நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் அன்றி, இளைஞர்களே நாட்டின் தேசிய வளமாவர்

  • நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் நாட்டுக்கு கிடைக்கும் நிதி கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வழங்கப்படும் – ருஹுணு பல்கலைக்கழக புதிய சுகாதார விஞ்ஞான பீடத்தை மாணவர்களுக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நிதியைக் கொண்டு எதிர்காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக நிதியை வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் அன்றி, இளைஞர்களே நாட்டின் தேசிய வளமாவர் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, இன்று பல அரச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு சுமையின்றி இயங்கி வருவதாகவும், இவ்வருட இறுதிக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கான கொடுப்பனவுகளில் இருந்து விடுபட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

காலி – வலஹன்துவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் புதிய சுகாதார விஞ்ஞான பீடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று (19) முற்பகல் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

பெயர் பலகையைத் திரைநீக்கம் செய்து விஞ்ஞான பீடத்தின் கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளித்த ஜனாதிபதி, கட்டிட வளாகத்தை மேற்பார்வையிட்டதன் பின்னர் பல்கலைக்கழக ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர் சுஜீவ அமரசேன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார்.

இதன்போது விஞ்ஞான பீட மைதானத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த ஜனாதிபதி, பல்கலைக்கழக ஊழியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும்:

“அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த இணை சுகாதார பீடத்தை திறந்து வைப்பதற்காக தன்னை அர்ப்பணித்தார். இந்தக் கட்டிடத்தை அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்கா போன்ற பெரிய பல்கலைக்கழகங்கள் 24 மணி நேரமும் இத்தகைய கட்டிடங்களால் பயனடைகின்றன. அரசுப் பணம் கல்விக்காகப் பயன்படுத்தப்படும்போது, ​​அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகுப்புகள் சீர்குலைந்தால் உங்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் அந்த கூட்டுதாபனத்துக்காக 700 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக இங்கு குறிப்பிடப்பட்டது. ஆனால் அந்த 700 பில்லியன் ரூபாவை பத்து மடங்காக பெருக்கிப் பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய தொகையை செலவழித்ததன் விளைவாக மூன்று அரசாங்கங்களின் கீழ் இதனை ஈடுசெய்ய கடன் பெற நேரிட்டது. இதனால், நாட்டின் கடன் தொகை அதிகரித்தது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, ​​முதலில் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது கடினமான பணியாகும். ஆனாலும் அதனை செய்ய வேண்டியிருந்தது. அதற்குப் பதிலாக, புதிய முறையில் பணத்தை தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்பட்டது. ஒவ்வொரு அரசாங்க நிறுவனமும் தங்களது சொந்த செலவுக்கான நிதியை ஈட்டிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினோம்.

இந்த நிலை அனைத்து துறைகளையும் பாதித்தது. என்னை திட்டித் தீர்த்தனர். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய அனுமதிப்பதா அல்லது அவதூறுகளை ஏற்றுக்கொள்வதா என்பதை நான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தப் பொறுப்பில் இருந்து விலக முடியாத நிலைமை இருந்தது. அந்த செயற்பாடுகளுக்கு அனைத்து அமைச்சர்களும் ஆதரவு வழங்கினர்.

அப்போது, ​​அரச நிறுவன மறுசீரமைப்பு திட்டத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நாட்டின் மின் மற்றும் எரிபொருள் கட்டணங்கள் உலக சந்தையின் விலைக்கு அமைவாக உள்ளன. மேலும், ஏனைய கூட்டுத்தாபனங்களுக்கும் பணம் வழங்குவதை நிறுத்தினர். நாங்கள் தற்போது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், அந்த கட்டண நடவடிக்கைகளில் இருந்து விடுபட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனால் எஞ்சும் தொகையை நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக பயன்படுத்த முடியும்.

இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தும் போது ​​பல விமர்சனங்கள் எழுந்தன. அப்போது, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை நமது தேசிய சொத்தாக கருதுவதா அல்லது இளைஞர்களை தேசிய சொத்தாக கருதுவதா என்ற கேள்வி எழுந்தது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களைப் பாதுகாப்பதா அல்லது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பணம் கொடுப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த புதிய வேலைத் திட்டங்கள் மூலம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்றுபடுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண:

”மிகவும் பரபரப்பான வேளையில் எமது நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்த பல்கலைக்கழகக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு வருகைதந்த ஜனாதிபதிக்கு காலி பிரதேச மக்களின் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இதுபோன்ற ஒரு திட்டத்தை மிக முக்கியமான கட்டத்தில் நிறைவு செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக காலி மாவட்டத்திற்கு பல சிறப்பான திட்டங்கள் கிடைத்தன. அவர் 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கினார்.

அது இந்நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட சாதகமான நடவடிக்கை என்பதைக் கூற வேண்டும். மேலும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புதிய விஞ்ஞான பீடம், தென் மாகாணத்திற்கே ஒரு பெருமை என்றே கூற வேண்டும்.” என்று தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க:

”இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 75 நாட்களாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணிக்கு சமூகமளிக்கவுள்ளனர்.

அவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி தலையிட்டு தீர்வைப் பெற்றுக் கொடுத்தார். அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும். அவர்களது நிலுவைத் தொகையைச் செலுத்த திறைசேரி 4.2 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. எந்தவித வேலைநிறுத்தமும் இல்லாத நிலைக்கு நம் நாட்டை கொண்டு சென்றால் அதுவே நாட்டின் அபிவிருத்தி என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண. அக்குரட்டியேநந்த நாயக்கதேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, முன்னாள் உபவேந்தர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.