இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழிற்துறையில் உள்ளவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதியின் அவதானம்
இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வரிக் கொள்கையில் தற்போதைக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும், ஆனால் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை வலுப்படுத்துவதற்கு பொருத்தமான முறைமையொன்று தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்மொழிவுகளைத் தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகள், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலைப் பாதித்துள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில் தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறை தொடர்பான ஏற்றுமதிகளை அதிகரிப்பதுடன் பெறுமதி சேர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சுரங்கத் தொழில்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக இலங்கையின் இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு அந்தப் பகுதிகளில் சுரங்கத் தொழில்களை ஆரம்பிப்பதற்கான பூரண வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் இரத்தினக்கல் மற்றும் சுரங்கத் தொழில்களை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்காவிட்டால் இவ்வாறான விடயங்களை பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. மக்களின் உயிர்கள் கூட பாரிய ஆபத்தில் இருந்த வேளையில் நாட்டின் பொறுப்பை ஏற்ற ஜனாதிபதி இன்று நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச். எஸ். சமரதுங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.