ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் நாட்டின் தலைமைப் பதவிக்கு வந்தேன்
- கட்சியை பிளவுபடுத்தி உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் வெறுப்பு மட்டுமே உள்ளது.
- அன்றும் இன்றும் நாட்டைக் கட்டியெழுப்புவது மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்காகும் – கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.
ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவுடன் பணியாற்றி, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் கட்சியைப் பாதுகாத்து, ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவுடனும் இணைந்து செயற்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமராகி, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப் பாரம்பரியத்துடன் நாட்டின் தலைமைப் பதவிக்கு தான் வந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தி ஐக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பினார் எனவும், அவரது தந்தையின் ஆட்சியில் கட்சி பிளவுபட்ட போது கட்சியைப் பாதுகாத்தவர் என்றவகையில் கட்சி பிளவுபட்டதற்கு வருந்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் (07) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதற்கு இடமளிக்காமல் இருந்திருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி இன்று பலமான கட்சியாக முன்னேறியிருக்கும் எனவும், கட்சியைப் பிளவுபடுத்தி, உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு ஜனாதிபதி பதவி வழங்கியதன் காரணமாக மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களுடன் இணைந்து பிரதமர் பதவியை ஏற்கத் தயாராகும் ஜக்கிய மக்கள் சக்தியில் இன்று கொள்கை அன்றி வெறுப்பு தான் உள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாது எனவும் இன்றைய காலத்தின் உண்மையான தேவை நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது தான் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:
”இன்று நாம் ஒரு வித்தியாசமான அரசியல் சூழலில் இங்கு கூடியுள்ளோம். 2022 இல் நாட்டின் பொருளாதாரம் மட்டுமன்றி அரசியல் கட்சி முறைமையும் உடைந்தது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றி மக்களை உயிர்ப்பிப்பதே இன்றைய நமது முதன்மையான பொறுப்பாகும்.
இந்த பொருளாதார நெருக்கடியை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்திலிருந்தே அடையாளங் கண்டிருந்தது. இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள 03 பில்லியன் டொலர்கள் தேவை என்று 2020 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிதான் அறிவித்திருந்தது.
ஆனால் ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்து சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியது. அவரது தந்தையின் ஆட்சியில் கட்சி பிளவுபடும் போது கட்சியை காத்தவன் நான் என்ற வகையில் அது தொடர்பில் வருத்தமடைகிறேன். இந்தக் கட்சியை உடையவிடாமல் நாம் முன்னேறியிருந்தால் இன்று அரசியல் ரீதியாக பலமான கட்சியாக இருந்திருப்போம். எங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை கைவிட்ட போது தங்களால் இதனை செய்ய முடியாது எனவும் முடியுமான தரப்பினருக்கு ஆதரவளிப்போம் என்றும் கூறினார்கள். அந்த சமயம் அவர்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஏன் எங்களால் ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியவில்லை. கட்சி பிளவுபட்டதன் காரணமாக இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதியினர் எதிர்க்கட்சியில் உள்ளனர். மேலும், நான் பிரதமராக பதவியேற்றதும் எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அந்த ஆதரவு கிடைக்கவில்லை.
அதன் பின்னர் இந்த நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. பிரதமராக இருந்த நான் ஜனாதிபதி பதவியை ஏற்கவிருந்தேன். ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி பதவியை விரும்புவதால் எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூறினார்கள். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கே நாட்டின் ஜனாதிபதி பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறிய சிலருடன் இணைந்து பிரதமராக வர முயன்றார்.
நாட்டின் நெருக்கடியான வேளையில் பிரதமருக்கு சந்தர்ப்பம் கொடுப்போம் என்று மொட்டுக் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் கூறினார்கள். ஆனால் மொட்டுக் கட்சியினர் மொட்டு உறுப்பினருக்குத் தான் ஆதரவு வழங்க வேண்டும் என்ற பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அதன் பிறகு, அவர் உட்பட ஒரு சிறு குழுவினர் எதிர்க்கட்சிக்குச் சென்றனர். ஜனாதிபதி தெரிவுக்கு மொட்டுக் கட்சி வேட்பாளரை நியமிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும நிறுத்தப்பட்டார். அப்போது சஜித் பிரேமதாச பிரதமராக வருவதற்கு தயாராக இருந்தார். ஆனால் முதலில் பிரதமர் பதவியை ஏற்க முடியாது என்று ஓடியிருந்தார்.
எப்படியோ நான் ஜனாதிபதியானேன். அரசியலைப் பற்றி சிந்திக்காமல், நாட்டைப் பற்றி சிந்தித்து அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரினேன். எப்படியோ எல்லோரும் இணைந்து இந்தப் பிரச்சனையைத் தீர்த்துவிட்டோம். மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கிராமங்களில் ஒன்றுக்கொன்று எதிராகச் செயற்பட்ட குழுக்கள். ஆனால் நாங்கள் நாட்டுக்காக ஒன்றுபட்டோம். தற்போது நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி எம்முடன் தான் இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி அன்று கூறியது.சிறிகொத்த மாத்திரம் தான் எம்மிடம் இல்லை என்றார்கள். எமக்கு அதிகாரத்தை தாருங்கள் சிறிகொத்தவை கைப்பற்றுவோம் என ஐக்கிய மக்கள் சக்தி கூறியது. ஆனால் தற்போது ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட மொட்டுக் குழுவுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.
இன்று சஜித்துடன் ரஞ்சித் மத்துமபண்டார மட்டுமே அமர்ந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வேறு யாரும் அங்கு இல்லை.
இன்றைய ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை. அப்படியானால் இன்று அவர்களை ஐக்கிய தேசியக் கட்சி என்று அழைக்க முடியாது. கடந்த தேர்தலில் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி தங்களிடம் இருப்பதாக கூறினார்கள். அப்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஒருபகுதியினர் அவர்களுக்கு வாக்களித்தனர். இப்போது ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட மொட்டுக் கட்சியினருக்கு ஐக்கிய மக்கள் சக்தி சரணடைந்துள்ள நிலையில், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி என்று எப்படி சொல்ல முடியும். அதனால் கிராமங்களில் ஜ.தே.கவினர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏமாந்துள்ளனர். அவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சுற்றி அணிதிரள வேண்டும்.
ஜே.ஆர் ஜயவர்தனவுடன் பணியாற்றி, ஜனாதிபதி பிரேமதாசவுடன் கட்சியைப் பாதுகாத்து, பின்னர் டி.பி.விஜேதுங்கவை ஜனாதிபதியாக்கி அதே கட்சியின் பிரதமரான பின்னர், நான் நாட்டின் தலைவராக தெரிவானேன். அப்படிப்பட்ட ஒரு தலைமுறை கொள்கைப் பாரம்பரியத்துடன் தான் நான் முன்னோக்கி வந்தேன். ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க சிலர் முயற்சித்தனர். எனவே ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க வாக்களித்த இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நாம் ஐக்கிய தேசியக் கட்சியாக இணைந்து செயற்பட வேண்டும். அதற்காக கிராமதிலுள்ள கட்சித் தொண்டர்களை ஒன்று சேர்க்க வேண்டும்.
இக்கட்டான நேரத்தில் நாட்டைக் காப்பாற்ற கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்தோம். மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் எனக்கு ஆதரவளிக்க உடன்பட்டார்கள். அப்போது மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையுடன் இணைய வேண்டியதாயிற்று. ஆனால் கட்சித் தலைவர் பெரும்பான்மைக்கு எதிராக செயல்பட்டார். இங்கே வெறுப்பு தன் இருக்கிறது. கொள்கைகள் அல்ல. ஆனால் எங்களுக்குள் வெறுப்பு இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்யவே விரும்புகிறோம்.
இன்று நாட்டின் பொருளாதார நிலை அன்று இருக்கவில்லை. இன்று அனைத்து மக்களுக்கும் வாழும் உரிமை கிடைத்துள்ளது. பொருளாதார ரீதியில் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறோம். அதற்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்.
இன்று நாம் ஆரம்பித்துள்ள அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத்திட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் உள்ளன. எனவே, இந்தத் திட்டத்தை ஜக்கிய மக்கள் சக்தி எதிர்க்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் டி.எஸ். சேனநாயக்காவின் கட்சியில் தான் இருக்கிறது. அந்தக் கட்சியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஜே.ஆர். ஜெயவர்தனவின் நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்தோடு 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்தை பாதுகாத்தவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இருக்கிறார்கள் என்ற செய்தியை கிராமத்திலுள்ள கட்சித் தொண்டர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச, ஐக்கிய லக்வனிதா முன்னணியின் தலைவி சாந்தினி கொங்கஹகே, கண்டி மாநகர சபையின் முன்னாள் மேயர் கேஷர சேனாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்டத் தலைவர் சானக ஐலப்பெரும உட்பட பெருந்தொகையான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.