பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டு
இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா பாராட்டு தெரிவித்தார்.
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவுபடுத்தல், இலகு ரயில் (LRT) திட்டம் உட்பட ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீள ஆரம்பிப்பதே ஜப்பான் அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் கைச்சாத்திடுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்காக தொடர்ச்சியாக முன்னிலையாகும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கமிகாவா, அதற்காக இலங்கையில் மேற்கொள்ளப்படும் புதிய சட்டத் திருத்தங்கள் உள்ளிட்ட சாதகமான நடவடிக்கைகளுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
இதன்போது, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வரலாற்று உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதே தனது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளையில் ஜப்பான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஜனாதிபதி நன்றி கூறினார்.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழும்பகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.