இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லலாம்
- நாட்டுக்கு தேவையான நல்ல பிரஜைகளை உருவாக்கக் கூடியவாறு சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்த ஒத்துழைப்பு வழங்குவோம்.
- சாரணர் இயக்கத்திற்கு தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து செயற்பட வாய்ப்பு – 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு.
அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியும். அதனால் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
திருகோணமலை கோணேஷ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை (21) ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இனம், மதம் என்ற அடிப்படையில் எவரும் சாரணர் ஜம்போரியின் இணைந்துகொள்வதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அனைத்து தருணங்களிலும் இலங்கையர்களாக ஒன்றுபடும் பட்சத்தில் பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமென வலியுறுத்தினார்.
நாட்டுக்குத் தேவையான நல்ல பிரஜைகளை உருவாக்கும் சாரணர் அமைப்பை விரிவுபடுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதற்காக சாரணர் இயக்கம் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் தருவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
இலங்கை சாரணர இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
மாற்றத்துக்கான தலைமைத்துவம் என்ற தொனிப்பொருளின் கீழ் பெப்ரவரி 20 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கும் தேசிய சாரணர் ஜம்போரியில் 11,500 உள்நாட்டு, வௌிநாட்டு சாரணர்கள் பங்குபற்றினர். இம்முறை பெண்கள் சாரணர்களை பிரதிநிதித்துவப்படும் குழுவொன்றும் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, சிறுவர் சாரணர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரிக்கு வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதம சாரணர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஜனப்பித் பெர்னாண்டோ ஜம்போரி கழுத்துப் பட்டி மற்றும் பதக்கம் அணிவித்து வரவேற்பளித்தார்.
இதன்போது தேசிய சாரணர் ஜம்போரியை முன்னிட்டு முத்திரையொன்று வௌியிடப்பட்டதோடு, மாவட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சஞ்சிகைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
இலங்கை சாரணர் இயக்கத்தின் உத்தியோகபூர்வ சீருடையை வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் பிரதம சாரணர் சட்டத்தரணி ஜனப்பிரித் பெர்னாண்டோவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சீருடையை வழங்கப்பட்டது.
அதனையடுத்து இலங்கையின் பிரதம சாரணர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அதனையடுத்து 10 ஆவது சாரணர் ஜம்போரிக்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா,சுவீடன், அவுஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், இந்தியா, தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பாகிஸ்தான், பங்காளதேஷ், நேபாளம், மலேசியா, வியட்நாம், இந்துநேசியா உள்ளிட்ட 28நாடுகளை பிரதிநிதித்துவப்படும் சாரணர்கள் 10 தேசிய சாரணர் ஜம்போரியின் பங்குபற்றியிருந்தனர்.
ஜம்போரி நடைபெறும் ஒவ்வொரு தினத்திலும் பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, வானவேடிக்கை, கலாச்சார அம்சங்கள் என்பவும் அதில் அடங்கும். இன்று (21) காலை 9.00 மணி முதல் மாலை 9.00 மணி வரையில் மக்கள் பார்வைக்காக ஜம்போரி திறக்கப்பட்டிருக்கும்.
இங்கு மேலும் கருந்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
10 ஆவது சாரணர் ஜம்போரி திருகோணமலையில் நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சாரணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்றுபவர்கள் பாடசாலை, மதம், இனம் என்ற அடிப்படையில் பங்கேற்றவில்லை. இலங்கையின் சாரணர்கள் என்ற வகையிலேயே பங்கேற்றுள்ளனர். நாம் அனைவரும் இலங்கையர்கள்.
இங்கு வருகைத் தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. தேவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரையான மிகப்பெரிய வலைமைப்பை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். அதேபோல் கொழும்பு முதல் திருகோணமலை வரையில் நட்பு விரிவடைகிறது. உங்களுடைய ஒற்றுமை வலுவடைகிறது. அதனால் இந்த ஜம்போரியினால் சிறப்பான பணியாற்றப்படுகிறது.
சாரணர் இயக்கத்தினால் நாட்டுக்கு நல்ல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். பிரதம சாரணராக பொறுப்பேற்றுக்கொண்ட போது சாரணர் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரிக்க முடியுமா என்று வினவினேன். அதனை செய்ய முடியுமென சாரணர் பணிப்பாளர் தெரிவித்தார்.
அதன்படி அனைவரும் ஒன்றுபட்டு சாரணர் இயக்கத்தை பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கையை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரமாக அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்கான போதிய வளம் இல்லாத பிரச்சினை காணப்பட்டது. சாரணர் இயக்கத்தில் 2 இலட்சம் பேர் இணைக்கப்பட்டவுடன் இதற்காக வழங்கப்படும் நிதித் தொகையை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அதற்கான திட்டமிடலொன்று அவசியம்.
அதேபோன்று, இதுபோன்ற அமைப்புகள் மூலம் புதிய அறிவையும் புதிய தொழில்நுட்பத்தையும் வழங்க முடியும். மேலும், அடுத்த ஆண்டு தேசிய சாரணர் ஜம்போரியின் போது செயற்கை நுண்ணறிவை வழங்க முடியும். இந்த சாரணர் இயக்கத்தை நாம் புதிய அறிவை வழங்கும் ஒரு வழியாக பயன்படுத்தலாம். எனவே, சாரணர் இயக்கத்திற்கு தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்க எதிர்பார்க்கிறேன்.
விவசாய நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளை இந்த சாரணர் இயக்கத்துடன் இணைக்க எங்கள் ஆதரவை வழங்க இருக்கிறோம். சாரணர் இயக்கத்தினால் நாட்டுக்காக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். இப்போதைக்கு அதைச் செய்துவிட்டீர்கள். எதிர்காலத்தில் இது இன்னும் வலுவாக செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
சாரணர்கள் மட்டுமின்றி அனைவரும் நாட்டுக்காக தமது பொறுப்பை செய்ய வேண்டும். நம் அனைவரம் அதனை நிறைவேற்றுகிறோமா என்ற கேள்வி எம்முன் இருக்கிறது. அதை அரசில்வாதிகள் நிறைவேற்றுவார்களா என்பதுதான் பிரச்சினை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அனைவரும் கஷ்டங்களை எதிர்கொண்டோம். மின்சாரம் இருக்கவில்லை, எரிபொருள் இருக்கவில்லை,விவசாயத்திற்கு அவசியமான உரம் இருக்கவில்லை. மூன்று வேளைக்கும் போதுமான உணவு இல்லை. நாங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்தோம். நம் நாடு வங்குரோத்தடைந்தது. ஆனால் தற்போது அந்த வங்குரோத்து நிலையில் இருந்து படிப்படியாக வெளியேறி வரமுடிந்துள்ளது. மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கினாலும் இன்னும் கஷ்டமான நிலைமை இருக்கிறது. ஆனால் நாட்டை வெற்றிபெறச் செய்ய வேண்டுமானால் நாம் இந்தப் பாதையில் தொடர வேண்டும்.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்ட பிறகு, அடுத்த தலைமுறைக்கு இதனை விட சிறந்த நாட்டை உருவாக்குவது தான் நம் அனைவரினதும் கடமை. இந்த நிலை மீண்டும் ஏற்படாத வகையில் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். அரசியல்வாதிகள் அதற்கு இன்னும் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வி நம்முன் இருக்கிறது.
அதனால் அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் இன்னும் 10-15 வருடங்களில் சிறந்த நாட்டை உருவாக்க முடியும். இந்த நாட்டின் வருங்கால சந்ததியினருக்கான நமது கடமையாக நான் அதனைக் குறிப்பிடுவேன். தேசிய சாரணர் ஜம்போரிக்கு எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள, ஜம்போரி தலைவரும் பிரதம சாரணர் ஆணையாளருமான சட்டத்தரணி ஜனப்பிரித் பெர்னாண்டோ, ஆசிய பசுபிக் உப தலைவரும் உலக சாரணர் இயக்கத்தின் பிரதிநிதியுமான சைமன் பொக்ரே, சாரணர் முகாம் ஏற்பாட்டாளர் சரத் மாதராச்சி, தேசிய பயிற்சி ஆணையாளர் கோர்னல் பத்மல் பெரேரா,சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த குசாந்த ஹேரத், பிரதி ஜம்போரி தலைவரும் பிரதி ஆணையாளருமான எம்.எப்.எஸ். முஹீத் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.