இளைஞர் விரும்பும் எதிர்கால இலங்கையை உருவாக்குவது குறித்து நாடு முழுவதும் பரந்தளவிலான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டும்
- ஜனாதிபதி யோசனை முன்வைப்பு – திருகோணமலையில் நிரந்தர ‘இளைஞர் கிராமம்’.
இளம் தலைமுறையினர் விரும்பும் எதிர்கால இலங்கையை உருவாக்குவது தொடர்பில் நாடு முழுவதும் பரந்துபட்ட உரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு புதிய பயணமொன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் அம்பாறை எச்.எம். வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”திருகோணமலையில் இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியில் ஒரு பகுதியை சுற்றுலாத் துறைக்காகவும், எஞ்சிய பகுதியை நிரந்தர இளைஞர் கிராமத்தை உருவாக்குவதற்கும் வழங்க எதிர்பார்க்கின்றேன். அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் உங்களது பொழுதுபோக்கிற்காக தாராளமாகப் பயன்படுத்தும் வகையில் இளைஞர் கிராமம்(யொவுன் புர) தயாராகும் என்றே கூற வேண்டும்.
இந்த ஆண்டு பொசன் போயா தினம் மக்களால் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அநுராதபுர புனித பூமிக்கு மட்டும் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்திருந்தனர். அதற்கு முன்னர் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சுமார் 20 இலட்சம் மக்கள் கொழும்புக்கு வந்திருந்தனர். தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இந்த ஆண்டு இலங்கையில் பொசொன் முன்னிட்டு 20,000இற்கும் மேற்பட்ட தன்சல்கள் வழங்கப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் இந்த விழாக்களை சுதந்திரமாக கொண்டாட முடிந்தது.
இதுவரை நாட்டினதும் தங்களினதும் எதிர்காலம் தொடர்பில் மக்கள் பயந்தனர். நாட்டில் தங்குவதா அல்லது வெளிநாடு செல்வதா என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. நாட்டில் மின்சாரம் இருக்கவில்லை. உணவு, மருந்து, எரிபொருள் எதுவும் இருக்கவில்லை. அனைத்து வியாபாரங்களும் வீழ்ச்சியடைந்தன. அதன்படி, எங்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த அச்சம் ஏற்பட்டது. கொரிய தூதரகத்திற்கு அருகே வேலை வாய்ப்புக்காக இளைஞர்கள் பெருமளவில் திரண்டனர். மற்றொரு குழு சவூதி அரேபியா செல்ல தயாரானது. ஆனால் தற்போது நமது முயற்சியால் நாட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.
எதிர்வரும் வாரத்தில் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கடனை செலுத்தும் பலம் கொண்ட நாடாக இலங்கை மாறும். அதன்படி, எங்களுக்கு அந்நியச் செலாவணி, உதவி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும். அதன் மூலம் புதிய பயணத்தை ஆரம்பிக்கலாம்.
இந்தப் புதிய பயணத்தை எப்படிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கடன் வாங்கும் பழைய முறைக்கே திரும்பினால் இன்னும் 15 ஆண்டுகளில் மோசமான பொருளாதாரச் சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்க நாம் புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஜப்பான், வியட்நாம், சீனா, கொரியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒவ்வொன்றும் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு மாறியுள்ளன. ஆரம்பத்தில், இந்த நாடுகள் நம் நாட்டை விட வறுமை நிலையில் இருந்தன. ஆனால் இன்று அந்த நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன.
நம் நாட்டில் திறமையான இளைஞர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் அந்நியச் செலாவணியை எவ்வாறு ஈட்டுவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டும்.
நமக்கான எதிர்காலத்தை தயாரிப்பதல்ல எமது பொறுப்பு, இளைஞர்களாகிய உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது தான் எமது பொறுப்பு. ஒரு நாட்டை முன்னெற்றுவதற்கு 20 ஆண்டுகள் ஆகும். அதனால் தான் நாம் சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது 2048 ஆம் ஆண்டளவில் இலங்கை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று அறிவித்தோம். சிலர் எங்களை அவமதித்தனர்.
2047இல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் கடந்துவிடும். அதன்படி, 2047இற்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 2047இல் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து 2048இல் வளர்ச்சியடைந்த இலங்கையை உருவாக்குவோம். அதற்குத் தேவையான அடித்தளத்தை அமைப்பதைத்தான் இப்போது நாம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே, நாட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாட வேண்டும். என்னுடைய எதிர்காலமோ, இங்குள்ள அமைச்சர்களின் எதிர்காலமோ அன்றி உங்கள் எதிர்காலம்தான் தீர்மானிக்கப்படுகிறது.
1977 இல் ஜே.ஆர். ஜெயவர்தன எனக்கு எதிர்காலம் தேவையில்லை, உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்குங்கள் என்று கூறினார். அதன்படி, இளைஞர் சேவை மன்றம் நிறுவப்பட்டது. இளைஞர் கிராமம் (யொவுன் புர) நிறுவப்பட்டது. ஆடைத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. சுற்றுலாத் துறை கட்டியெழுப்பப்பட்டது. யுத்தம் இல்லை என்றால், சுற்றுலாத்துறை பெரிதும் மேம்பட்டிருக்கும். பின்னர் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தது. நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு அனைவரும் இணைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவோம்.
அதற்கான விரிவான உரையாடலைத் தொடங்குமாறு இளைஞர் விவகார அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் பழைய நிலைக்கு திரும்ப முடியாது. எண்ணெய் மற்றும் உரம் இல்லாமல் நாம் மீண்டும் கஷ்டப்பட முடியாது. மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அவசியம். அதற்காக நாம் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைக்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி கூறியதாவது:
கேள்வி:
உங்களின் எண்ணக் கருத்தின் அடிப்படையிலான ஸ்மார்ட் விவசாய திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் விவசாயிகளாக முன்னேறிச் செல்ல முடியுமா?
பதில்:
”விவசாய நவீனமயமாக்கல் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. உலக நாடுகளின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு முதல் இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு பரீட்சார்த்தமாக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.”
கேள்வி:
ஒலுவில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை நிறுத்த முடியுமா?
பதில்:
”கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் முன்வைக்கக்கூடிய வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளோம். அதை ஏற்று மீண்டும் பணியில் சேருமாறு கேட்டுக் கொள்கிறோம்.”
கேள்வி:
”விவசாயப் பகுதியில் வாழும் இளைஞர்களாகிய நாங்கள் ஏற்றுமதி பயிர்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகிறோம். அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவையும், வழிகாட்டுதலையும் வழங்கும் திட்டத்தைத் தொடங்கலாமா?”
பதில்:
”நாட்டில் விவசாய பயிர்களை ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாய அமைச்சு மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் இத்திட்டம் சரியான திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.”
கேள்வி:
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை நிலையத்தின் வசதிகள் போதுமானதாக இல்லை. தேவையான வசதிகள் மற்றும் மூன்று மாடி கட்டிடம் ஒன்றை வழங்க முடியுமா?
பதில்:
(தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் பசிது குணரத்ன)
”அம்பாறை தேசிய இளைஞர் சேவை பயிற்சி நிலையத்திற்கு கட்டிடம் ஒன்றை வழங்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை ஜனாதிபதி வழங்குவார் என எதிர்பார்க்கிறோம். மேலும் அடுத்த ஆண்டுக்குள் கட்டிடம் கட்ட முடியும் என நம்புகிறோம். ”
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ:
”இருளில் மூழ்கியிருந்த நாட்டிற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிச்சம் தந்துள்ளார். இருண்ட நாட்டில் வாழ்ந்த இளைஞர்களுக்கு எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை அவர் ஏற்படுத்தியுள்ளார். கண்களைத் திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வாய்ப்பேச்சு தலைவர்களை விட இந்த நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக உழைக்கும் தலைவர் எங்களிடம் இருக்கிறார். நீங்கள் விரும்புவதைப் பெறக்கூடிய தலைவர் எங்களிடம் இருக்கிறார். உழைக்கும் தலைவனுடன் முன்னேறிச் செல்வோம். நவீன விவசாயத்தின் மூலம் இந்த விவசாயப் பிரதேசத்தை முன்னேற்றுவோம். இரண்டு வருடங்களுக்கு முந்தைய நிலைமைக்கு நாம் திரும்பிச் செல்ல முடியாது.” என்று தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் பசிது குணரத்ன:
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு பொற்காலம் உதயமானது என்றே கூற வேண்டும். இதற்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் பெரும் ஆதரவை வழங்கி வருகின்றார்.ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டு இளைஞர்களுக்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கவில்லை. இன்று இந்நாட்டு இளைஞர்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு பெரிதும் உதவுகிறது. இந்தப் பயணத்தை நாம் நிறுத்தக் கூடாது. இந்த நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கான முடிவை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். அதன்படி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தற்போதைய ஜனாதிபதியின் வேலைத் திட்டத்திற்கு உங்களது பங்களிப்பு அவசியமாகும்” என்று தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான திலக் ராஜபக்ஷ, ஏ. எல். எம். அதாவுல்லா, எச். எம். எம். ஹாரிஸ், எஸ். எம். எம். முஷாரப், ரீ. கலையரசன், டி.வீரசிங்க, முன்னாள் பிரதியமைச்சர் ஶ்ரீயானி விஜேவிக்ரம உட்பட மாகாணத்தின் அரசியல் பிரதிநிதிகளும், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.