ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் கிறிஸ்மஸ் கரோல் கீத நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்
ஜனாதிபதி அலுவலகம், சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுயில் வருடாந்தம் ஒழுங்கு செய்யும் விஷேட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு மற்றும் கிறிஸ்மஸ் வலயம் ஆகியவற்றை நேற்று (20) ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் மின்விளக்குகளை ஏற்றி இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
நேற்றைய கிறிஸ்மஸ் கரோல் இசை நிகழ்வு இலங்கை கடற்படையின் பாடல் மற்றும் வாத்தியக் குழுவினரால் நிகழ்த்தப்பட்டதுடன், இந்த கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு டிசம்பர் 23 ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலக வளாகத்தில் இரவு 7.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இன்று (21) இலங்கை விமானப்படையினரும், நாளை (22) இலங்கை இராணுவத்தினரும், டிசம்பர் (23) இலங்கை பொலிஸ் பாடல் மற்றும் வாத்தியக் குழுவினரும், இணைந்து கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.