விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி அரச வருமானத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
- சிறு ஏற்றுமதிப் பயிர் விளைச்சலை ஊக்குவிப்பது குறித்து விசேட கவனம்.
- மாத்தளை மாவட்டத்தை விவசாய மாவட்டமாக அபிவிருத்தி செய்யத் திட்டம்.
- கொக்கோ பயிர்ச்செய்கையை பிரபலப்படுத்த விசேட வேலைத்திட்டம்.
- மாவட்டக் குழுக் கூட்டங்களில் பணம் செலவழிப்பதைப் போன்று பணம் வசூலிப்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கவும்.
- இலங்கை மக்களின் காணி உறுதிகள் தொடர்பான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இதன்படி, சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் எனவும், கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கொகோ பயிர்ச்செய்கையை பிரபலப்படுத்தி எதிர்காலத்தில் கோபி மற்றும் கறுவாச் செய்கையை மீண்டும் வலுப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரம் பெற்ற காணி உரிமையாளர்களுக்கு முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினத்திற்கு இணயாக நாடு பூராகவும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் இன்று (25) இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
மலையக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னேற்றம் அடையாத கிராமங்களின் அபிவிருத்திக்காக பிரதேச செயலகம் ஒன்றிற்கு வழங்கப்படும் 10 மில்லியன் ரூபா நிதியை அடுத்த ஐந்து வருடங்களுக்கும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அனைத்து மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் நிதிச் செலவினங்கள் குறிப்பிடப்பட்டாலும் மாவட்டத்தில் வருமானம் ஈட்டுவதற்கான புதிய ஆலோயோசனையை அதிகாரிகள் முன்வைப்பதில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வருமானம் ஈட்டும் புதிய வழிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
இதன்படி, மாத்தளை மாவட்டத்தை விவசாய மாவட்டமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் முறையான திட்டத்தின் மூலம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.
மாத்தளை மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்ட இச்சந்திப்பில், மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியின் தலையீட்டின் ஊடாக நேரடியான தீர்வுகளை வழங்க முடிந்தது.
மனிதாபிமான பிரச்சினையாக இருந்த சிறுநீரக நோயாளர்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, இடம்பெயர்ந்த அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு காணி வழங்குதல், நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்தல், கலேவெல – தம்புள்ள – ஹபரணை ஆகிய பிரதேசங்களை ஒரே வலயமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் நீண்ட கால பிரச்சினையாக இருந்த காட்டு யானைகள் பிரச்சினை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கல்வி தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் முன்வைக்கப்படாமை குறித்து வினவிய ஜனாதிபதி, அரசாங்கம் கல்வி தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
உயர்தரப் பரீட்சையில் அதிகளவான மாணவர்கள் தோற்றுவதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி தேசிய பொருளாதாரத்திற்கு அவர்கள் பங்களிக்கும் முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இங்க மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
மாவட்ட அபிவிருத்தி நிதியை ((DCB)) மாவட்டக் குழுவிடம் ஒப்படைக்க இந்த ஆண்டு எதிர்பார்க்கிறோம். மேலும், மலையகத்தில் அபிவிருத்தி செய்யப்படாத பிரதேசங்களின் அபிவிருத்திக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் தலா 10 மில்லியன் ரூபா வழங்கப்படுகின்றது. அடுத்த 05 வருடங்களும் அதனைத் தொடர்ந்து வழங்க எதிர்பார்க்கின்றோம்.
கொவிட் தொற்றுநோய் மற்றும் கடந்த கால பொருளாதார நெருக்கடி காரணமாக, பல்வேறு திட்டங்கள் இடைநடுவே நிறுத்தப்பட்டன. வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டதாக உறுதியடைந்த பிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த நிதிகள் மீண்டும் எமக்குக் கிடைக்கும். அதன்படி, இந்த திட்டங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக கலேவல – தம்புள்ள – ஹபரணை பிரதேசங்கள் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஹிங்குரக்கொட விமான நிலையத்தின் அபிவிருத்தியுடன் இப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. எனவே, இம்மூன்று நகரங்களும் ஒரு திட்டத்தின்படி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
மேலும், நில மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து நில உரிமங்களும் காணி உறுதிப் பத்திரங்களாக மாற்றப்படும். அதன் முதல் கட்டமாக தம்புள்ளை விளையாட்டரங்கில் 10,000 காணி உறுதிகள் வழங்கப்படும். அத்துடன், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் கீழ் வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை கொழும்பில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டக் குழுக் கூட்டத்திலும் பணத்தை எப்படிச் செலவிடுவது என்பதுதான் கேள்வி. ஆனால், இந்தச் செலவுகளுக்கான பணத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது என்பதுதான் எனக்குள்ள கேள்வியாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின்படி, எமக்கு இப்போது பணத்தை அச்சிட முடியாது. மத்திய வங்கி சட்டத்தில் இருந்து அது நீக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களால் கடன் பெறவும் முடியாது. நாங்கள் செலுத்த வேண்டிய கடன் அதிகமாக உள்ளது. எனவே, எதிர்காலத்தில் நாம் வருமானம் ஈட்டுவதன் ஊடாகவே செயற்படவேண்டியுள்ளது.
மேலும், வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை மற்றும் வர்த்தகக் கையிருப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எங்களுக்கு சரியான திட்டங்கள் இருக்கவில்லை. குறிப்பாக அடுத்த வருடத்திலிருந்து இவ்விரு துறைகள் குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அதன்படி, மாவட்ட அளவில் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.
இதற்காக, நாட்டை விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி மீண்டும் கொண்டு செல்ல வேண்டும். 1972க்குப் பிறகு விவசாயப் பொருளாதாரத்தை மறந்துவிட்டோம். சிறு தேயிலைத் தோட்டத் துறையின் வளர்ச்சியைத் தவிர, வேறு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. எனவேதான் நாம் உடனடியாக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு திரும்ப வேண்டும்.
இதனை ஒரேயடியாக செயற்படுத்த முடியாவிட்டாலும் 05 முதல் 10 வருடங்களில் அந்த இலக்குகளை அடைய முடியும். கமநல சேவை மையங்களை, விவசாய நவீனமயமாக்கல் மையங்களாக மாற்ற வேண்டும். அதற்குத் தனியார் துறையினரின் பங்களிப்புகளையும் பெறவேண்டியுள்ளது. தற்போதுள்ள பயிர்களின் விளைச்சலை அதிகரிப்பதுடன் புதிய பயிர்களை பயிரிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மாத்தளை மாவட்டம் விவசாயத்திற்கு சிறந்த மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மலையகப் பயிர்கள் மற்றும் ரஜரட்ட பயிர்கள் இரண்டையும் இங்கு பயிரிடலாம். எனவே, இந்தப் பிரதேசத்தை ஒரு புதிய திட்டத்தின்படி அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
பல நிறுவனங்கள் ஏற்கனவே கொகோ பயிரிடுதல் தொடர்பில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. குவாத்தமாலாவிற்கு அடுத்தபடியாக இலங்கையில் தான் சிறந்த கொக்கோ உள்ளது. ஆனால் இப்போது இலங்கையில் கொக்கோ இல்லை. எனவே, மாத்தளை, கண்டி மற்றும் குருநாகல் போன்ற பிரதேசங்களில் மீண்டும் கொகோ பயிர்ச்செய்கையை பிரபலப்படுத்த எதிர்பார்க்கின்றோம். அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
அதன் பிறகு, கோபி பயிர்ச்செய்கை நோக்கித் திரும்ப எதிர்பார்த்துள்ளோம். மேலும், கறுவா பயிர்ச்செய்கைக்கு என்று ஒரு தனி பிரிவு தயாராகி வருகிறது. இவ்வாறு சிறு ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையை ஒரு புதிய திட்டத்தின் மூலம் ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும்.
இது அரசாங்கத்தின் திட்டம் மாத்திரமன்றி, தனியார் துறையினரும் இதில் பங்களிக்க வேண்டும். அரச கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான நிலத்தை, அந்த கூட்டுத்தாபனங்களுக்கே நீண்ட காலத் குத்தகைக்கு விட திட்டமிட்டுள்ளோம். தென்னந்தோப்புகளை 60 வருடங்களுக்கும் ஏனையவை 40-50 வருடங்களுக்கும் குத்தகை செல்லுபடியாகும் வகையில் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
அந்த நிலங்களை இளம் விவசாயிகளுக்கு நவீன விவசாய முறைப்படி பயிர் செய்ய வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இளம் விவசாயிகளின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவும் எதிர்பார்த்துள்ளது. இவ்வாறு மாத்தளையை பிரதான விவசாய மாவட்டமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதைக் கூற வேண்டும்.
கல்வி தொடர்பிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உயர்தரத்திற்குப் பிறகு, இளைஞர்கள் தொழில் பயிற்சிக்கு வழிகாட்டப்பட்டு, நாட்டில் பயிற்சி பெற்ற தொழிற்படையை உருவாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள 400 தொழிற்பயிற்சி நிலையங்களை இணைத்து ஒரு நிறுவனமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் .யு. கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனக பண்டார தென்னகோன், ரோஹினி கவிரத்ன, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபைத் தலைவர் எல்.டி.நிமலசிறி, மாத்தளை மாவட்டச் செயலாளர் தேஜானி திலகரத்ன மற்றும் மாவட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.