ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கிய விரைவான மாற்றத்தையே எதிர்பார்க்கிறோம்
- அதற்குரிய சட்டமூலம் ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றத்திற்கு.
- அரச நிதி நிர்வாகத்திற்கும் புதிய சட்டமூலம்.
- கட்டியெழுப்படும் பொருளாதாரத்தின் பயன் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்தல்.
இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் தொடர்பிலான புதிய சட்டமூலமும் அதனுடன் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை (20) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
விகாராதிபதி ஸ்ரீ ஜனாநந்தபிதான தேரரின் கோரிக்கைக்கமைய கடவத்தையில் வசிக்கும் ஜகத் சுமித்ர கருணாரத்ன மற்றும் மல்லிகா கருணாரத்ன ஆகியோரின் நன்கொடையில் மங்கெதர டெம்பிடி புராதன விகாரையில் தங்கவேலி அமைக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஜகத் சுமித்ர கருணாரத்ன மற்றும் மல்லிகா கருணாரத்ன ஆகியோருக்கான நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகளை ஜூன், ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் இதுவரையில் எமக்கு கிடைக்காமலிருக்கும் வௌிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அது மட்டுமன்றி, இலங்கையுடன் வர்த்தகம் செய்வதிலிருந்து விலகியிருந்த வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீண்டும் கொடுக்கல் வாங்கல் செய்ய ஆரம்பிக்கும் என்றும் அதனால் நாட்டில் வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் என்றும், அதனூடாக மக்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த நாட்களில் நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதன் பின்னர் கட்டியெழுப்படும் பொருளாதாரத்தின் பிரதிபலன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடி விரைவில் அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். 2022 ஆண்டில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, சர்வதேச நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இலங்கைக்கு கடன் வழங்குவதை நிறுத்தின. அதனால் முதலில் அந்த தடையை நீக்கிக்கொள்ள, நாம் கடனை மீளச் செலுத்தும் வல்லமையுள்ள நாடு என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொருளாதார நெருக்கடியிருந்து நாட்டை மீட்பதற்காக ஒரு வருடத்திற்குள் தீர்மானமிக்க பணிகளை ஆற்றியுள்ளோம். இதேநிலை தொடரும் பட்சத்தில் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் நாட்டின் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இது கடுமையான பணி என்ற போதிலும், மிகக் குறுகிய காலத்தில் அவற்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.
அதற்குரிய பேச்சுவார்த்தைகளை இந்த வாரத்திற்குள் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம். அதன் பின்னர் கடன் வழங்கிய நாடுகளுடன் இணைந்து பிரான்ஸ், ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் பங்கேற்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.
அதேபோல் இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பணிக்குழு, சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவுடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளது. அதேபோல் சீனாவுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். மேலும் தனியார் கடன் வழங்குனர்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறோம். நிதி அமைச்சின் செயலாளரும் மத்திய வங்கி ஆளுநரும் மீண்டும் ஐரோப்பாவிற்குச் சென்று மேற்படி குழுவினருடன் கலந்துரையாடவுள்ளனர்.
அதன்படி வங்குரோத்து நிலையிலிருந்து நாடு விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணை பேச்சுவார்த்தையொன்றை ஏப்ரல் மாதமளவில் முன்னெடுக்கவுள்ளோம். அதன் பின்னர் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் விரைவில் கைசாத்திட எதிர்பார்க்கிறோம்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் நிறைவடையும். எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாகவே இந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் உலக அரங்கில் கடனை மீளச் செலுத்தக்கூடிய நாடு என்ற உறுதியைப் பெற்றுக்கொள்வோம். இதுவரைக் காலமும் தடைப்பட்டிருந்த நிதி உதவிகள் நாட்டிற்கு கிடைக்க ஆரம்பித்த பின்னர் நாட்டின் டொலர் கையிருப்பு அதிகரிக்கும்.
தற்போதும், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் எம்முடன் வணிகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தவிர்த்து வருகின்றன. மேற்கூறிய செயற்பாடுகளை நிறைவு செய்யும் பட்டசத்தில் அவர்களின் ஒத்துழைப்பு மீளக் கிடைக்கும். அதனால் எமது நாணயக் கையிருப்பும் அதிகரிக்கும்.
நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.
தற்போதும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாவரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் அனைவரும் மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்துள்ளோம். இந்த நிலையில் இருந்து வெளிவர பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது ஓரளவு நிவாரணம் வழங்கக்கூடிய நிலையை அடைந்துள்ளோம்.
இந்த தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும். அத்துடன் அஸ்வெசம வேலைத்திட்டத்தின் மூலம் சமுர்தித் திட்டத்தைப் போன்று மூன்று மடங்கு நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை பதினெட்டு இலட்சத்தில் இருந்து இருபத்தி நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இப்படிப் பார்க்கும் போது, சிறந்த பொருளாதார நிலை இருந்தபோது கொடுத்த நிவாரணத்தை விட,வங்குரோத்தடைந்த நாடாக மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம், மூன்று மடங்கு அதிகம் என்பது தெளிவாகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளின் இறுதி நன்மை நாட்டின் பொருளாதாரத்திற்கே கிடைக்கிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை. இப்போது நாம் அந்தத் தொகையையும் வழங்கியுள்ளதோடு அதுவும் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் சேரும்.
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகு நாம் மேலும் முன்னேற வாய்ப்புகள் உள்ளன.நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதால் மட்டும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. ஏனெனில் இன்று நாம் இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக மாறியுள்ளோம். நம் நாட்டில் இறக்குமதியை விட ஏற்றுமதி குறைவாக உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க வெளிநாடுகளிடம் கடன்களைப் பெறுகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே இந்நிலைமையைத் தவிர்க்க உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றுடன் கலந்துரையாடி நாட்டை ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம். அதன் ஆரம்ப நடவடிக்கையாக விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் அது வெற்றியடைய இன்னும் 06, 07 வருடங்கள் செல்லும்.
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கி ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் நடவடிக்கையை சட்டத்தின் ஊடாகவும் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளதுடன், இந்தப் புதிய சட்டங்களின் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர முடியும்.
கடந்த பொருளாதார நெருக்கடியினால் நாட்டின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர். அப்படியானால், வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பலன்கள் ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும். ” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மங்கெதர தெம்பிட புராண விகாராதிபதி ஓய்வுபெற்ற பரிவேனாதிபதி, சிரேஷ்ட கலாநிதி கேகாலை மாவட்ட பிரதம சங்கநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ ஜனானந்தபிதான நஹிமித, வேவலதெனிய பிரிவேன் விகாராதிபதி வணக்கத்துக்குரிய ஹெம்மாதகம ஸ்ரீ சித்தார்த்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கனக ஹேரத், தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகாந்த குணதிலக்க, ராஜிகா விக்ரமசிங்க, அஜித் மான்னப்பெரும, கே. டி. டேனியல் சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜகத் சுமித்ரா கருணாரத்ன, அரச அதிகாரிகள், விகாரை சபை உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.