேண்டும். ஏற்றுமதியினை இலக்காகக் கொண்டு விவசாயத்தினை நவீனமயப்படுத்துதல் வேண்டும்.

விவசாய நவீனமயப்படுத்தல் கருத்திட்டம், சிறிய தோட்ட உரிமையாளர் விவசாய பங்குபற்றல் முன்னெடுப்புகள் மற்றும் பயிர் பல்வகைத்தன்மை என்பவற்றிற்காக இந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

37. விவசாய மற்றும் மீன்பிடி நவீனமயப்படுத்தல் சபை
விவசாயத்துறையினை தரமுயர்த்துவதற்கு ஒத்துழைக்கும் வகையில் மாகாண விவசாய மற்றும் கடற்றொழில் நவீனமயப்படுத்தல் சபைகள் தாபிக்கப்படும். தற்பொழுது காணப்படும் அனைத்து கமத்தொழில் சேவை நிலையங்களும் விவசாய நவீனமயமாக்களுக்கான மையங்களாக தரமுயர்த்தப்படும். இதற்காக, அரசாங்க தனியார்துறை, விவசாயிகள், விவசாய விஞ்ஞானிகள் ஆகியோரினால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டமொன்று இந்தப் பணிகளுக்காக 2023/24 பெரும்போகத்திலிருந்து செயற்படுத்தப்படும். இன் நோக்கத்திற்காக ரூபா 2,500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

இதன் நோக்கம் நெல் உற்பத்தியினை ஹெக்டயர் ஒன்றிற்கு 3.5 இலிருந்து 8 தொன் வரை அதிகரிப்பதாகும். இதன் மூலம் வரண்ட பிரதேசத்தில் நெட்செய்கை உயர்ந்த உற்பத்தித்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு செய்கை பண்ணப்படாத வயல் நிலங்கள் ஏனைய விவசாய செய்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கும்.

ஈர வலய பிரதேசங்களில் சேற்று நிலங்களில் நெற் செய்கையின் பயன்பாடானது மிகவும் குறைவானதாக காணப்படுகிறது. இந்த காணிகளில் நெற் செய்கையினை தவிர ஏனைய பயிர்களை வளர்ப்பதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. எனவே, அத்தகைய காணிகள் மிக நீண்டகாலமாக எவ்வித பயிர்ச்செய்கையுமற்ற பயனற்ற நிலங்களாக காணப்படுகின்றன. அத்தகைய காணிகளில் ஏனைய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் வகையில் தற்பொழுதுள்ள சட்டரீதியான தடைகளை நீக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

இதற்கு மேலதிகமாக பாரியளவிலான விவசாய நடவடிக்கைகளுக்காக அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மகாவலி ஏ மற்றும் பீ வலயங்களிலுள்ள ஏனைய அரச காணிகளில் 3 இலட்சம் ஏக்கர்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

38. கடற்றொழிற்துறை
கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் வசதி குறைந்த உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு முக்கியமான துறையாகும். இதற்காக, மீன்பிடி துறைமுகங்களை நிர்வகிப்பதில் தனியார் துறையுடன் இணைந்து அரசு நடவடிக்கை எடுக்கும். விரயத்தைக் குறைப்பதற்கும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் முக்கியமானதாகக் காணப்படும் நவீன சேமிப்பகம் உள்ளடங்களாக இத்துறையில் மேலதிக

முதலீடுகளைச் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் ஏறக்குறைய 35 சதவீதம் வடக்கு கடல் பிர தேசத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

இலங்கையில் மொத்த மீன் உற்பத்தியில் 29 சதவீதம் நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் நீரியியல் வளத்துறையினூடாக அடையப்பெற்றுள்ளது. இலங்கையில் மொத்தமாக ஏறக்குறைய 12,000 நிரந்தர மற்றும் தற்காலிக நீர்த்தேக்கங்கள் காணப்படுகின்றன. மொத்த நீர்த்தேக்கங்களின் பரப்பு ஏறக்குறைய 260,000 ஹெக்ரேயர்களாகும். மீன்பிடிச் சமூகத்தினை வலுப்படுத்துவதற்கும் தேசிய பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்குமாக ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும். சமூகப் பங்களிப்பினூடாக சுழற்சி நிதியொன்றின் மூலம் எதிர்காலத்தில் இந்நிகழ்ச்சித்திட்டத்தினை நிலையானதாக பேணுவதற்கு மீன்பிடிச் சமூகத்தினை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றினை தயாரிப்பதற்கு மேலும் முன்மொழியப்பட்டுள்ளது.

39. குளங்களைப் புனரமைத்தல்
நாட்டில் நீர்ப்பாசன மற்றும் விவசாயத்தில் சிறிய குளங்கள் காத்திருமானப் பங்களிப்பைச் செய்கின்றனர். இது காலநிலை மாற்ற தாக்கங்களுடன் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. துனியார்துறை மற்றும் உள்நாட்டு விவசாயிகள் அமைப்புக்களுடன் இணைந்து சிறிய குளங்களை புனரமைப்பதற்கு ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நான் முன்மொழிகிறேன்.

40. பால் உற்பத்தி
பால் உற்பத்திக் கைத்தொழிலினை வாழ்வாதார செயற்பாட்டிலிருந்து இலாபம் பெறும் கைத்தொழிலாக மாற்றும் பொருட்டு மூலதன முதலீடுகளை அதிகரிப்பதும் நடுத்தரமட்ட இலாபம் தரும் பால் உற்பத்தி அலகுகளைத் தாபிப்பதும் முக்கியமானதாகும். இந்த நோக்கத்திற்காக பால் உற்பத்தித்துறை மதிப்புச் சங்கிலியில் உள்ளவர்களின் நிதித் தேவையை எதிர்கொள்வதற்கு மேல்நிதியிடல் கடன் வழிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு நான் முன்மொழிகிறேன்.

தேசிய கால்நடை வள அபிவிருத்திச்சபைக்குச் சொந்தமான விவசாயப் பண்ணைகள் அனைத்தையும் வினைத்திறனுடன் பயன்படுத்தி தனியார்துறை பங்களிப்புடன் பால் உற்பத்தியினை 5 வருடத்திற்குள் 53 சதவீதமாக அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும். தற்பொழுது எமது தினசரி பால் உற்பத்தி 4.3 மில்லியன் லீற்றர்களாகும். இந்த கருத்திட்டம் நிறைவடைகின்ற பொழுது தினசரி பால் உற்பத்தி நாலொன்றுக்கு 20 மில்லியன் லீற்றர் வரை அதிகரிக்கும். அது ஐந்து மடங்கு அதிகரிப்பாகும்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பேவல பண்ணை மிகவும் வெற்றிகரமான பெறுபேறினை எட்டியுள்ளது. அம்பேவல பண்ணையில் நாளொன்றுக்கு 1,600 லீற்றர்களாக காணப்பட்ட தினசரி பால் உற்பத்தி தற்பொழுது 50,000 லீற்றர்களாக உயர்வடைந்துள்ளது. இதனை நாளொன்றுக்கு 75,000 லீற்றர் வரை உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

41. நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்தல்
சமீப காலங்களில் மிகவும் பின்னடைவுக்குற்பட்ட துறைகளில் ஒன்றாக நிர்மாணத் துறையை குறிப்பிடலாம். கொவிட் தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி, இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களால், நிர்மாணத் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அவற்றுக்கு நிவாரணம் வழங்குவதற்கு புதியதொரு பரிசோதனையை நடத்துவோம் என்று நம்புகிறோம்.

அரச நிறுவனங்கள் அவற்றிற்கு இலவசமாக காணிகளை வழங்குகின்றன. அந்தந்த அரச நிறுவனங்களின் திட்டப்படி அந்த காணிகளில் கட்டிடங்கள் நிர்மாணிக்க அந்நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம். நிர்மாணத்திற்குப் பின்னர், இந்த நிறுவனங்கள் மாத வாடகையை குறித்த நிறுவனத்திற்கு செலுத்துகின்றன. நிர்மாணச் செலவு மற்றும் அதற்கான இலாபத்தைப் பெற்றதன் பிறகு, கட்டிடத்தின் முழு உரிமையும் அரச நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.

இதற்கான முன்னோடி திட்டமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய கட்டிடத்தொகுதியின் நிர்மாணப் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொழும்பில் தோட்ட வீடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் நிர்மாணத் துறையின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். கொழும்பு நகரிலுள்ள தோட்டக் காணிகளில் பெரிய வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்கும் பொறுப்பை எமது நிர்மாணத்துறைக்கு வழங்குகிறோம். அந்த காணிகளை அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். குறித்த தோட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகளை வழங்குவது மட்டுமே அவர்கள் நிறைவேற்ற வேண்டிய ஒரே நிபந்தனையாகும். அக்குடும்பங்கள் குறித்த வீட்டுத் தொகுதியில் வீடுகளை கோறினால் அவர்களுக்கு அங்கு வீடு வழங்கப்படும். அவர்கள் வேறு இடங்களில் வீட்டுக் கோறிக்கையினை முன்வைக்கும் போது குறித்த கோறிக்கையினை நிர்மாண நிறுவனம் நிறைவேற்ற வேண்டும்.

42. இலங்கையின் தேசிய வர்த்தக நாமம்
வலிமையான நாடொன்றாக தோற்றம்பெறுவதற்கு இலங்கை, பயன்படுத்தாத பாரியளவிலான உள்ளார்ந்த ஆற்றலை கொண்டுள்ளது. இவ்வுள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்வதற்கு அதன் வலிமைகள், விழுமியங்கள், தனித்துவமான சலுகைகள் என்பவற்றின் அடிப்படையில் தேசத்தின் அடையாளத்தை வடிவமைப்பதற்கு முழுமையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியொன்றினூடாக முதற்தர சுற்றுலாப்பயணி அடைவிடமாகவும், கவர்ச்சிகரமான முதலீட்டு மையமாகவும் அதன் விளக்கக்கூற்றை மீளவடிவமைப்பதற்கும் அதன் நிலையினை மீட்டெடுப்பதற்குமான புதிய முயற்சிகளுடன் தேசிய வர்த்தகநாமம் அமைத்தல் முயற்சிகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். அதற்கமைய, அரசாங்க நிறுவனங்கள், வியாபாரங்கள், பிரசைகள், கலாசார நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் என்பவற்றுடன் இணைந்து தேசத்தின் வர்த்தகநாமம் அமைத்தல் செயன்முறையினை வலுப்படுத்துவதற்கு ரூபா 100 மில்லியன் தொகையினை ஒதுக்கீடுசெய்கின்றேன்.

43. வழங்கல்
இலங்கையின் மூலோபாய அமைவிடத்தை மேம்படுத்தி அதை விநியோக மையமாக நிலைநிறுத்துவதில் மகத்தான பொருளாதார மதிப்பு உள்ளது. இருப்பினும், இந்த நீண்ட கால கனவை நனவாக்க பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. முதல் கட்டமாக, தேசிய விநியோகக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதற்கு அனைத்து பங்குதாரர்களுடனும் அரசாங்கம் இணைந்து செயல்படும்.

இந்தியாவுடன் இலங்கை நில உறவுகளைப் பேணிக்கொள்ளும் என நம்புகிறோம். தென்மேற்கு இந்தியாவின் விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தென்கிழக்கு இந்தியாவின் விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு திருகோணமலை துறைமுகத்திற்கும் கொழும்புத் துறைமுகம் பயன்படும் என்பது எமது நம்பிக்கை.

மேற்கு முனையம் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்கு பின்னர் எதிர்பார்க்கப்படும் கொழும்பு வடக்கு துறைமுகம் உருவாக்கப்பட்ட பின்னர் கொழும்பு துறைமுகத்தின் திறன் மேம்படும். திருகோணமலை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்திய பிராந்தியத்தில் விரைவான வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்கலின் பலன்களை இலங்கை அனுபவிக்க முடியும். இலங்கையை பிராந்திய வசதி ஏற்பாட்டு மையமாக உயர்த்துவதே எமது இறுதி இலக்காகும்.

44. மகளிர் வலுவூட்டுகை
ஆண் பெண் பால் வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு வரவுசெலவுத்திட்டத்தினை தயாரிப்பதனை அறிமுகப்படுத்தல் மற்றும் தொடர்புடைய சட்டவாக்கங்களை தயாரிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன். பெண்களை வலுவூட்டுகின்ற சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

45. நெசவுக் கைத்தொழில்
நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் இளம் சமுதாயம் பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்காக விசேட நிகழ்;ச்சித்திட்டங்களை செயற்படுத்துவதற்கு ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிகின்றேன்.

46. இடம்பெயர்ந்தோருக்கான வீடுகள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டு முரண்பாடுகள் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அந்தப் பிரதேசங்களில் இன்னும் வீடற்ற குடும்பங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் இவர்களின் மீள்குடியேற்ற தேவைகளை நிவர்த்தி செய்ய ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மேலதிக நிதி ஒதுக்கீடாக வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தவும், மீதமுள்ள வீடற்ற குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்கவும் ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

47. காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு
உள்ளக மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போன 181 நபர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதுடன் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் 170 பேருக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட இழப்பீட்டுக் கோரிக்கைகளில், 6,300 நிகழ்வுகளுக்கான பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளதுடன் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் இருந்து ஏற்கனவே ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்த ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன்.

48. யாழ்ப்பாண நீர்வழங்கல் கருத்திட்டம்
யாழ்ப்பாண பிரதேசத்தில் குடிநீர்ப் பிரச்சினை பல வருடங்களாக தீர்க்கப்படாதிருப்பதுடன் வெற்றிகரமான கருத்திட்டமெதுவும் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. தற்பொழுது காணப்படும் சிக்கலான பல்வகை நீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றாக ஏற்கனவே சாத்தியவள ஆய்வு நிறைவு செய்யப்பட்டுள்ள பாலி ஆறு நீர் கருத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இக்கருத்திட்டத்தின் ஆரம்ப வேலைகளை 2024 இன் முதல் அரை ஆண்டில் ஆரம்பிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப வேலைகளுக்கு 2024 வருடத்தில் ரூபா 250 மில்லியனை செலவிடுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

49. பூனகரி நகர அபிவிருத்தி
யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள பூனகரி நகரம் சுற்றுலாத் துறைக்கு ஒரு முக்கிய நகரமாக அமைந்துள்ளது. இதன் அபிவருத்திக்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்.

50. காலி மாவட்ட கேட்போர்கூடம்
காலி மாவட்ட கேட்போர்கூடத்தின் நிர்மாணப் பணிகள் 2019 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. பெருந்தொகையான நிதி இக்கருத்திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன் இதன் விரிவான பயன்பாட்டுக்காக அரச தனியார் முன்னெடுப்பொன்றாக செயற்படுத்தப்படுதல் வேண்டும்.

இக்கருத்திட்டத்தின் எதிர்கால நிர்மாணப் பணிகள் அரச தனியார் பங்களிப்பொன்றாக நிறைவு செய்யப்படுதல் வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பாக ரூபா 800 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

51. பண்டாரவளை பொருளாதார மத்திய நிலையம்
பண்டாரவளை பொருளாதார மத்திய நிலையத்தினை நிர்மாணித்தல் மற்றும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், பண்டாரவளை மாநகர சபை மற்றும் அரசாங்கத்தின் இணைந்த நிதியளிப்புக் கருத்திட்டமாக ரூபா 250 மில்லியனை நாம் வழங்குவோம்.

52. கீழ் மல்வத்து ஓயா கருத்திட்டம்
ஏற்கனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, இக்கருத்திட்டத்தின் மீதமுள்ள வேலைகளை துரிதப்படுத்துவதற்கு மேலும், ரூபா 2.5 பில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

கலாசாரம்
பல வருடங்களாக எமது கலாச்சாரம் பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டுள்ளது. கலாசாரம் என்பது அரச விருது வழங்கும் நிகழ்வு என்று மாத்திரம் பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நாட்டின் கலாசாரத்தினை போசிப்பதற்கும், பெறுமதியான மரபுரிமைகளை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்வதற்கும் முறையான செயற்பாடுகள் எதுவும் இல்லை. பல்வேறுபட்ட நெருக்கடிகள் மற்றும் சவால்களை எதிர்நோக்கிய போதும் எமது கலாசார கருத்திட்டங்கள் பல இந்த வரவுசெலவுதிட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது.

53. மகா விகாரை பல்கலைக்கழகம்
அநுராதபுரம் மகா விகாரை 19 ஆம் நூற்றாண்டின் அரைவாசியின் பிற்பகுதிவரை எவ்வித கவனிப்புமின்றி நூற்றாண்டு காலம் நலிந்த நிலையில் காணப்பட்டது. மகா விகாரையினால் முன்னெடுக்கப்பட்ட பிரதான பங்களிப்பானது தேரவாத பௌத்தத்தை பேணிப் பாதுகாத்த அதேவேளை உலகில் பௌத்த சமயம் பரவுவதற்கும் பங்களிப்புச் செய்தது. இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு தேசமென்ற வகையில் நாம் மகா விகாரையின் வரலாறு மற்றும் பங்களிப்புகளின் அனைத்து வகையான நோக்குகளையும் ஒன்றிணைத்து மகா விகாரையினை புதிய வடிவத்தில் பல்கலைக்கழகமொன்றாக நிர்மாணிப்பதற்கு முன்மொழிகின்றேன். இதன் எதிர்கால பணிகளுக்கான திட்டமொன்று ஆறு மாத காலப் பகுதிக்குள் தயாரிக்கப்பட்டு சனாதிபதி செயலகத்தின் கீழ் செயலாற்றுகைக் குழுவொன்றினை நியமிக்கப்படும். இதன் ஆரம்ப வேலைகளுக்காக ரூபா 400 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

54. அநுராதபுரம் சர்வதேச பௌத்த நூலகம்
மகா விகாரை பல்கலைக்கழகத்தினை தாபிக்கின்ற பணியினை பூரணப்படுத்தும் வகையில் அநுராதபுரத்தில் நவீன மாதிரியிலான சர்வதேச பௌத்த நூலகமொன்றினைத் தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். சர்வதேச பௌத்த நாடுகளில் கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களைப் பாதுகாப்பதுடன் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அதனைப் பயன்படுத்துகின்ற கல்விமான்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த நூலகத்தினை தாபிப்பதற்கு விரும்புகின்றேன். இந்நோக்கத்திற்காக பொருத்தமான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பொன்றினை தயாரிப்பதற்கும் வேலைகளை விரைவில்; ஆரம்பிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன். இத்திட்டத்தினை மூன்று வருடங்களுக்குள் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் நான் முன்மொழிகின்றேன்.

55. கண்டி பௌத்த கலாசார நூதனசாலை
ஆராய்ச்சி செயற்பாடுகள் மற்றும் கலாசார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக இலங்கை பௌத்த நூதனசாலை ஒன்றினைத் தாபிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். பல்வேறு நாகரீகங்களுடன் தொடர்பான அத்தகைய நூதனசாலைகள் பல்வேறு நாடுகளில் சிறப்பாக இயங்கிவருவதுடன் அத்தகைய நிலையங்களினால் கவரப்பட்ட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதனை தரிசிப்பர் என்பது அறியப்பட்ட விடயமாகும். இதற்கான நிர்;மாணப் பணிகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் நிர்மாணப் பணிகளுக்காக ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த செயற்திட்டத்தின் மூலம் இலங்கையினை பௌத்த சுற்றுலா மையமொன்றாக மாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

56. கிரிகட் அபிவிருத்தி
இலங்கையின் கிரிகட் தற்போது நிறுவன நெருக்கடிகளுக்கும் திறமையின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதனை நாம் அறிவோம். நாட்டின் பாடசாலை கிரிகட் அபிவிருத்தியினை மேம்படுத்தும் நோக்கத்துடன் மாகாண மட்டத்தில் கிரிகட் வீரர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு இந்த வரவுசெலவுத்திட்டத்தில் ரூபா 1.5 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இந்த நிதி ஏற்பாடு வழங்கப்படுவது வசதி குறைந்த பாடசாலைகள் மற்றும் மாகாணங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்காகும்.

57. போக்குவரத்துத் துறை
2024 ஆம் ஆண்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் டிஜிட்டல்மயமாக்கப்படும்.
இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து மேல் மாகாணத்தில் 200 மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான முன்னோடிக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டியில் வாகனங்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை நீக்கி ரயில்கள், பேருந்துகள் மற்றும் ஏனைய உயர் வாகனங்களை ஒருங்கிணைத்து உலக வங்கிக் கடன் வசதியின் கீழ் சனவரியில் கண்டி பல போக்குவரத்து நிலையக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் இப்பிரதேசத்தில் நுழைவுப்பாதை அபிவிருத்திக்காக ரூபா 1.5 பில்லியன் வழங்கப்படும்.

2024 சனவரி மாதமளவில் ரயில்வே திணைக்களம் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரையிலான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகளை பூர்த்தி செய்யும். அத்துடன் தனியார் துறையின் நிதியுதவியுடன் மிஹிந்தலை ரயில் நிலைய வளவை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்து பொருளாதாரம், கிடங்கு மற்றும் சேமிப்பு வசதிகளுடன் கூடிய ஒரு பெரிய நகரத்தை உருவாக்குவதற்கு ரூபா 200 மில்லியன்களை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

புறக்கோட்டை, காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பாரிய நகரங்களிலும் சுற்றுலா தலங்களிலும் அமைந்துள்ள புகையிரத நிலையங்களின் அடிப்படையில் ஸ்டே~ன் பிளாசா என அழைக்கப்படும் ரயில் நிலைய நகரத்திற்கு, அரசாங்க தனியார் தொழில்முயற்சி மன்றங்களின் கீழ் ஒருங்கிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

58. அரச சேவை வழங்கல்
மக்கள் சேவையினை வழங்குகின்ற போது பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் இரண்டின்பால் நாம் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்க வரவுசெலவுத்திட்டத்தினை செயற்படுத்துகின்றபோது கடுமையான நிதி ஒழுக்கத்தினை பேணுவது அவசியமான விடயமாகும்.

59. வரவுசெலவுத்திட்டம் தொடர்பான பொறுப்புக்கள்
மாகாணசபைகள் வரவுசெலவுத்திட்ட நோக்கங்களுக்காக விசேட செலவின அலகுகளாக கருதப்பட வேண்டும். இதற்கமைவாக மாகாணசபைகளின் பிரதம செயலாளர்கள் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் பிரதான கணக்கீட்டு அலுவலர்களாக பணியாற்ற வேண்டும் என நான் முன்மொழிகின்றேன். வரவுசெலவுத்திட்ட நோக்கங்களுக்காக செலவிடப்படும் நிதிக்கு மாகாணசபைகள் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறல் வேண்டும்.

60. மாகாணங்களுக்குள் கிடைக்கும் வருமானம்
மாகாண சபைகளில் சேகரிக்கப்படுகின்ற வருமானம் மீண்டெழும் செலவினங்களுக்காக மாத்திரம் வரையறுக்கப்படாது மாகாணத்தின் அபிவிருத்திக்கான மூலதனச் செலவினமாக பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும். தற்பொழுது நடைமுறையிலுள்ள செயன்முறையை சடுதியாக மாற்றுவதன் மூலம் ஏற்படும் அசௌகரிகங்களை தடுக்கும் வகையில் 2024 இற்கான வரவுசெலவுத்திட்டத்திற்காக வருமானத்தின் 50 சதவீதத்தினை மூலதனச் செலவினமாக பயன்படுத்துவதற்கும் அதன்பின்னர், முழு வருமானத்தினையும் மூலதனச் செலவினமாக பயன்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

61. மாகாண சபைகளின் மூலம் ஏற்றுமதி ஊக்குவிப்பு
1990 இன் 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தின் கீழ் பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்களில் ரூபா 4 மில்லியனிற்கு குறைவான மூலதனப் பெறுமதியைக் கொண்டதும் 50 பேருக்கு குறைந்த நிரந்தர ஊழியர்களை வேலைக்கமர்த்தி உள்ளதுமான ஏற்றுமதி அல்லாத கைத்தொழிலுக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை நாம் நீக்கிவிடுவதுடன், வருடாந்த புரள்வுக்கான வரையறை ரூபா 600 மில்லியனாக அதிகரிக்கப்படும். இதன்மூலம் மாகாண சபைகள் ஏற்றுமதிசார் கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்கு முடியுமானதாக இருக்கும். நாம் ஒவ்வொரு மாகாணத்திலும் கைத்தொழில் சேவை நிலையங்களை தாபிக்கவிருக்கின்றோம்.

62. உள்ளுராட்சி சபைகளின் சுய நிதியிடலை ஊக்குவித்தல்
உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு வருமானத்தினை திரட்டுவதற்கும் உள்@ர் மக்களின் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை முகாமை செய்வதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த நிறுவனங்களின்

சம்பளங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி வேலைகளுக்கான செலவுகளை அரசாங்கம் தாங்கிக் கொள்கின்றது.
எவ்வாறாயினும், தற்போது நிலவும் நிதிக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் உள்ளுராட்சி நிறுவனங்கள் சுய நிதியிடல் மாதிரியொன்றின்கீழ் தமது சேவைகளை வினைத்திறன் மிக்கதாக வழங்குவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்.

முதலாவது நடவடிக்கையாக 2024 சனவரி 01 ஆம் திகதியிலிருந்து மாநகர சபைகளின் சம்பளக் கொடுப்பனவுக்கான நிதியிடலின் 75 சதவீதத்தினை மாத்திரம் வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். 2025 ஜனவரி 01 ஆந் திகதியிலிருந்து நகர சபைகளுக்கு வழங்கப்படுகின்ற தொகையைக் குறைப்பதற்கும் அடுத்த 5 வருடங்களுக்கும் சுயநிதியிடலினை படிப்படியாக ஊக்குவிப்பதற்கும் முன்மொழிகிறேன்;.

63. தேசிய மக்கள் சபை
கிராம மட்டத்தில் தீர்க்கப்படாத அபிவிருத்தித் தேவைகளை இனங்காண்பதன் மூலம் தேசிய மட்டத்தில் வளங்களை ஒதுக்கீடுசெய்யும் செயல்முறையினை மக்கள் சபை முறைமையின் கீழ் முன்னுரிமை வழங்குவதன் மூலம் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்மூலம் கட்சி, இனம் மற்றும் சமயம் போன்ற பாரபட்சமின்றி தனது அபிவிருத்தி முன்னுரிமைகளை கிராம மக்கள் ஒன்றினைந்து தீர்மானிப்பதுடன், அவற்றை வள ஒதுக்கீட்டினை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு நேரடியாக சமர்ப்பிக்க முடியுமாக இருக்கின்றது. விசேடமாக கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலம் அவர்களை கிராமத்திற்கு பயனுள்ள அபிவிருத்தித் தீர்மானங்கள் எடுப்பதில் நேரடியாக பங்கெடுக்க முடியும் என்பதுடன், நாட்டின் எதிர்கால போக்கினைத் தீர்மானிப்பதற்கும் பங்களிப்பு செய்ய முடியும். இந்நோக்கத்திற்காக ரூபா 700 மில்லியனை ஒதுக்கீடுசெய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

64. ஹிங்குரக்கொட சர்வதேச விமான நிலையம்
மிக நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்ட போதிலும், ஹிங்குரக்கொட சர்வதேச விமான நிலைய கருத்திட்டம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. ஹிங்குரக்கொட சர்வதேச விமான நிலைய நிர்மாணமானது நாட்டின் அபிவிருத்திக்கான முக்கிய விடயமொன்றாகும். இதற்கான அடிப்படைச் செயற்பாடுகளுக்காக 2024 இல் ரூபா 2 பில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

65. மத்திய அதிவேகப் பாதை
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயற்பாடு நிறைவடைந்ததுடன், மத்திய அதிவேகப் பாதை இரண்டாவது கட்டம், அதாவது கடவத்தையிலிருந்து மீரிகமை வரையான பகுதியில் சீனாவுடன் இணைந்து வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குருநாகல் இருந்து கலகெதர வரையான பகுதியினை நிர்மாணிப்பதற்கு ஜப்பானின் உதவியினை பெறுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். நாம் திட்டமிட்டுள்ளது கடுகஸ்தொடை வரையான அதிவேகப் பாதையினை நிர்மாணிக்க முடியுமா என்பதனை பரிசோதிப்பதாகும்.

66. இளைஞர்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்கள்
இளைஞர்களின் அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களினால் அதிகளவான நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. இவ்வாறான அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களும் ஒருங்கிணைக்கப்படுவதுடன், புதிய பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளுக்கு ஏற்றவாறு புதிய நிகழ்;ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்படுதல் வேண்டும். இந்த ஒருங்கிணைக்கப்பட்ட ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் சனாதிபதியின் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், அதற்காக வரவுசெலவுத்திட்டத்தில் ரூபா ஒரு பில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

67. இரத்தினக்கல் கைத்தொழில்
இலங்கையில் இரத்தினக்கல் கைத்தொழில் முழுமையான ஆற்றலினை அடைவதற்கு இலக்கிடப்பட்ட பொதுவாக இணங்கிய நிகழ்ச்சித்திட்டத்தில் இன்னும் குறைபாடு காணப்படுகின்றது. இந்த நாட்டில் இரத்தினக்கல் கைத்தொழிலில் காணப்படுகின்ற பிரச்சினைகளை கவனத்தில் கொண்டும் பெறுமதி சேர்ப்புக்காக வெளிநாடுகளில் இருந்து இரத்தினக்கல் இறக்குமதி தொடர்பிலும், பொதுவான நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டும். இது நடுத்தரக் காலத்தில் அரசாங்கம், தனியார்துறை மற்றும் அனைத்துத் தரப்பினர்களினாலும் செயற்படுத்தப்படுதல் வேண்டும். இதற்காக அடுத்த 3 மாதங்களில் வேலைத்திட்டமொன்றினை தயாரித்து செயற்படுத்துவற்கு நான் முன்மொழிகின்றேன்.

68. திருகோணமலை நகரை அண்டிய அபிவிருத்தி
நாட்டின் பிரதான பொருளாதார நிலையமாக திருகோணமலை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். விசேடமாக துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும் இது நீண்டகாலமாக மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமாகும். அதேபோன்று இந்திய முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை முன்கொண்டு செல்ல முடியும். நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு சனாதிபதி செயலணியொன்றை அமைப்பதற்கு முன்மொழிகின்றேன்.

69. காலி மாவட்டத்தில் வெள்ளத்தைக் கட்டு;ப்படுத்துதல்
காலி மாவட்டத்தில் வெள்ளத்தைத் தடுக்கும் நடவடிக்கையொன்றாக கின் கங்கை நீர் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் வேண்டும். இதனை நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றேன். அதன் ஆரம்ப பணிக்காக ரூபா 250 மில்லியன்களை செலவிடுவதற்கு முன்மொழிகின்றேன்.

70. படுகடன் மறுசீரமைப்பு
படுகடன் மீள்கட்டமைப்பு செயன்முறையினால் உருவாக்கப்பட்ட சாதகமான நிலை காரணமாக குறைந்தது மேற்குறித்த நிவாரண நடவடிக்கைகளையாவது முன்னெடுப்பதற்கான வளங்களை தேடிக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் முடியுமாக இருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இலங்கையின் பொது படுகடன் மறுசீரமைப்பானது 2022 இல் மொ.உ. உற்பத்தியில் 128 சதவீதத்திலிருந்து 2032 ஆண்டளவில் மொ.உ. உற்பத்தியில் 95 சதவீதத்திற்கு குறைவாக வீழ்ச்சியடையும். தற்;பொழுது நாம் மிகவும் நெருக்கடியான சரிசெய்யும் கட்டத்தினை கடந்துசெல்வதுடன் இந்த சேமிப்புகள் மக்களின் நன்மைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அரசாங்கத்தினை இயலச்செய்யும்.

வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் சர்வதேச இறையாண்மை முறிகளின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, தற்போதைய நிகர மதிப்பினடிப்படையில் இலங்கையின் நிகர கடனைக் குறைக்கும், இறையாண்மை முறிகளின் தீர்வாக புதிய கருவிகளை வெளியிடுவது அவசியமாகும். இதற்கிணங்க, தற்போதுள்ள சர்வதேச இறையாண்மை முறிகளின் தீர்வுக்கு இலங்கை அரசாங்கத்தின் கணக்குப் புத்தகங்களில் பரிவர்த்தனையை பதிவு செய்ய வரவுசெலவுத்திட்ட் ஒதுக்கீடுகள் தேவைப்படுகின்றன.

வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பினைச் செயல்படுத்துவதற்கும், சர்வதேச இறையாண்மை முறிகளை வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பின் கீழ் தீர்த்து வைப்பதற்கும், நான் ரூபா 3,000 பில்லியன் முன்மொழிகிறேன்.

71. கடன் வரையறையினை அதிகரித்தல்
வங்கி மறுமூலதனமாக்கல் மற்றும் வெளிநாட்டு படுகடன் மீளமைப்பினைச் செயல்படுத்துவதற்கு நீண்ட முதிர்வுகளுடனான புதிய கடன் கருவிகள் வழங்கப்படல் வேண்டும். எனவே, கடன் வாங்கும் வரம்பு அதே அளவில் அதிகரிக்கப்படல் வேண்டும், தற்போதுள்ள ஆவணங்களைத் தீர்ப்பதற்கு வரவுசெலவுத்திட்ட ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் கடன் வாங்கும் வரம்பை ரூபா 3,900 பில்லியனிலிருந்து ரூபா 7,350 பில்லியனாக ரூபா 3,450 பில்லியனால் அதிகரிக்க நான் முன்மொழிகிறேன்.

72. நிதித் துறையினை ஸ்திரப்படுத்தல்
நீண்ட காலத்திற்கான வங்கித்துறையின் ஸ்திரத்தன்மை தொடர்பான அனைத்து விவேகமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. இந்நோக்கத்திற்காக, சர்வதேச நாணய நிதியத் திட்டத்தால் ஆதரிக்கப்படும் கட்டமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான ஒரு சுயாதீனமான சொத்துத் தர மதிப்பாய்வு நடாத்தப்பட்டது. இச்சுயாதீன சொத்துத் தர மதிப்பாய்வின் ஆரம்ப முடிவுகள், கூடுதல் மூலதன தாங்ககங்கள் விவேகமான அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிடுகின்றன. வங்கி முறையின் மூலதன மேம்பாட்டு செயல்முறையை ஆதரிக்கும் வகையில், ரூபா 450 பில்லினை நான் முன்மொழிகிறேன்.

வங்கித் துறையின் மூலதன மேம்பாட்டிற்கான உத்தேச ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு வங்கித் துறை ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதால், வரி செலுத்துவோர் நிதிகளின் மீதான சுமையைக் குறைக்கும் வகையில், இரண்டு பெரிய அரசு வங்கிகளின் பங்குகளில் 20 சதவீதத்தை மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். எதிர்காலத்தில் அரச வங்கிகளின் நிதி நிலை மோசமடைவதைத் தடுக்கும் முகமாக முக்கிய அதிகாரிகள் மற்றும் அரச வங்கிக் குழு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கடுமையான விதிகள் மற்றும் ஒற்றைக் கடன் வாங்குபவர் போன்ற கடன் அபாயத்தில் கடுமையான விதிகள் உட்பட பல சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வங்கிச் சட்டத்திற்கான திருத்தங்கள் இச்சீர்திருத்தங்களுக்கான சட்ட கட்டமைப்பை வழங்கும் எனவும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

73. சட்ட மறுசீரமைப்புகள்
சிறுநிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்துகை அதிகார சபைச் சட்டமூலம் மற்றும் பிணையளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல் சட்டமூலம் என்பன ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறுநிதிச் சட்டம் வாடிக்கையாளருக்கு அதிகளவு சட்டரீதியான பாதுகாப்பினை வழங்குவதுடன், மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட பண பெறுகை வியாபாரங்கள் தாபிக்கப்படும். புதிய பிணையளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல் சட்டமானது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளில் ஆதனங்களின் பெறும்பகுதியினை பாதுகாப்பதுடன், வளர்ச்சிக்கான கடனைப் பெறுவதற்கும் அவற்றுக்கு முடியுமானதாக இருக்கும்.

நிதி அமைச்சானது பொது நிதி முகாமைத்துவத்தில் சிறந்த ஆளுகைக் கோட்பாடுகளினை மேலும் மேம்படுத்துவதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவல சட்டம், பொது நிதி முகாமைத்துவ சட்டம், பொது சொத்துக்கள் முகாமைத்துவ சட்டம், அரசுடமை தொழில்முயற்சிகள் மறுசீரமைப்புச் சட்டம் ஆகியன ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், திசெம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முதலீட்டு நட்பு சட்டச்சூழல் ஒன்றினை உருவாக்குவதற்கு புதிய முதலீட்டுச் சட்டம் மற்றும் அரச தனியார் பங்குடமைச் சட்டம் என்பவற்றினை அறிமுகப்படுத்துவதற்கு நாம் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம். பொருளாதார அபிவிருத்திக்காக காணிகளை அதிகபட்சமாக பயன்படுத்துவதற்காக புதிய

நிருவன மாற்றங்களுடன் புதிய காணிச் சட்டத்தினை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
மேலே குறிப்பிட்ட சட்டங்களுக்கு மேலதிகமாக நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் புதிய சட்டங்கள் பலவற்றினை அறிமுகம் செய்வதற்கும் தற்பொழுதுள்ள பழைய சட்டங்களை திருத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

74. அரச நிருவாக மறுசீரமைப்பு
பொருளாதார நெருக்கடியின் போது பங்களிப்பு செய்கின்ற பொருளாதார நிருவாகம் குறிப்பாக அரசிறை நிருவாகம் என்பவற்றின் பலவீனமான நிலையில் அரசாங்கம் வகிக்க வேண்டிய முக்கிய பங்கினை அறிந்துள்ளது.இலங்கை அரசாங்கம் அவ்வாறான மீளாய்வொன்றினை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பதுடன், ஆசியாவின் சர்வதேச நாணய நிதியத்தினால் நிருவாகம் ஒன்றினை பரிசோதித்த முதலாவது சந்தர்ப்பமும் இதுவாகும். இலங்கை மிக நீண்ட காலமாக கட்டமைப்ப நிருவாக நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டிருந்தது. நிருவாக பரிசோதனையில் பல்வேறு பிரச்சினைகள் எடுத்துக்காட்டப்பட்டதுடன், அரசாங்கத்தினால் அவை இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. பெறுகை மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் வருமான சேகரிப்பு அதிகாரங்களில் காணப்படுகின்ற ஊழல்களை நீக்குதல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான பிரச்சினைகள் என்பன ஏற்கனவே அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் காணப்படுகின்றது.

இப் பிரச்சினைகளில் பல தற்போது இறுதி வரைவு கட்டத்திலுள்ள பொது நிதி முகாமைத்துவ சட்டமூலத்தின் புதிய சட்ட வடிவத்திற்குள் கொண்டுவரப்படும்.

75. புதிய வளர்ச்சி மாதிரி
இலங்கை பல தசாப்தங்களாக கடன் மூலம் வழங்கப்பட்ட நிதியில் தங்கியிருக்கின்ற பொருளாதார அபிவிருத்தியையும் நலன்புரி வழங்கலையும் மாதிரியாக கொண்டிருந்தது. இலங்கை புதியதொரு சமூக ஒப்பந்தத்தை வேண்டி நிற்கின்றது. வரையறுக்கப்பட்ட அரசாங்க சேவைகள் மற்றும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடொன்று எமக்குத் தேவையா என்பதனை நாம் சிந்தித்தல் வேண்டும். அரசாங்கத்திற்கான பெறும் பங்கு அதிக வரிகளுடன் தொடர்புற்றுள்ளது. நாட்டின் அபிவிருத்தி உற்பத்தித்திறனில் தங்கியிருப்பதுடன், பகிர்ந்தளிக்கக்கூடிய மிகையினை உருவாக்குதல் வேண்டும். இந்த புதிய வளர்ச்சி மாதிரியானது, நியாயமான பசுமை வளர்ச்சிமிக்க மற்றும் டிஜிடல்மயப்படுத்தப்பட்ட பொருளாதாரமொன்றினால் பின்னிப்பிணைந்த உயர் உற்பத்தித் திறன் மிக்க சமூக சந்தைப் பொருளாதாரமொன்றினை அடிப்படையாக கொண்டிருத்தல் வேண்டும்.

76. இலங்கை வருமான அதிகாரசபை
அரசாங்கம் வருமான அதிகாரசபை மாதிரியை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளையில் இலங்கை வருமான அதிகாரசபை தாபிக்கப்படும். எடுத்துக்காட்டாக இந்த அரைச்சார்பு தன்னியக்க நிறவனங்கள் நாட்டின் பிரதான வருமானச் சட்டங்களின் நிருவாகம் மற்றும் அமுலாக்கலுடன் இயங்குகின்றன. வருமான சட்டங்களுக்கு கணக்குகூறுகின்ற அமைச்சர் என்ற வகையில் நிதி அமைச்சின் பொதுவான வழிகாட்டலின்கீழ் அவையுள்ளன.

இலங்கை வருமான அதிகாரசபையாகக் கருதப்படக்கூடிய பல அதிகாரசபைகளின் முக்கியமான விடயங்கள், சட்டவாக்கத்தை இயலச் செய்யும் தனியான சட்ட அந்தஸ்த்து, முகாமைத்துவ விடயங்களுக்கு ஆனால் குறிப்பான வரிசெலுத்துநர் சார்ந்த விடயங்களி;ல் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துள்ள முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான தனியார்துறை பிரதிநிதிகளைக் கொண்ட தீர்மானம் எடுத்தல் முகாமைத்துவ சபை மற்றும் மனிதவளங்கள், வரவு செலவுத்திட்ட ஈடுபாடு, ஒழுங்கமைப்பு மற்றும் நிர்வாகம் போன்ற விடயங்கள் மீதான போதுமான தன்னுரிமை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இலங்;கை வருமான அதிகாரசபை கருத்திட்ட அணியானது கலந்துரையாடலுக்கான இலங்கை வருமான அதிகாரசபை சட்டமூலத்தை வரைவதற்கு இட்டுச் செல்லக்கூடிய வருமான அதிகாரசபையொன்றினை தாபித்தல் மற்றும் செயற்படுத்தல் உட்பட இந்;த சகல விடயங்களையும் கருத்திற் கொள்வதற்கு நிதி அமைச்சில் வகுக்கப்பட்டுவருகின்றன.

77. உலகளாவிய பொருளாதாரத்துடனான ஈடுபாடு
இலங்கைப் பொருளாதாரத்தின் அதிகரிக்கின்ற வர்த்தகத்தின் வகிபாகமானது ஏற்றுமதிக்காக சந்தைப் பெறுவழிகளை அதிகரித்தல் மற்றும் பொருளாதாரப் போட்டித்தன்மையினை அதிகரிப்பதற்கு பொருத்தமான உலகளாவிய போட்டி மட்டத்தினை வழங்குதல் என்ற இரு நியதிகளும் இன்றிமையாத முக்கியத்துவம் வகிக்கின்றது. ஆகையினால், முக்கிய பிராந்திய பங்காளர்களுடன் அனைத்தையும் உள்ளடக்கிய வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவது எமது வர்த்தக் கொள்கையில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பீ+ நிகழ்ச்சித்திட்டதுடன் சேர்த்து மேற்குறித்த வர்த்தக உடன்படிக்கைகளை இலங்கை செயற்பாட்டிற்கு கொண்டு வந்ததுடன் அனேகமாக அனைத்து முக்கிய உலகளாவிய சந்தைகளுக்கும் விரிந்து செல்கின்ற போட்டிமிக்க சந்தை பெறுவழியினை நாடு கொண்டிருக்கும்.

இலங்கையின் கவனிக்கப்படாத வர்த்தக ஏற்றுமதி ஆற்றலினை அடைந்துகொள்வதற்கான முன்நிபந்தனையானது ஏற்றுமதிகளுக்கான ஊக்குவிப்புகளை கொண்ட சாதகமான வரிக் கொள்கை ஒன்றினை பின்பற்றுவதாகும்.

வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் இலங்கையின் வலுவான ஈடுபாட்டினை மேம்படுத்தும் முதற்படியாக இறக்குமதி செஸ்வரி மற்றும் துறைமுகங்கள் விமானநிலைவய அறவீடு என்பன உள்ளடங்கலாக துணைவரிகள் முறையே 3 மற்றும் 5 ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதிக்கு படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.

உலகளாவிய போட்டிக்கு பாரியளவு உட்படுவதன் காரணமாக தடங்களுக்குள்ளாகியுள்ள நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் வர்த்தக சீராக்கல் நிகழ்ச்சித்திட்டம் நிதியியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்.

போட்டிமிக்கதாக காணப்படுகின்ற துறைக்களை நோக்கி நிறுவனங்களும் ஊழியர்களும் நகருவதற்கு தேவையான தொழில்நுட்ப தரமுயர்த்தலுக்கு ஊழியர்களை மீளத்தேர்ச்சிப்படுத்துவதற்கும் பகுதியளவு நிதியளிப்பதற்கு இந்நிகழ்ச்சித்திட்டம் பயன்படுத்தப்படலாம்.

வெளிநாட்டு சந்தைப் பெறுவழியினை பெற்றுக்கொள்வதற்கு மேலதிகமாக, வழங்கல்பக்க மற்றும் வர்த்தக வசதிப்படுத்தல் தொடர்புபட்ட முட்டுக்கட்டைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதி அபிவிருத்திக்காக பரந்த பங்குதாரர் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டு முழுமையான அணுகுமுறையொன்றை வழங்குகின்ற தேசிய ஏற்றுமதி உபாயத்தை இற்றைப்படுத்தும் செயன்முறையினை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

உலக வர்த்தக அமைப்பில் இலங்கையின் வர்த்தக வசதிப்படுத்தல் கடமைப்பொறுப்புகள் அனேகமாக குறைவாக அபிவிருத்தி அடைந்த நாடுகளை விடவும் குறைவாகவே காணப்படுகின்றது. ஏனையவற்றிற்கு மத்தியில் இலத்திரனியல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளல், டிஜிடல் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளல் என்பவற்றிற்கான முறைமைகள் உள்ளடங்கலாக தெரிவுசெய்யப்பட்ட வர்த்தக வசதிபடுத்தல் வழிமுறைகளின் நடைமுறைப்படுத்தலை பூரணப்படுத்துவதில் பல எண்ணிக்கையான அரசாங்க முகவராண்மைகள் பின்தங்கிக் காணப்படுகின்றன என்பது கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகையினால், மேலும், சில பங்குதாரர்களை உள்ளடக்கி திறைசேரிக்கான செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய வர்த்தக வசதிப்படுத்தல் குழு மீளஒழுங்கமைப்படவுள்ளது. வர்த்தகம் தொடர்புபட்ட அரசாங்க நிறுவனங்கள் மத்தியில் வர்த்தக சினேகம்மிக்க தொழில் செயன்முறையினை உருவாக்குவதற்கு இத்தளத்தினை பயன்படுத்துமாறு தேசிய வர்த்தக வசதிப்படுத்தல் குழுவின் உறுப்பினர்களாக இருக்கின்ற தனியார் துறையை நான் ஊக்குவிக்கின்றேன்.

சர்வதேச வர்த்தகத்தின் வளர்ந்துவருகின்ற போக்குகளையும் பிராந்தியத்திலுள்ள முன்னணி பொருளாதாரங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய சிறந்த நடத்தைகளையும் நிறைவுசெய்வதற்கும் அதேபோன்று சுங்கத்தில் உரியவாறான வருவாய் சேகரித்தலை பெற்றுக்கொள்வதற்கும் சுங்க புலனாய்வுகள் மற்றும் விசாரணைகளை நிறைவுசெய்வதற்கான காலம், வந்துசேர்வதற்கு முந்திய செயன்முறைப்படுத்தல் மற்றும் மேலும் பல விடயங்கள் உள்ளடங்கலாக சுங்க கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் சுங்கச் சட்டங்கள் உலகலாவிய சிறந்த நடத்தைகளுடன் அளவிடக்கூடியதாக இருக்கும் நோக்குடன் சுங்கச் சட்டவாக்கத்தை மேலும் நவீனமயப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடு மீது பாரிய சாதகமான தாக்கத்தினை கொண்டிருக்கின்ற – தேசிய ஒரேஇடத்திலான வசதிப்படுத்தல் மையத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு செயல்திறன்வாய்ந்த தேசிய வர்த்தக வசதிப்படுத்தல் குழுவொன்று முக்கியமானதாகும். தேசிய ஒரேஇடத்திலான வசதிப்படுத்தல் மையமானது அனைத்து பரந்த முகாமைத்துவ முகவராண்மைகளையும் தனியொரு டிஜிடல் தளத்தினுள் கொண்டுவந்து, வர்த்தகம் தொடர்புபட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் ஆவணங்களை தடையின்றியும் உரியகால விதத்திலும் செயன்முறைப்படுத்தலை வசதிப்படுத்தும் அதற்கமைய, ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடுசெய்யப்படும்.

பல நாடுகளில் வர்த்தகக் குறியீட்டுப் பதிவினை இயலச்செய்கின்ற மெட்ரிட் நெறிமுறைகளுக்கான பெறுவழியினை வசதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கையின் வர்த்தகநாமங்களின் போட்டித்தன்மையினை அதிகரிப்பதற்கும் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களின் பெறுமதியினை உயர்த்துவதற்கும் இது மிகவும் முக்கியமானதாகும்.

78. முதலீடு
கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிட்டவாறு நாட்டின் முதலீடு மற்றும் வர்த்தகம், ஊக்குவித்தல் மற்றும் வசதிப்படுத்தல் என்பவற்றிற்கான நிறுவனசார் மற்றும் சட்ட கட்டமைப்பினை சீரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கமைய, தேசிய பொருளாதார ஆணைக்குழுவொன்று தாபிக்கின்ற புதிய ஒன்றுசேர்த்த முதலீட்டுச் சட்டமொன்று வரையப்பட்டு வருகின்றது. இது, முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி திணைக்களம், கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை என்பற்றின் தொழில்பாடுகளை ஒன்றுசேர்க்கின்ற கட்டமைப்பை மேற்பார்வை செய்யும். இது ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தில் முதலீட்டு அனுமதிச் செயன்முறையினை சீரமைத்து வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பினை அதிகரிக்கும்.

பொருளாதார ஆணைக்குழுவினை தாபிப்பதற்காக ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன்.

அதிக வெளிநாட்டு முதலீடுகளையும் உள்நாட்டு முதலீடுகளையும் கவருவதற்கான வியாபார சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு சேவைகளை வழங்குகின்ற அனைத்து அரசாங்க முகவராண்மைகளினதும் செயற்பாடுகளின் தன்னியக்கத்தை மேம்படுத்துவதனூடாக தொடர்புடைய நடைமுறைகள், ஒன்றுடனொன்று இயங்குகின்றதன்மை குறைந்த செலவு – நேர நடைமுறைகள் என்பவற்றை எளிமைப்படுத்தி முதலீட்டு செயன்முறைகளை வசதிப்படுத்துவதில் அல்லது உரிமம் வழங்கும் முகவராண்மைகள் தொடர்பில் முதலீட்டாளர்களுக்கு வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நோக்கத்திற்காக 2024 ஆண்டிற்காக ரூபா 100 மில்லியன் ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன்.

ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய மற்றும் கண்டி என்பவற்றினை மையப்படுத்திய புதிய முதலீட்டு வலயங்களை தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், இந்த விN~ட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தேசிய பொருளாதார ஆணைக்குழுவினூடாக முகாமை செய்யப்படுவதற்கு முன்மொழிகின்றேன்.

79. உற்பத்தித் திறனை அதிகரித்தலும் உற்பத்திப் பொருளாதாரத்தை தூண்டுதலும்
2023 வரவுசெலவு திட்ட உரையில் குறிப்பிட்டவாறு தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவினை நிறுவுவதற்காக தொடர்புடைய சட்டம் ஏற்கனவே வரையப்பட்டுள்ளது. 2024 அளவில் இவ்வாணைக்குழுவை தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையினால், இந்நோக்கத்திற்காக 2024 ஆண்டிற்காக ரூபா 150 மில்லியன் ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன்.

80. டிஜிடல் பொருளாதாரத்தை நோக்கி
2030 அளவில் டிஜிடல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை வசதிப்படுத்தும் பொருத்து அரசாங்கத்துறை தகவல் தொழில்நுட்பம் தொடர்புபட்ட நிறுவனம்சார் கட்டமைப்பினை மறுசீரமைப்பதற்கு முன்மொழிகின்றேன்.

அதற்கமைய, அரசாங்கத்துறை டிஜிடல்மயமாக்கத்திற்கு அவசியமான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்குவதற்கு டிஜிடல் ரீதியாக மாறுதலைடைதல் முகவராண்மையொன்றை தாபிப்பதற்கு அவசியமான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கு மேலதிகமாக, அரசாங்கத்துறை, சிறப்பியல்பு வாய்ந்த முகவராண்மைகள், கைத்தொழிற்துறை, சிவில் சமூகம் என்பவற்றை ஒருங்கிணைப்பதன் வாயிலாக தொழில்நுட்பவியல் புத்தாக்கத்தினை ஊக்குவிப்பதற்கு “தொழில்நுட்பவியல் புத்தாக்கச் சபையினை” சாபிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

இலங்கையின் – தனித்துவமான டிஜிடல் அடையாள உருவாக்கம் இக்கட்டமைப்பின் முக்கிய அங்கமாக அமைந்திருக்கும். இக்குறிக்கோளை அடைவதை நோக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 2024 காலப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

81. ஆராய்ச்சியும் அபிவிருத்தியும்
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக நிறுவனசார் கட்டமைப்பினை தயார்படுத்தும் நோக்குடன் ஆரய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக 2024 ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வரவுசெலவு திட்டத்திற்காக குறித்த தொகை நிதியங்களை ஒதுக்கீடுசெய்வதற்கு எதிர்பார்க்கின்றேன். அதற்கமைய இந்நோக்கத்திற்காக 2024 ஆண்டிற்காக ரூபா 8 பில்லியன் ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன். “ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான குறிப்பான விடயம் தொடர்புடைய செலவினத் தலைப்புகளில் உள்ளடக்கப்படுவதற்கும் முன்மொழிகின்றேன்”.

82. சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு
பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, சுற்றுலாத் துறை முன்னேறி வருகிறது. நமது நாட்டின் அமைவிடம், தட்பவெப்பநிலை மற்றும் கடந்தகால பாரம்பரியத்தின் அடிப்படையில் சுற்றுலாத்துறையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஹோட்டல் அறைகளை வாடகைக்கு எடுப்பது, கடற்கரை அனுபவங்களை அனுபவிக்க இடங்களை வழங்குவது மற்றும் சிகிரியாவைக் காண்பிப்பது போன்ற பாரம்பரிய செயல்பாடுகளைக் கடந்து புதிய சுற்றுலாக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான அடித்தளத்தை அமைக்கும் பல படிகள் இந்த பட்ஜெட் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டு முதல் விசிட் ஸ்ரீலங்காவின் கீழ் புதிய வடிவில் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்கு வசதியாக அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் பல பணிகளைச் செய்ய வேண்டும். மேலும், சுற்றுலாத் துறையில் புதிய சட்டத்தை இயற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம், மேலும் இந்த பணிகளுக்காக ஒரு பில்லியன் ரூபாய்களை வழங்குகிறோம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு முக்கியத் துறையொன்றாக சுற்றுலாத் துறையினை ஏற்றுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், சுற்றுலா தளங்களில் சில அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்க நிலையில் காணப்படவில்லை. எனவே, எனவே, சுற்றுலாப் பிரதேசங்களின் அத்தியவசிய அடிப்படைத் தேவைகளை அபிவிருத்தி செய்யும் வகையில், சுற்றுலா தொடர்பான உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகளை பராமரித்தல் மற்றும் தொழிற்படுத்துவதன் மூலம் உள்ளுராட்சி மன்றங்களின் வருமானத்தினை அதிகரித்தல், சுற்றுலா செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை தரமுயர்த்தல் மற்றும் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கு அரச தனியார் பங்காளர்களை ஊக்குவித்தல் என்பவற்றுக்காக உள்ளுராட்சி மன்றப் பிரதேசங்களில் சுற்றுலா உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகின்றேன்.

தற்பொழுது அரசாங்கத்திற்குச் சொந்தமான 720 இற்கு அதிகமான விடுமுறை ஓய்வு விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகள் காணப்படுகின்றன. இந்த நிலையங்களின் மூலம் மொத்தமாக ஏறக்குறைய 3,750 அறைகளை வழங்க முடியும். இந்த விடுமுறை ஓய்வு விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகள் சுற்றாடல் ரீதியாக கவர்ச்சிகரமானதாகவும் வசீகரமான தரைத்தோற்றங்களையும் கொண்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பாதை வலையமைப்பு உள்ளடங்களான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் குறித்த இடங்களை இலகுவாக அடைந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அரச விடுமுறை ஓய்வு விடுதிகளை நவீனமயப்படுத்தி சுற்றுலா துறையினை ஊக்குவிப்பதற்காக அவற்றினைப் பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றினை தயாரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இந்த அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக ரூபா 600 மில்லியனைச் செலவிடுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

83. பின்னவலை – கித்துள்கள சுற்றுலாத் தளங்களின் அபிவிருத்தி
2023 வரவு செலவுத்திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கித்துள்கள நீர் படகு ஓட்டல் கருத்திட்டம், பின்னவள யானை சரணாலயம் மற்றும் கித்துள்கள நீர் படகு ஓட்டல் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற இடங்களில் அமைந்துள்ள ஏனைய சுற்றுலா கவர்ச்சித் தளங்கள் என்பவற்றினை மேம்படுத்துவதற்கான நிர்மாணப்பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு கொழும்பு அதிவேகப் பாதையின் உத்தேச ரமுக்கன வாயிலினைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுலா வலயமொன்றாக அபிவிருத்தி செய்யப்படும். இந்த சுற்றுலா வலயத்தின் மத்திய நிலையமாக உத்தேச கலிகமுவ எழுச்சி நகரம் மேம்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக இந்நகரத்தினை சூழவுள்ள பிரதான பாதைகள் தரமுயர்த்தப்படுவதுடன், சுற்றுலா மற்றும் உயிரியல் பூங்கா தொடர்பான பயிற்சி நெறிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இப்பிரதேசத்திலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் மட்டத்தினை தரமுயர்த்துதல், அரசாங்க காணிகளை பயன்படுத்துவதற்கு முதலீடு செய்தல் மற்றும் அரச தனியார் பங்களிப்பினூடாக சுற்றுலா தொழிற்றுறைக்கு ஏற்றவகையில் அதனை மாற்றியமைத்தல் மற்றும் இப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி போன்றவற்றினை இத்திட்டம் உள்ளடக்கியிருக்கும். இக்கருத்திட்டத்தினை 3 வருட காலப்பகுதிக்குள் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டமொன்றாக செயற்படுத்துவதற்கு ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

84. ஆக்கத்திறன் மிக்க பொருளாதாரம்
ஆக்கத்திறனானது கலாசாரத்திலும் சமூகத்திலும் முக்கிய பங்கினை கொண்டிருக்கின்ற அதேவேளை, ஆக்கத்திறன்மிக்க பொருளாதாரத்திலும் இன்றியமையாத பங்கினை அது கொண்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் மூலம் வழிநடாத்தப்படுகின்ற ஆக்கத்திறன்மிக்க பொருளாதாரமானது தற்போது உள்ளாந்தப் பெறுமதியில் வளர்ச்சியடைந்து வருகின்றது. நிலைபெறத்தக்க மற்றும் ஒழுக்கநெறிமிக்க ஆக்கத்திறன் மையமொன்றாக இலங்கையினை அபிவிருத்தி செய்வதற்கு மிகுந்த வாய்ப்பு காணப்படுகின்றது என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகையினால், ஆக்கத்திறன் வாய்ப்புகள், தொழிற்துறை மற்றும் கல்வியலாளர்கள் என்பவற்றிற்கிடையில் கூட்டுமுயற்சியினை தூண்டுவதற்கு முன்னனி வகிக்குமாறு தொடர்புடைய ஆர்வலர்களுக்கு அழைப்புவிடுக்கின்றேன். இலங்கையில் ஆக்கத்திறன்மிக்க பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான இக்கலந்துரையாடல்களில் உதவுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.

85. விரும்பியவாறு பணியாற்றும் பொருளாதாரம்
பொருட்கள் மற்றும் சேவைகளின் எல்லை கடந்த கொடுக்கல்வாங்கல்கள் உள்ளடங்கலாக விரும்பியவாறு பணியாற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இலத்திரனியல் வணிக கொடுக்கல்வாங்கல்கள் என்பவற்றின் வளர்ச்சியடைகின்ற போக்கினை கருத்திற்கொண்டு, பொருட்கள் மற்றும் சேவைகளின் எல்லை கடந்த கொடுக்கல்வாங்கல்கள் உள்ளடங்கலாக விரும்பியவாறு பணியாற்றும் பொருளாதார நடவடிக்கைகள், இலத்திரனியல் வணிக கொடுக்கல்வாங்கல்கள் என்பவற்றை வசதிப்படுத்துவதற்கு எளிதாக்கப்பட்ட கொள்கை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. கொடுப்பனவு முறைமை, அரசிறை வருமானம், பணியாளர் நலநோம்புகை போன்றவற்றையும் இது உள்ளடக்கும்.

86. பசுமைப் பொருளாதாரம்
வர்த்தக நோக்குத்துறைகளால் இயக்கப்பட்டு வருகின்ற பொருளாதார வளர்ச்சிக்கு மேலதிகமாக மிகவும் நிலைபெறத்தக்க பசுமை வளர்ச்சி முயற்சிகளை நோக்கி மூலவளங்களை வழிப்படுத்துவதும் முக்கியமாக விளங்குகின்றது. இலங்கையின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலின் முழுமையான நோக்கு காலநிலை சுபீட்ச திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் காலநிலை இலக்குகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக மூலவளங்களுக்கான தேவைப்பாடுகளை இத்திட்டம் எடுத்துரைக்கின்றது. பசுமை நிதி வகைபிரித்தலை வெளியிடுதல், வாய்ப்புமிக்க பசுமை முதலீடுகள் மீது மேலதிக தெளிவுபடுத்தல்களை வழங்குதல்கள் போன்ற அவசியமான நடவடிக்கைகளையும் இலங்கை எடுத்துள்ளது. இலங்கையின் காலநிலை சுபீட்சத் திட்ட நடைமுறைப்படுத்தலுக்கு ஆதரவளிப்பதற்கான நிறுவனசார் கட்டமைப்பானது சனாதிபதி செயலகத்தில் காலநிலை மாற்ற அலுவலகத்தை நிறுவுதல், பொதுத் திறைசேரியில் காலநிலை நிதியிடல் அத்துடன் கொத்மலை நீர்த் தேக்கத்தின் மேற்பகுதியில் அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கீடுசெய்துள்ளது.

600 ஏக்கர்களில் சர்வதேச பல்கலைக்கழகமாக அமையப்பெறவுள்ள இலங்கையில் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தின் தாபனத்தை தொடங்குதல் உள்ளடங்கலாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
சூரிய சக்தி மற்றும் காற்று உள்ளடங்கலாக பசுமை நீர் மற்றும் வேறு மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் அபிவிருத்தியினை இலங்கை பின்பற்றுகின்றது.

இலங்கை காலநிலை மாற்ற ஆணைக்குழுவினை தாபிப்பதற்கான காலநிலை மாற்ற சட்டத்தின் வரைவு சட்டமூலத்திற்கான பூர்வாங்க ஆவணம் தொடக்கப் பணியாக இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஆசியப் பிராந்தியத்திலுள்ள சில நாடுகளில் உணவுப் பற்றாக்குறைகள் காணப்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது. இந்நிலைமையில் எதிர்கால உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் ஏதேனும் உணவுப் பற்றாக்குறை இன்றி நுகர்வோருக்கு அத்தியவசிய உணவுப்பொருட்களை வழங்குவதற்கும் தேவையான நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமமைப்பதற்கும் அத்துடன், உணவு உற்பத்திச் செயன்முறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவு செயன்முறைப்படுத்துனர்களுக்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் ஏனைய வசதிகள் வழங்குவதற்கும் ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்..!

சுற்றுச்சூழலை நேசிக்கும் பசுமையான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்…!

முடிவுரை

பசுமைப் பொருளாதாரத்தையும் பசுமைச் சமுதாயத்தையும் உருவாக்கும் பசுமை வரவுசெலவுத் திட்டத்தை எங்களால் தாக்கல் செய்ய முடிந்தது. நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் பசுமை வரவுசெலவுத்திட்டம் இது.

இந்த பசுமை வரவுசெலவுத் திட்டம் புதிய பொருளாதாரத்திற்கான அணுகுமுறையாகும். வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை. கூட்டுவாழ்வு கருத்தாக்கத்தின் உறுதிப்படுத்தல்.

பல பிரச்சினைகள் இருந்த போதிலும் நாட்டின் எதிர்காலத்தை பலப்படுத்தும் வரவுசெலவுத் திட்டத்தை எம்மால் தயாரிக்க முடிந்தது. ஆனால் இந்தப் பயணத்தில் இன்னும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு அழகான பதில்கள் இல்லை. தேவதை உலகங்களை உருவாக்குவது இந்த பிரச்சினைகளை தீர்க்காது. இந்தக் கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக விடை காண வேண்டும். கூட்டுவாழ்வு என்ற கருத்தை உடைக்காமல் இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். அதுதான் இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் சவாலான பணியாகும்.

சில எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த இந்த நடைமுறையை நிறுத்தினால் என்ன நடக்கும்? அல்லது இந்த நடைமுறைக்கு இடையூறு ஏற்பட்டால் என்ன நடக்கும்? சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் தொடர் சீர்திருத்தங்கள் நிறுத்தப்படும். அது நடந்தால், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை ஸ்தம்பிக்கும். நம்பிக்கை உடைந்து, உள்ளுர் வங்கி அமைப்பில் அந்நிய செலாவணி பாய்ச்சல் நிறுத்தப்படும். அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டுடன் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படும். பொருட்களின் விலையும், பணவீக்கமும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயரும்.

சர்வதேச நாணய நிதியத் திட்டத்திற்கு மார்ச் மாதம் அனுமதி கிடைத்ததால் நாங்கள் மீண்டும் பெறத் தொடங்கிய வெளிநாட்டு நிதி வருமானம் நின்று போனது. வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்துவதன் மூலம் அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் அதிக கடன் வாங்க வேண்டியுள்ளது.

அப்படி நடந்தால் மீண்டும் நாம் பொருளாதார நரகத்திற்குள் தள்ளப்படுவோம். நமது பொருளாதாரம் சீரமைக்க முடியாத அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். மீண்டும் அப்படி நடந்தால் இலங்கையை காப்பாற்ற உலகில் யாரும் முன்வர மாட்டார்கள். எமது வெளிநாட்டு கடனாளிகளான சர்வதேச நாணய நிதியம் உட்பட அனைத்து தரப்பினரும் எம்மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்படும். லெபனான் போன்ற ஒரு நாட்டிற்கு ஏற்பட்ட துரதிஷ்டமான சூழ்நிலையை நாம் மரபுரிமையாகப் பெறுவோம்.

அத்தகைய சூழ்நிலையில் மீண்டும் வீழ்ந்துவிடாமல் இருக்க, நமது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பு புதிதாக உருவாக்கப்பட வேண்டும். புதிய சமூக ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டும். அதற்கான அடித்தளம் அமைப்பதுதான் இந்த வரவுசெலவுத்திட்ட ஆவணத்தில் நாங்கள் செய்துள்ளோம்.

நாம் இனி மற்றவர்களைச் சார்ந்து வாழும் தேசமாக மாற முடியாது. சுதந்திரத்தின் பின்னர் எமது முதலாவது அபிவிருத்தித் திட்டமான கல்ஓயா திட்டத்தை எமது சொந்த நிதியில் முன்னெடுத்தோம். அப்போது பிரிட்டனுக்கும் கடன் கொடுத்தோம். ஆனால் இன்று உலகம் முழுவதும் பிச்சை எடுக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் ஒரு ஏழை பாரம்பரியத்தை கொடுக்க வேண்டுமா? அல்லது பெருமைக்குரிய உடைமையா?

எனவே இந்த மாண்புமிகு சபையில் அனைத்து தரப்பினரும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணிகளில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். எம்மை விட சிறந்த வேலைத்திட்டம் இருந்தால் அதனை விரிவாக இந்த சபையில் முன்வையுங்கள். விவாதிப்போம். மிகவும் பொருத்தமான திட்டத்தை செயல்படுத்துவோம். வருங்கால சந்ததியினருக்கு பெருமை சேர்ப்போம்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக மாண்புமிகு பிரதமர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன். இராஜாங்க அமைச்சர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் கௌரவ செஹான் சேமசிங்க அவர்கள் எனக்கு எப்போதும் அதிகபட்ச ஆதரவை வழங்குகின்றார்கள்.

அவர்கள் இருவருக்கும் நன்றி. இவ்வருட வரவு செலவுத் திட்டத்திற்கு இச்சபையின் கௌரவ உறுப்பினர்கள் உட்பட அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பலரும் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதரவு வழங்கிய கௌரவ அமைச்சரவையின் சகோதரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க கடுமையாக உழைத்த திறைசேரியின் செயலாளர் மற்றும் பிற அரச அதிகாரிகளுக்கும், எனது பதவியணியினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.