குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் கல்வியை இடைவிடாது தொடர வேண்டும்

  • சாதாரண மாணவர்களுக்கு மேலதிகமாக பிரிவெனா மாணவர்களின் புலமைப் பரிசில் திட்டத்திற்கு மட்டும் வருடாந்தம் 300 மில்லியன் ரூபா – ஜனாதிபதி தெரிவிப்பு.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான அனைத்து மாணவர்களும் கல்வியை இடைவிடாது தொடர வேண்டும் எனவும் இதற்காக ஜனாதிபதி நிதியம் புலமைப் பரிசில்களை வழங்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சாதாரண தர, உயர் தர மாணவர்களைப் போன்று பிரிவெனா மற்றும் பிக்குனிகளுக்கான கல்வி நிறுவனங்களில் கற்கும் பிக்குகள் மற்றும் பிக்குனிகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் 3000 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (24) அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தின் கீழ் மற்றுமொரு புலமைப்பரிசில் திட்டமாக முழு நாட்டையும் உள்ளடக்கி இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ் பிரிவெனாக்களில் சாதாரண தரம் வகையில் கற்கும் பிக்குகள் மற்றும் பிக்குனிகள், சாதாரண மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.3000 ரூபாய் என்ற அடிப்படையில் 12 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன், நிலுவைத் தொகை உள்ளடங்களாக ரூ.9000 மாணவர்களின் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்பட்டது. எதிர்வரும் மாதங்களில் ரூ.3000 வீதம் புலைமைப்பரிசில் கொடுப்பனவு மாதாந்தம் வைப்புச் செய்யப்படவுள்ளது.

மேலும், பிரிவெனா (சாதாரண தரம் ) க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த பிரிவெனா பரீட்சை அல்லது க.பொ.த (உயர்தரம்) பரீட்சையில் தோற்றும் மாணவ பிக்குகள், பிக்குனிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.6000 என்ற அடிப்படையில் அவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் வரையில் 24 மாதங்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட உள்ளது.

இன்று புலமைப்பரிசிலை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களுக்கு நிலுவைத் தொகையும் உள்ளடங்களாக ரூ.18,000 வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது.

இந்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்விற்கு அழைக்கப்படாத ஏனைய பிக்குகள், பிக்குனிகள், பிரிவெனாக்கலில் கற்கும் ஏனைய மாணவர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் புலமை பரிசில் வழங்கப்படும்.

பிரிவெனாதிபதிகளால் இந்த புலமைபரிசிலுக்கான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு, கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனர். இதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து வருடாந்தம் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“ஜனாதிபதி நிதியத்தின் புலைமைபரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் மற்றுமொரு புதிய திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். அதனால் பிரிவெனாக்களில் பயிலும் சாதாரண மாணவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. அவர்களுக்குரிய தொகையை வங்கிகளில் வைப்புச் செய்துள்ளோம்.

கடந்த நான்கு வருடங்கள் கஷ்டத்திலிருந்த நாடு இன்று வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருகின்ற காரணத்தினால் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியுள்ளது. அதற்காகவே ‘அஸ்வெசும’, ‘உறுமய’ போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பல புலமைப்பரிசில் திட்டங்களை அறிமுகப்படுத்தினோம்.

நாட்டின் பொருளாதாரச் சரிவினால் கிராமப் பகுதிகளில் இருந்த விகாரைகளும் பிக்குகளும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. எத்தகைய காரணங்களுக்காகவும் பிக்குகளின் கல்வி நிலை சரிவடைய இடமளிக்க கூடாது.

அதற்காகவே இந்த திட்டத்தை பிக்குகளுக்காகவும் பிக்குனிகளுக்காகவும் செயற்படுத்துகிறோம். புத்த சாசனம் குறித்து கவனம் செலுத்தும்போது பிக்குகள் சமுதாயத்தைக் கட்டியெழுப்பக்கூடிய சூழலை நாட்டில் உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக முன்னெடுக்ககூடிய முக்கியமான திட்டமாக இந்த புலைமைப் பரிசில் திட்டத்தைக் குறிப்பிடலாம்.

நாட்டில் பௌத்த கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இது மேம்படுத்தப்பட வேண்டும். பிரிவென் முறைமை ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு உதவிகளை வழங்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. நாட்டில் எத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும் ஒருபோதும் அதற்குரிய பொறுப்புக்களை கைவிடப்போவதில்லை.” என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான கலாநிதி சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, பிரதீப் உந்துகொட, மேல் மாகாண ஆளுநர் விமானப்படை மார்ஷல் ரொஷான் குணதிலக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் தலைவருமான சரத் குமார உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.