நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்
- எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி அரசாங்கத்துடன் ஒன்றிணைவதாகும்.
- பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆதரித்திருந்தால், சில மாதங்களுக்கு முன்பே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்து இருக்கலாம்.
நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்த வழி எனவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பெறும் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் அரசாங்க அதிகாரத்தைப் பெற முயற்சிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளுடன் இன்று (25) பிற்பகல் மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
மாத்தளை மாவட்ட பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். சில பிரச்சினைகளுக்கு அதே இடத்தில் தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை எனவும், ஆளும் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க தான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளும் தமக்கு வழங்கிய ஆதரவை நன்றியுடன் நினைவு கூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்..
அவ்வாறு ஏற்றுக்கொண்ட நாட்டை சரியான திசையில் கொண்டு சென்று பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து 5 வருடங்கள் சென்றாலும் மீட்க முடியாது என எதிர்கட்சி அரசியல்வாதிகள் கூறினாலும், 16 மாத குறுகிய காலத்தில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தப் பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தால் ஒரு சில மாதங்களுக்கு முன்னரே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடிந்திருக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை பாராட்டிய பிரதேச அரசியல் பிரதிநிதிகள், எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டங்களுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
“2021 முதலில் ஒரு நாடு என்ற வகையில் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டோம். 2022 இல், இது ஒரு நெருக்கடியாக மாறியது. நாட்டின் அனைத்து விவகாரங்களும் முடங்கியது. நாடு பணத்தை இழந்தது. வருமானம் இல்லாமலானது. அதே நேரத்தில், அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் நிறுத்தப்பட்டன. நாம் வங்குரோத்து அடைந்த நாடாக மாறியதால், வெளிநாடுகளின் உதவியையும் இழந்தோம்.
அந்த சவாலான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்போம் என்று சொன்னவர்கள் கைவிட்டுச் செல்லும்பொது, அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதன்போது, அரசியல் வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் எனக்கு உதவின. எவ்வாறாயினும், நாங்கள் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றோம்.
நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது, வீழ்ச்சியடைந்துள்ள இந்தப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப 04 – 05 வருடங்கள் ஆகும் என்று பலர் கூறினார்கள். இதற்குத் தீர்வு இல்லை என்று பலர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றனர். நாங்கள் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனும் ஏனைய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு வங்குரோத்து என்ற முத்திரையில் இருந்து விடுபடும் என நான் எதிர்பார்க்கிறேன். இந்த நடவடிக்கைகளுக்காக எங்களுக்கு 16 மாதங்கள் தேவைப்பட்டன. எதிர்க்கட்சிகள் எங்களை ஆதரித்திருந்தால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னரே இதை நிறைவேற்றியிருக்கலாம்.
நாம் கடினமான பயணத்தையே மேற்கொண்டோம். எவ்வாறாயினும் அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்க முடிந்துள்ளது. இவ்வாறு செய்ய முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. மேலும், சமுர்த்தியைப் போன்று மூன்று மடங்கு அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது. இவை கடினமான நேரத்திலே செய்யப்பட்டன. மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்களின் மேம்பாட்டிற்காக பணத்தை வழங்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
நான் அத்தோடு நிற்கவில்லை. இந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முடிந்த அளவு நிவாரணங்களை வழங்கவே நான் முயற்சிக்கிறேன். அதற்காக நாட்டில் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. நவீனமயமாக்கலின் முதல் படி உரிமையாகும். இதன்படி காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தச் செயற்பாடுகளை மாவட்ட அபிவிருத்திக் குழுக்களிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன். இந்தத் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். இது யாராலும் செய்ய முடியாத காரியம். ஏனையவர்கள் வெறுமனே கதை பேசினார்கள். ஆனால் நாங்கள் அனைவரும் இணைந்து இவற்றை நடைமுறைப்படுத்தினோம்.
இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எமக்காக அல்ல, நம் குழந்தைகளுக்காக, குழந்தைகளின் குழந்தைகளுக்காக ஒரு நல்ல நாட்டை உருவாக்க வேண்டும். நாம் அவர்களுக்காக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி மாத்திரமே கவலைப்படுகிறார்கள். எவ்வாறு ஆட்சியைப் பிடிப்பது என்று சிந்திக்கிறார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி எங்களுடன் இணைவதே என்று நான் அவர்களுக்குக் கூறுகின்றேன். எங்கள் அனுபவத்தைப் பெற்று அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்குமாறு நான் அவர்களிடம் கூறுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்வோம்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன், மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க. , மத்திய மாகாண சபைத் தலைவர் எல். டி.நிமலசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.