இந்தியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) காலை இந்திரா காந்தி விமான நிலையத்தின் ஊடாக இந்தியா சென்றடைந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் சார்பில் மேலதிக செயலாளர் பி.குமரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்து சமுத்திர வலய மேலதிக செயலாளர் புனித் அகர்வால், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷெனுகா செனவிரத்ன ஆகியோர் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளித்ததோடு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
இந்தியப் பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (09) புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகை குறித்து இந்திய ஊடகங்கள் விசேட பிரசாரம் வழங்கியிருந்ததோடு , தலைநகர் புதுடெல்லியின் பிரதான சுற்றுவட்டங்களைச் சுற்றி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியின் படங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
ஏழு கட்டங்களாக 44 நாட்கள் நடைபெற்ற மிகப் பெரிய ஜனநாய தேர்தலாக கருதப்படுப்படும் இந்தியப் பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டணி கட்சி வெற்றி பெற்று, அந்த வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் , தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளனர்.