ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகள் தலைமையில் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு
- உமாஓயா திட்டம் எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஈரான்-இலங்கை ஒத்துழைப்பின் அடையாளமாகும் – இலங்கை ஜனாதிபதி
- இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை விரிவுபடுத்துவதில் எல்லையோ தடையோ இல்லை – ஈரான் ஜனாதிபதி
காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, கடனைத் திருப்பிச் செலுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றுதல் போன்ற தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் தமது குரலுக்கு செவிசாய்க்கப்படுவதை உறுதிசெய்ய கூட்டாக செயற்படுவது அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியுடன் (24) மாலை இடம்பெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் பின்னர் இரு நாட்டு ஜனாதிபதிகள் தலைமையில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இராஜதந்திரம் மற்றும் கலந்துரையாடல் மூலம் பிராந்தியத்தில் மட்டுமன்றி உலகில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தை உருவாக்க இலங்கையும் ஈரானும் இணைந்து செயற்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானிய ஜனாதிபதி ரைசியின் இலங்கை விஜயம் இருதரப்பிற்கும் நன்மை பயக்கும் எனவும் தெரிவித்தார்.
நாடுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் பேசிய ஜனாதிபதி, இலங்கையும் ஈரானும் பலஸ்தீன மக்களுக்கான அரசை கட்டியெழுப்ப சட்டபூர்வமான மற்றும் பறிக்க முடியாத உரிமையை அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.
1967ஆம் ஆண்டு நிலவிய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு அண்மித்த இரண்டு நாடுகளை அமைப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த முன்மொழிவுக்கு இணங்க, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் பரந்துபட்ட அரசியல் தீர்வை ஆதரிப்பதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், ஏப்ரல் 24ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட உமா ஓயா திட்டம், எரிசக்தி உற்பத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பின் அடையாளமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்தத் துறைகளில் உலகளாவிய தென்பிராந்திய நாடுகளுக்கு இடையே தற்போதுள்ள ஒத்துழைப்புக்கு இந்த திட்டம் ஒரு முன்மாதிரியாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாச்சார உறவுகளை விரிவுபடுத்துவதில் எல்லையோ தடையோ இல்லை என இங்கு உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நன்மைகள் அடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஈரான் ஜனாதிபதி, ஈரானுக்கும் இலங்கைக்கும் மிக உயர்ந்த ஆற்றல்கள் மற்றும் திறன்கள் இருப்பதாகவும், இந்த வாய்ப்புகளை இரு நாடுகளுக்கிடையில் பரிமாறிக்கொள்வது இரு நாடுகளுக்கும் மட்டுமன்றி இரு பிராந்தியங்களுக்கும் நன்மை பயக்கும் எனவும் குறிப்பிட்டார்.
கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
”எனது அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் செய்து, உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் 120 மெகாவோர்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்பில் சேர்ப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாங்கள் இணைந்து திறந்து வைத்தோம். இத்திட்டமானது இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளை அதிகரிப்பதுடன், உணவு உற்பத்தி, நிலையான மின்சார விநியோகம் மற்றும் பிரதேச இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு பங்களிக்கும்.
உமா ஓயா திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியதற்காக மட்டுமல்லாமல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் அறிவைப் பகிர்ந்ததற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திட்டத்தின் ஊடாகக் கிடைக்கும் பலனை அப்பகுதி மக்களுக்கு வழங்கியுள்ளோம். பாரசீகம் மற்றும் இலங்கையின் அனுராதபுர காலத்தின் இரண்டு பண்டைய நீர்ப்பாசன மரபுகளின் நவீன கால கலவையாக இந்த திட்டத்தை நான் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
நவீன உலகின் தேவைகளான அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் எரிசக்தி உற்பத்தி ஆகிய துறைகளில் பெரும் சாதனை படைத்திருக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசை நான் வாழ்த்துகிறேன்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டம், எரிசக்தி உற்பத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பின் அடையாளமாக மாறி, உலகளாவிய தெற்கு நாடுகளுக்கிடையில் தற்போதுள்ள ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எமது கலந்துரையாடல்களின் போது, இலங்கையின் கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர், இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு வழங்கிய ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இலங்கையின் அண்மைய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சி குறித்தும் நான் ஜனாதிபதி ரைசியிடம் தெரிவித்தேன். மேலும் இலங்கையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் குறித்து ஜனாதிபதி ரைசி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், எங்கள் கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய பகுதிகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்தினோம்.
எமது உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், கலாச்சாரம், கல்வி, இளைஞர் விவகாரம், ஊடகம், சுற்றுலா மற்றும் சினிமா ஆகிய துறைகளில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஈரான் அரசாங்கத்திற்கும் இடையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இந்தத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பிற்கான பெரும் சாத்தியக்கூறுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கும் நாங்கள் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா நாடுகளின் அமைப்பு (NAM), G-77 அமைப்பு மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் அமைப்பு (IORA) போன்ற பிற குழுக்கள் உட்பட பலதரப்பு மற்றும் பிராந்திய அமைப்புகளில் இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பலதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தற்போதைய உலகளாவிய சவால்கள் குறித்து திறந்த மற்றும் பயனுள்ள உரையாடலில் ஈடுபட்டுள்ளோம்.
காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, கடனைத் திருப்பிச் செலுத்துதல், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பப் பிளவு, அத்துடன் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைதல் போன்ற தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் உலகளாவிய தெற்கு நாடுகள் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
உலகளாவிய தெற்கின் நாடுகள் தங்கள் சொந்த பலத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.
இலங்கையும் ஈரானும் இணைந்து இராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலம் பிராந்தியத்திற்கு மட்டுமன்றி உலகிற்கும் சமாதானம், பாதுகாப்பு மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பாலஸ்தீனத்தின் பாரதூரமான நிலைமை மற்றும் பாலஸ்தீனம் அனுபவிக்கும் கடும் துன்பங்கள் குறித்து எங்களின் ஆழ்ந்த கவலையை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
1967 ஆம் ஆண்டு நிலவிய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு அண்டை நாடுகளை ஸ்தாபிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளுக்கு இணங்க, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் பரந்த அளவிலான அரசியல் தீர்வை ஆதரிப்பதில் இலங்கை உறுதியாக உள்ளது.
அத்தகைய எந்தவொரு தீர்வின் போதும் முதலில் காஸாவில் படுகொலைகளை நிறுத்த வேண்டும். இரண்டாவதாக, ஐந்து ஆண்டுகளுக்குள் பாலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும். மூன்றாவதாக, இறையாண்மை கொண்ட நாடுகள் மதிக்கப்பட வேண்டும், நான்காவதாக, அனைத்து நாடுகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி உடனடியாக காஸாவில் நடக்கும் கொலைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், அதற்குத் தீர்வு காண்பது கடினமாகும்.
ஐ.நா கட்டமைப்பை செயலிழக்கச் செய்வதன் ஊடாக , ஐ.நாவைப் போலவே, அந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்க வழிவகுக்கும். நமது வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை நாம் அடைந்துள்ளோம்.
இலங்கை அரசாங்கம் “காசா குழந்தைகள் நிதியத்தை” ஸ்தாபித்து காசாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணச் செயற்பாடுகளுக்கான முகவர் நிறுவனமான UNRWA இற்கு 2024 ஏப்ரல் 1 ஆம் திகதி நன்கொடையாக வழங்கியிருந்தது.
ஈரான் ஜனாதிபதியின் வருகை இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்றும், ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன்.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி ரைசியின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும், ஈரானிய மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காகவும் எனது நல்வாழ்த்துக்களை கூறுகிறேன்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி,
“இலங்கை போன்ற நாட்டிற்கு எனது குழுவுடன் வர முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஈரான் இஸ்லாமிய குடியரசின் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் வலுவான ஒத்துழைப்புடன் இலங்கையால் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு சிறந்த திட்டத்தை இன்று மக்களிடம் கையளிக்க கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் சாதாரண திட்டமல்ல. இலங்கை மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, ஈரான் தொழில் வல்லுநர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடனும், நிபுணத்துவத்துடனும் செய்து முடித்திருக்கும் திட்டமாகும்.
இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியின் பின்னர், இலங்கையுடன் வலுவான இருதரப்பு உறவுகளை ஏற்படுத்த ஈரான் முயற்சித்துள்ளது. பல வருடங்களாக இந்த உறவுகள் விரிவடைந்து வருகின்றன. இன்று இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் வலுவான கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், கலாச்சாரம், விவசாயம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம்.
ஈரானும் இலங்கையும் நட்பு நாடுகள். இரு நாடுகளிலும் சிறந்த ஆற்றல்களும் திறன்களும் உள்ளன. இந்த திறன்களை பகிர்தல் மற்றும் பரிமாற்றம் செய்துக்கொள்ளும் பட்சத்தில் இரு நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும், நன்மை கிட்டும் என நம்புகிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக, விவசாய, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஈரான்-இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி கூறுகிறேன்.
அச்சுறுத்தல்களாலும் பொருளாதாரத் தடைகளாலும் ஈரான் மக்களைத் தடுத்து நிறுத்த முடியாது. நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்தை எவராலும் சீர்குலைக்க முடியாது என்பதையும் அன்பான இலங்கை மக்களுக்குத் தெரிவிக்கிறேன்.
மேலும், இன்றளவில், ஈரான் இஸ்லாமிய குடியரசை தொழில்நுட்ப வளர்ச்சியில் உயர் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறலாம். பொறியியல் மற்றும் தொழிநுட்பத்துறையில் எமது நிபுணத்துவத்தை இலங்கையுடன் பகிர்ந்துகொள்வதற்கு தயாராக உள்ளோம்.
இதனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க எம்மால் முடியும். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்கு சிறந்த உதாரணமாகும்.
பாலஸ்தீன் இன்று முஸ்லீம் நாடுகளுக்கும், முஸ்லிம்களுக்கும், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது.
அதேநேரம் இது பாலஸ்தீன் மற்றும் காஸா மக்களுக்கு எதிரான பெரும் அநீதியாகும். மனிதாபிமானத்திற்கு எதிரான கொடூரமான குற்றமாகும். அதனால் அனைத்து மக்களும் கவலை கொள்கின்றனர். ஆனால், காசாவிலும் பாலஸ்தீனத்திலும் நடக்கும் இனப்படுகொலை மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏன் சர்வதேச நிறுவனங்களும் அமைப்புகளும் தடுக்க முன்வரவில்லை என்பது கேள்விக்குரியாகும்.
இன்று காஸா எல்லையில் குற்றங்கள் மற்றும் குழந்தைகள் படுகொலைகளை காண்பது வருத்தமளிக்கிறது. முஸ்லிம்கள் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரும் இதனை கண்டிக்கின்றனர்.
விலங்குகள் கூட செய்யாத வகையில் மனித உருவில் உள்ள மற்ற உயிரினங்கள் போன்று இவ்வாறான குற்றங்களைச் செய்கின்றனர் என்பதே பலரினதும் நிலைப்பாடாகும். பல மாதங்களுக்குப் பிறகும், இந்த குழந்தைக் கொலைகள், படுகொலைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இதனை ஆதரிக்கப்பது வருத்தமளிக்கிறது. அதற்கு காரணம் என்னவென மக்கள் கேட்கிறார்கள்.
இறுதிவரை இந்த இனப்படுகொலை அல்லது இந்தக் குற்றங்களுக்கு எதிராக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையும் ஏனைய மனித உரிமை அமைப்புகளும் அவற்றின் செயல்திறனை இழந்திருப்பது துரதிர்ஷ்டவசமாகும்.
சியோனிச இஸ்ரேலிய ஆட்சியில் காசாவின் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும், இந்த அப்பாவி மக்களுக்கு தண்ணீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட உடனடி உதவிகளை வழங்குவது தொடர்பிலான எங்களின் நிலைப்பாடு குறித்தும் இலங்கை ஜனாதிபதியுடன் ஆலோசித்தேன்.
பாலஸ்தீனத்தின் கோரிக்கையும் அதற்கான தீர்வு என்பனவே இங்குள்ள முக்கியமான பிரச்சினையாகும். அதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒரு முழுமையான ஜனநாயக தீர்வைத் தொடங்கியுள்ளது. அதன்படி பாலஸ்தீனியர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படும். அதன்படி பாலஸ்தீனியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்கும்.
அதன்மூலம் அடுத்த அரசாங்கத்தை அவர்களால் தீர்மானிக்க முடியும். இது நியாயமானதும் ஜனநாயகமுமான முயற்சியாகும். அடக்குமுறை அடிப்படையில் சியோனிச இஸ்ரேலிய ஆட்சி பாலஸ்தீன மக்களை 75 ஆண்டுகளாக ஒடுக்கி வருகிறது. சொந்த நிலங்கள் சூறையாடப்படுகின்றன. எனவே, கொள்ளையர்களுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் அவர்களின் நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க இடமளிக்க கூடாது.
அதற்காக முதலில் அடக்குமுறை செய்வோரை விரட்டியடிக்க வேண்டும். பின்னர் அவர்களால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதனையடுத்து அடக்குமுறையாளர்களையும் கொள்ளையர்களையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
ஒரு தரப்புக்குச் சொந்தமான நிலங்களையும் பிரதேசங்களையும் இன்னொரு தரப்பு பயன்படுத்தாது அல்லது கையகப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாம் அவர்களை நீதியின் முன் நிறுத்தாவிட்டால், அவர்களின் ஆக்கிரமிப்புகள் தொடரும்.
அவர்கள் தங்கள் மக்களையும், தங்கள் பெண்களையும், குழந்தைகளையும் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறும்படி வற்புறுத்துவார்கள். உலகில் சரியான இடம் கிடைத்துள்ளது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். சியோனிச இஸ்ரேலிய ஆட்சியின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் சர்வதேச நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வது, குடியிருப்பாளர்களை அவர்களின் நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது போன்ற செயல்களை எவரும், எந்த குழுவும் செய்யக்கூடாது.
எங்களை வரவேற்று உபசரித்த இலங்கை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஈரான் அரசாங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
அத்துடன், இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாச்சார உறவுகளை விரிவுபடுத்துவதற்கு எல்லையோ தடையோ இல்லை. அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் நமது இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளும் உறுதியுடன் செயற்பட வேண்டும். இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதால் பல நன்மைகள் கிட்டுமென நம்புகிறேன்.” என ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.