புரட்சியின்றி நாட்டு மக்களின் முழுமையான காணி உரிமையை உறுதிப்படுத்தியமை அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும்
- அனைத்து மக்களும் பெருமையுடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி.
- அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணையுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு.
காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தற்போதைய அரசாங்கம் பெற்ற முதல் வெற்றி என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 20 இலட்சம் பேர் பயன்பெறும் “அஸ்வெசும” திட்டத்தை அமுல்படுத்தியமையும் 15 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்ததும் ஏனைய சாதனைகளாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தின் ஒரு பகுதியினரின் ஆதரவுடன் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இவ்வாறான பரந்த பணியை அரசாங்கம் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நாட்டை எந்த இடத்தில் வைக்க முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உரித்து (உருமய) திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிற்பகல் ரங்கிரி தம்புலு விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்க காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியுமாக இருந்தால் அந்த உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இருக்க முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில், 08ஆவது பரிந்துரையில், “உரித்து திட்டத்தின் கீழ் 1935ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அனுமதிப்பத்திரம் மற்றும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அரச காணிகளின் முழு உரிமையையும் விவசாயிகளுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், அவர்கள் அனுபவிக்கும் காணிகளுக்கு முழு உரிமை வழங்கும் உரித்து நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதியின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுகிறது. 20 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனாளிகளாக இனங்காணப்பட்டுள்ளன. உரித்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் கீழ் 02 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உரித்து திட்டத்தின் கீழ் காணியின் முழு உரிமைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு காணி உறுதி வழங்குவதற்கு உரிய நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் உரித்து செயற்பாட்டு செயலகமொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அடையாள ரீதியல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விவசாயிகளுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
“தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை” தேசிய திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள மைதானத்தில் நிறுவப்பட்ட ‘விசேட நிலையத்தை’யும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
அத்துடன், தம்புள்ள விளையாட்டரங்க வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீச்சல் தடாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, நீச்சல் தடாகத்தின் நடைமுறை செயற்பாடுகளை அவதானிப்பதற்காகவும் இணைந்துகொண்டார்.
நவீனமயப்படுத்தப்பட்ட விளையாட்டு அரங்கு விளக்கு கட்டமைப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இதேவேளை, ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ‘ஊடக மையம், புதிய கேட்போர் கூடம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கம் என்பன நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி நாட்டினார்.
இவ்விழாவில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
இது எனது நாடு, நான் பிறந்த நாடு, எனது பாரம்பரியத்தை உறுதிப்படுத்திய நாடு.இந்நாட்டு மக்கள் தமது காணி உரிமையைப் பெறுவதற்காக நடத்திய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இன்று நாம் இங்கு கூடியுள்ளோம். இன்று நாம் ஒரு புரட்சிகர சந்தர்ப்பத்தில் பங்கேற்கிறோம். 20 இலட்சம் காணி உரிமைகள் இன்று வழங்கப்படுகின்றன. இந்த புரட்சியை நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலம் உரிமை பெறும்போது, யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. எம்.பி , அதிகாரிகள் பின்னால் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. நிலத்தை விரும்பியபடி அபிவிருத்தி செய்யலாம், அதில் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது.
தங்களுக்குக் கிடைத்த இந்த உரிமையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த உரிமை தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். இதை நீங்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் நில உரிமை கோரி பல புரட்சிகள் நடந்துள்ளன. இன்று இந்த நாட்டில் எந்தப் புரட்சியும் இன்றி மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது சாத்தியமற்றது என்று பலர் நினைத்தார்கள். ஆனால் எங்கள் அரசாங்கம் அந்த முடிவை எடுத்தது. குறிப்பாக விவசாயம் செய்தவர்கள், வீடு கட்டியவர்கள் என அனைவருக்கும் அந்த நிலத்தில் உரிமை இருக்கும். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடந்த பெரும் போகத்திலும்,சிறு போகத்திலும் உங்களிடமிருந்து கிடைத்த ஆதரவை மறக்க முடியாது. அறுவடை வெற்றிகரமாக அமைந்திருந்தது. அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றது. மேலும் இந்த நிலங்களில் வீடுகள் கட்டியவர்களும் உள்ளனர். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிரந்தர காணி உரிமையை வழங்குவதன் ஊடாக இந்த மக்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது ஒரு வரலாற்று முக்கியத்துவமான தருணமாகும். சிங்கள மன்னராட்சிக் காலத்தில் கூட காணி உறுதிப் பத்திர முறை இருக்கவில்லை. பிரபுக்களுக்கும் நிலச்சுவாந்தர்களுக்கும் பத்திரம் ஊடாக காணி வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு விவாசாயத்திற்காக நிலம் வழங்கப்பட்டது. மக்களுக்கு நிரந்தர காணி உறுதிப் பத்திரங்கள் இருக்கவில்லை. தரிசு நிலச் சட்டத்தின் கீழ் இவை அனைத்தும் அரசுக்குச் சொந்தமானது. சில நிலங்கள் வெள்ளைக்காரர்களுக்கு தோட்டங்களுக்காக வழங்கப்பட்டது. மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் டி.எஸ்.சேனாநாயக்க1935 ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மூலம் மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுத்தார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் கிராமங்களை விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த நிலம் யாருக்கும் சொந்தமில்லை.
அதன் பிறகு, மக்கள் வறண்ட பகுதிகளில் குடியேறினர். அதனுடன் நெற் பயிற்செய்கை ஆரம்பமானது. பிலிப் குணவர்தன நெல் அதிகளவில் இருந்த ஈர வலயத்தில் நெல்களை அபிவிருத்தி செய்வதற்காக நெல் சட்டத்தை கொண்டு வந்தார். அப்போதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
ஜே.ஆர் ஜயவர்தன மகாவலி திட்டத்தில் இருந்து அதிக இலட்சம் ஏக்கர்களை மக்களுக்கு வழங்கினார். இப்போது நாம் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
கடந்த காலத்தில் கயந்த கருணாதிலக்க இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் போது புதிய சட்டத்தை கொண்டு வருவதாக கூறி அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இம்முறை புதிய ச ட்டங்கள் குறித்து கவனிக்கப்படவில்லை அரசாங்க காணி கட்டளைச் சட்டம் வெள்ளைக்காரர்களுக்கு காணிகளை வழங்கியிருந்தால், முதலீட்டாளர்களுக்கு இலவச காணி உரிமை வழங்கப்பட்டிருந்தால், அதே உரிமையை ஏன் மக்களுக்கு வழங்க முடியாது?
முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்க பயன்படுத்தப்பட்ட சட்டவிதிகளின் மூலம் இன்று உங்கள் அனைவருக்கும் காணி உரிமையை வழங்குகிறோம். மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. புரட்சிகரமானது. ஜப்பான் மற்றும் தென் கொரியா மாத்திரமே ஆசியாவில் காணி உரிமையை வழங்கியுள்ளன. இன்று நம் நாட்டு மக்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியை உடனடியாக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன். அதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஒன்று சேருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இன்றிருக்கும் அரசாங்கமானது இலங்கையில் முன்னெப்போதும் இல்லாதது என்றே கூற வேண்டும். கடினமான காலங்களில் பொறுப்பேற்கக்கூடிய அனைவரும் அதனுடன் இணைந்துள்ளனர். இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். நாங்கள் ஒரு பகுதியினருடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்தோம். ஒவ்வொரு கட்சியிலும் ஒரு பகுதி பிரிந்து மற்ற கட்சிகளுக்குச் சென்றது. இவ்வாறான அரசாங்கத்தின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை நாம் எதிர்கொண்டோம்.
நமது நாடு தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இன்னும் சிலர் கஷ்டப்படுகிறார்கள். எம்மால் முடிந்தளவு இந்த மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கினோம். அதற்காக அஸ்வெசும திட்டத்தை செயல்படுத்தினோம். அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுத்தோம். வங்குரோத்து நிலையில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகின்றோம். மூன்றாவது கட்டமாக இந்த நிரந்தர காணி உரிமைகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றால், நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றதன் பின்னர் எதிர்காலத்தில் என்ன செய்ய முடியாது என நான் கேட்க விரும்புகின்றேன்.
நாம் ஆரம்பித்த இந்தப் பயணத்தைத் தொடர்ந்தால், 2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. நாட்டை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்தோம். நாங்கள் அங்கு கட்சி அரசியலில் ஈடுபடவில்லை. அப்படி செயற்பட்டிருந்திருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. இந்த பணியை முன்னெடுப்பதில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நம்மைப் பற்றி நாம் சிந்திக்கக் கூடாது. நாட்டு மக்களின் எதிர்காலம் பற்றியே சிந்திக்க வேண்டும். நாட்டின் 20 இலட்சம் மக்களுக்கு நாம் அனைவரும் இணைந்து காணி உரிமையை வழங்கியுள்ளோம். மேலும் 20 இலட்சம் பேருக்கு அஸ்வெசும நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 15 இலட்சம் பேருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சியடைந்து வருமான வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பாரிய பணியை பாராளுமன்றத்தில் ஒரு குழுவால் செய்ய முடியும் என்றால், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் என்ன செய்ய முடியாது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். நாம் அந்த வழியில் செல்ல வேண்டும்.
எதிர்காலத்தில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய மேலும் பல சட்டங்களை கொண்டு வர எதிர்பார்க்கின்றோம். அனைவரும் இணைந்து முன்னேறுவோம். விவசாயத்தை நவீனமயமாக்குவதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய விவசாய புரட்சி ஏற்பட்டு வருகிறது.
நாம் மீண்டும் கடன் வாங்க முடியாது. நாம் மீண்டும் பிச்சைக்காரர்களின் தேசமாக மாற முடியாது. நமது பெருமையை நாம் பாதுகாக்க வேண்டும். இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டும்.
இன்று நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள். அதை மனதில் வைத்து, நீங்கள் அனைவரும் பெருமையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன,
மாத்தளை கிளர்ச்சியின் பின்னர் இந்த நாட்டிற்கு வந்த அந்நிய ஆட்சியாளர்கள் எமது நிலங்களை அபகரித்தனர். தன்னிறைவு பெற்ற நமது பொருளாதாரம் சரிந்தது. அதிலிருந்து எழுச்சி பெறும் பயணத்தில் நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட பூமி முன்னணியில் நின்றது. இத்தகைய சவாலான பாரம்பரியத்தை வென்றெடுக்கும் போரில் தொடங்கிய பாரம்பரியத்தை மீண்டும் இருபது இலட்சம் பேருக்கு வழங்க இது ஒரு வாய்ப்பாகும்.
அதற்கு ஜனாதிபதியின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஒன்றிணைந்த காணி அமைச்சர் உட்பட அனைத்து அதிகாரிகளும் சிறப்பான பணியை செய்தனர்.
தம்புள்ள நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. வரலாற்றில் மட்டுமன்றி உலகிலேயே நிகரற்றது எனலாம். தம்புள்ள, சீகிரியா போன்ற மையங்களால் போஷிக்கப்பட்ட இந்த நிலம், இன்று இத்திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம் எமது பாரம்பரியத்தையும் மண்ணின் பெருமையை நினைவுகூருகிறது.
நாடளாவிய ரீதியில் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் தவித்துக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதியின் அழைப்பினாலும் தலையீட்டினாலும் இந்த நாட்டை மீண்டும் தன்னிறைவு அடையச் செய்வதற்கு விவசாயிகள் பங்களிப்புச் செய்தனர்.
அரசாங்கம் காணி வழங்கி, அந்த முக்கியமான பணிகளை வலுவாக முன்னெடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றது. அதை உறுதி செய்வது உங்கள் அனைவரின் பொறுப்பு. இன்று கிடைத்த இந்த உறுதிப் பத்திரங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,
முன்னாள் காணி அமைச்சர்கள் அனைவரையும் இங்கு நான் மரியாதையுடன் நினைவுகூருகின்றேன். 2015ஆம் ஆண்டு மக்களுக்கு காணி உரிமை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்கவை விசேடமாக நினைவுகூர வேண்டும். அதனை நடைமுறைப்படுத்த முடியாத போதிலும் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அது நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே இன்றைய தினம் இந்நாட்டின் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய நாள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
அன்று டி.எஸ். சேனாநாயக்க இந்நாட்டு மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தியதும், ஜே.ஆர். ஜயவர்தன நாட்டு மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கியதும், காணி உரிமையை மக்களுக்கு வழங்குவதன் முக்கியத்துவத்தை அறிந்திருந்ததன் காரணமாகவே ஆகும்.
சுதந்திரத்திற்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு ஒரே நேரத்தில் இலவச காணி உரிமை கிடைத்த முக்கிய சந்தர்ப்பமாக இதைக் குறிப்பிடலாம். இதற்காக தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ், டக்ளஸ் தேவானந்தா மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ரோஹண திஸாநாயக்க, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனக பண்டார தென்னகோன், எஸ். எம். சந்திரசேன, வடிவேல் சுரேஷ், வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, நாலக கோட்டேகொட, மாத்தளை ஐ.தே.கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரியான் விஜேரத்ன, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே உட்பட ஆளுநர்கள், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள், காணி உரிமை பெறும் பயனாளர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.