புத்த சாசனத்திற்காகவும் சமூக நலனுக்காகவும் வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரர் பெரும் பங்காற்றினார்- ஜனாதிபதி

பரந்துபட்ட சமய மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்ட வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரர் ஒரு அரிய மதத்தலைவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜாதி, மதம் பாராது செயற்பட்ட அவர் அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கங்காராம விகாரை எனும் தர்ம சமூக மையத்தை பாதுகாப்பதே அவருக்கு நாம் செய்யும் உயரிய கெளரவம் எனவும் கூறினார்.

ஹுணுபிட்டி கங்காராம விகாரையின் வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

தேரரின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இன்று (5) பிற்பகல் கங்காராம விகாரை வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“40 ஆண்டுகளுக்கு முன்பு, நானும் பொடி ஹாமுதுருவும் வாசீஸ்ஸர நாயக்க தேரரின் இறுதிச்சடங்கை ஏற்பாடு செய்தோம். ஆனால் இன்று நான் அன்னாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வந்திருக்கிறேன். இன்று நான் இந்த நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதியாகவும் இந்த ஆலய சபையின் உறுப்பினராகவும் இணைந்து கொள்கின்றேன். எனக்கும் கங்காராம விகாரைக்கும் பல தொடர்புகள் உள்ளன.

தெவுந்தர வாசீஸ்ஸர நாயக்கரை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். அந்த சமயத்தில் நான் எங்கள் பொடி ஹாமுதுருவவை சந்தித்தேன். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். நான் பியகம தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது அவர் எனக்குப் பெரும் ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

கொழும்பில் பெரஹர நடத்தப்பட வேண்டும் என்று அவர் ஒரு தடவை என்னிடம் சொன்னார். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் பிரதமர் ரணசிங்க பிரேமதாச ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் அந்த செயற்பாடுகளை ஆரம்பித்தோம். இன்று நவம் பெரஹர இந்நாட்டில் பிரதான பெரஹரவாக மாறியுள்ளது. அதற்குக் காரணம் நமது பொடி ஹாமுதுருவவின் எல்லையற்ற அர்ப்பணிப்புத்தான்.

மேலும், பின்தங்கிய விகாரைகளுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றினார். அதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் உலகின் பௌத்த நாடுகளுடன் தொடர்புகளைப் பேணினார். பூட்டான், தாய்லாந்து, வியட்நாம், சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தப் பிரதேசத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடங்கினார். இதன் மூலம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பது மட்டுமின்றி, நிறுவனங்களை வேலைக்கு அமர்த்தவும் உதவினார். மேலும் சமூகத்தின் பல செயல்பாடுகளுக்கும் பங்களித்தார். ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார்.

மேலும் அவர் இன மத பேதம் பாராது சேவையாற்றினார். 1983 கலவரத்தின்போது, ​​அகதிகள் இருந்த இடங்களுக்கு உணவு எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் அவர் முன்வந்து உதவிப் பொருட்களை லொறிகளில் ஏற்றிப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்தார்.

அரசியல் விவகாரங்களிலும் அவர் பெரும் பங்காற்றினார். ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, மஹிந்த ராஜபக்சவுடனும் என்னுடனும் அவர் நெருக்கமாக பணியாற்றினார். மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது, ​​அது பற்றி ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ பேசுவதற்காக மக்கள் அன்னாரைத்தான் சந்திப்பார்கள்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர்கள், மத குருமார், பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, முன்னாள் அமைச்சர்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், தூதுவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.