இலங்கை இளைஞர் சமூகத்தின் பொதுக் கற்றலுக்கான கல்வித் தளம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

  • புதிய பொருளாதார மாற்றத்திற்காக இலங்கையும் டிஜிட்டல் மயமாக்கலுடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி.

இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk/ இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

Public Learn என்பது உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து இலவச பாடநெறிகளை பயனர்களை வழிநடத்தும் ஒரு தளமாகும். இந்த தளமானது ரீஜண்ட் குளோபல் நிறுவனத்தால் (Regent Global) இயக்கப்படுவதோடு இலங்கையில் இதனை அறிமுகப்படுத்த இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இளைஞர் சமூகத்தினருக்கான பொது கற்றல் தளத்தை (http://www.publiclearn.lk/) ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பொருளாதார மாற்றத்திற்காக இலங்கை டிஜிட்டல் மயமாக்கலுடன் வேகமாக முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.

மஹிந்த தேரரின் வருகையுடன் பிறந்த இலங்கையின் கல்வியானது படிப்படியாக 03 நிலைகளின் கீழ் பரவியதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று டிஜிட்டல் மயமாக்கலுடன் திறந்த தளத்தில் அறிவைப் பகிரும் நிலைக்கு முன்னேறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நன்மையை இலங்கை மக்களுக்கு கிடைக்கச் செய்தமைக்காக ரீஜண்ட் குளோபல் நிறுவனத்தின் (Regent Global)கலாநிதி செல்வ பங்கஜ் உள்ளிட்டோருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது,

இலங்கை மக்களுக்கு இந்த பயனை பெற்றுக் கொடுத்தமைக்காக முதலில் கலாநிதி செல்வ பங்கஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் அறிவு நிறைந்த சமூகத்தில் வாழ்கிறோம். அந்தச் சமூகத்தில் போட்டித்தன்மையுடன் முன்னேறுவது அவசியம். கல்வியில் நாம் முன்னணி நாடாக இருப்பதால் இது கடினமான காரியம் அல்ல என்று நான் நம்புகிறேன்.

தற்போது கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் . இந்த புதிய திட்டம் அதற்கு நல்ல பங்களிப்பை வழங்கும். கலாநிதி கெவின் அத்தகைய திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதன் நோக்கங்களையும் நன்கு விளக்கினார்.

எவ்வாறாயினும், ஒரு புதிய பொருளாதார மாற்றத்திற்கான நமது அணுகுமுறையில் மாற்றம் தேவை. நிச்சயமாக நம்மால் அதனை சாதிக்க முடியும்.

எதிர்காலத்தில் வகுப்பறைகள் மற்றும் சுவர்கள் இன்றி பாடசாலைக்கு வெளியிலான கற்றல் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வறான திட்டமே இன்று தொடங்குகிறது.
வகுப்பறைகளில் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை சவாலை சமாளிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும், இந்த வேலைத்திட்டம் இலங்கை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும், நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் எனக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும்.

எமது நாட்டில் கல்வி முன்னேற்றம் 03 நிலைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலில் மஹிந்த தேரர் இலங்கைக்கு புத்த மதத்துடன் வந்த போது பிரிவேனாக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
முக்தி அடையத் தகுதி பெறாதவர்களே எமக்குச் சொந்தமான கால்வாய்கள், சிகிரியா மற்றும் ஏனைய கட்டிடங்கள் மற்றும் சுகாதார கட்டமைப்பைத் திட்டமிடுவதில் நேரத்தைச் செலவிட்டதாக செனரத் பரணவிதான தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக, ஆங்கிலேயர்கள் வந்து அரச பாடசாலை கட்டமைப்பைத் தொடங்கினர். இது தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. அவற்றை நாம் மகா வித்தியாலயம், மத்திய மகா வித்தியாலயம் என்று அழைக்கிறோம். அதன்பிறகு நாங்கள் மதிப்புமிக்க மற்றும் தேசிய பாடசாலைகள் என்ற கருத்தை கொண்டு வந்த பின்னர் முழு பாடசாலை முறையும் இப்போது வளர்ந்துள்ளது.

தற்போது கல்வியின் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளோம். அதாவது கல்வி முறையை டிஜிட்டல் மயமாக்கி அறிவை திறந்த தளத்தில் பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியுள்ளோம். அங்கு நவீன அறிவை பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அறிவைப் பயன்படுத்துவதன் மூலமே நாடு முன்னேற முடியும்.

21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரம் என்ன என்பதை பாராளுமன்றத்தில் உள்ள சிலர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கும் சில வகுப்புகளை நடத்தலாம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இணைய வழியில் இந்நிகழ்வில் இணைந்து கொண்ட ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் கல்விச் செயலாளர் க்ராவின் வில்லியம்சன் (Sir Gravin Williamson),

பொதுக் கற்றலின் வளர்ச்சியானது, அனைத்து வயதினருக்கும் தொழில்களுக்குத் தேவையான திறன்களை உருவாக்குவதற்கும், அதிக பணம் சம்பாதிப்பதற்கும், உலகளவில் சமூகத்திற்கு மிகவும் திறம்பட பங்களிக்க தங்கள் கல்வியை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கி எதிர்கால அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன்று இலங்கை மக்களுக்கு தேவையான தளத்தை இது வழங்கியுள்ளது. அதன்படி, உலகளாவிய அரங்கில் போட்டியிடுவதற்கான அறிவு உங்களிடம் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதுடன், இலங்கை மக்களின் வாழ்க்கையை ஒரு புதிய மாற்றத்திற்கு இட்டுச்செல்ல இத்திட்டம் உதவ வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

ரீஜண்ட் குளோபலின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி செல்வா பங்கஜ்,

இலங்கையில் புதிய பொருளாதார மாற்றத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு வருகைதந்ததில் மகிழ்ச்சியடைகிறோம். முன்னாள் பிரதமராகவும் தற்போதைய ஜனாதிபதியாகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இலங்கை மக்களுக்காக அர்ப்பணித்த ஜனாதிபதி எமக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்றே கூற வேண்டும்.
2022 இல் பதிவான 70% பணவீக்கத்திலிருந்து நாம் அனைவரும் கண்ட கொந்தளிப்பான சூழ்நிலையில் இலங்கையை வெற்றிகரமாக வழிநடத்த அவரால் முடிந்தது. இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு சிறிதளவு பங்களிப்பதில் பெருமை கொள்கிறோம். நானும் எனது மனைவியும் எங்கள் வாழ்வின் ஆரம்ப காலத்தைஇலங்கையில் கழித்தோம் என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

உள்நாட்டுப் யுத்தத்திற்கு முன்பு நாங்கள் 13 மற்றும் 19 வயதில் இங்கிலாந்துக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் நாங்கள் எங்கள் தாய்நாட்டை மறக்கவில்லை. இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு நாம் எப்போதும் பங்களிக்க விரும்புகிறோம். எனவே அதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி இன்று எமக்கு வழங்கியுள்ளார்

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம, இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் (Andrew Patrick), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, கலாநிதி செல்வா பங்கஜ், தர்ஷனி பங்கஜ் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.