நாட்டு நலனுக்காக பொதுவான ஒருமித்த கருத்துடன் இணையுங்கள்!
- தத்தமது தனிப்பட்ட கனவுகளுக்காக அல்ல, நாட்டின் பொதுவான கனவை நனவாக்க புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம்.
- அரசியல் ஆதாயத்துக்காக நான் முடிவுகளை எடுக்கவில்லை. நாட்டின் நலனுக்காகவே எப்போதும் முடிவுகள் எடுத்தேன்.
- விண்கல் வேகத்தில் சரிந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டது.
- பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் மற்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான பாதையில் ஒரு மைல் கல்லாக இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் – ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கொள்கைப் பிரகடன உரை.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய முக்கியமான தருணம் வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத் திட்டத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்தால் மாத்திரமே இந்த வேலைத் திட்டத்தை மேலும் விரைவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பதவிகளைப் பெற கனவு காணும் சிலர், நாட்டுக்கு பொய்யான கருத்துக்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
யதார்த்தத்தை புறக்கணித்து கனவுகளின் பாதையில் பயணித்தால் நாடு மீண்டும் பெரும் ஆபத்தில் தள்ளப்படும் என வலியுறுத்திய ஜனாதிபதி, பல்வேறு தனிப்பட்ட நலன்களுக்காக நாடு பற்றிய பொறுப்பைப் புறக்கணித்தால் வரலாறு எம்மை துரோகிகள் என பெயரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை (07) ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை பிரதமர் தினேஷ் குணவர்தன, சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த் மற்றும் ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் வரவேற்றனர்.
அதன்போது, பாராளுமன்ற பிரதான வாயில் முன்பாக பாடசாலை மாணவிகள் ஜெயமங்கல கீதம் பாடினர்.
படைக்கள சேவிதர், பிரதி படைக்கள சேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம் உள்ளிட்டோர் புடைசூழ பாராளுமன்ற அவைக்குள் பிரவேசித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தில் தனது கொள்கை விளக்க உரையை நிகழ்த்தினார்.
தமது தனிப்பட்ட கனவுக்காக அல்லாமல் நாட்டின் பொதுவான கனவை நனவாக்கும் நோக்கத்திற்காக புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
தன்னைக் கடுமையாக விமர்சித்த பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானோர் பழைய பகைகளை விடுத்து, நாட்டுக்காக ஒரு பொதுப் பயணத்திற்கு இணங்க முடியுமாக இருந்தால், தம்முடன் நீண்டகாலம் நெருக்கமாகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏன் அவ்வாறு செயற்பட முடியாது என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
விண்கல் வேகத்தில் வீழ்ந்திருந்த இந்நாட்டின் பொருளாதாரத்தை ரொக்கெட் வேகத்தில் மீண்டும் உயர்துவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இது தனித்துவமான வெற்றி எனவும் சுட்டிக்காட்டினார். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுப்பது மிகவும் சிரமமானதும் கடினமானதுமான பணியாக இருந்தாலும் ஏனைய நாடுகளைப் போன்று நீண்டகால சிரமங்கள் மற்றும் வலிகள் இன்றி, நாட்டை மீட்டெடுக்க முடிந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சிரமத்துடனும் சில சமயங்களில் தயக்கத்துடனும் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களினால் நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பயணம் சாத்தியமாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாகும்போது வரிச் சுமையைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
சிக்கலான மறுசீரமைப்பு திட்டத்தை இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை அடித்தளமாக அமையும் எனவும், கடனில் இருந்து விடுபடுவதற்கான பாதையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு:
ஆரம்பம் முதல் இன்று வரை உலகம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. நாடுகள் நெருக்கடிகளைச் சந்தித்தன. தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடி ஏற்பட்டது.
சில சமயங்களில் நெருக்கடியிலிருந்து விடுபட முடிந்தது. வேறு சில சந்தர்ப்பங்களில், நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை. நெருக்கடியைச் சபித்துக் கொண்டிருப்பதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முடியாது. நெருக்கடிக்கான காரணங்களை விமர்சிப்பதன் மூலம் மீள முடியாது.
நெருக்கடிகளைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் தான் உலகமும் நாடுகளும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடிகளைத் தீர்க்க முடிந்துள்ளது.
நெருக்கடி முகாமைத்துவத்தில் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்?
புத்தபிரான் போதித்த ஒரு போதனையை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
“அத்ததீபா – விஹரத”
தங்களுக்குத் தாங்களே ஒளியாக வாழ வேண்டும்.
நெருக்கடியைச் சமாளிக்கும் செயல்முறை தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். உலகில் எங்கும் ஏனையவர்களைக் குறைகூறி நெருக்கடியைச் சமாளித்தது கிடையாது.
எம்மை எமக்கான ஒளியாக மாற்றாவிட்டால், நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் சீர்செய்யாவிட்டால், நமக்கு நன்மை நடக்காது. நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. நெருக்கடிக்கும் தீர்வு இல்லை.
முறைமையில் மாற்றம் இருக்காவிட்டால் சிஸ்டம் சேஞ்ச் பற்றி தொண்டைக் கிழியக் கத்தினாலும் நாம் அடிப்படையில் இருந்து மாறாவிட்டால் முறைமைய மாற்ற எம்மால் முடியாது.
அதனைச் சுட்டிக் காட்டும் வகையில் கடந்த காலம் , நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய பல விடயங்களை இச்சபையில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
2022 பெப்ரவரியில் இந்த நாடு இருந்த நிலை, நம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். 2023 பெப்ரவரி மாதமளவில், இந்த நாட்டை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வர முடிந்தது. இந்த வருடம் பெப்ரவரியாகும் போது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தை விட சிறந்த நிலைக்கு நாடு முன்னேறியுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் இந்த பெப்ரவரி வரையான நமது பொருளாதார குறிகாட்டிகள் சிலவற்றை நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
கடந்த ஆண்டு பணவீக்கம் 50.06 சதவீதமாக இருந்தது. இன்று அது 6.4சதவீதமாக குறைந்துள்ளது.
உணவுப் பணவீக்கம் 54.4 சதவீதமாக உள்ளது. இன்று அது 3.3 சதவீதமாக உள்ளது.
அன்று ஒரு டொலரின் பெறுமதி 363 ரூபாய். இன்று 314 ரூபாய்.
2022 ஆம் ஆண்டின் இறுதியில், வரவு செலவுத் திட்ட முதன்மை பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023 இல் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் உபரியை ஏற்படுத்த முடிந்தது. சுதந்திரத்திற்குப் பின்னரான 76 வருடங்களில் இலங்கையானது முதன்மையான வரவு செலவுத் திட்ட உபரியை ஏற்படுத்திய 6 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.
2022 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவிகிதம் இருப்புப் பற்றாக்குறை காணப்பட்டது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், எங்களால் உபரியை ஏற்படுத்த முடிந்தது. 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலுவைத் தொகை உபரியை ஏற்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
2023 இல் 28 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 12 சதவீதமாக உள்ளது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில், 52 பிரதான அரச நிறுவனங்கள் 745 பில்லியன் ரூபா நட்டம் ஈட்டின. செப்டம்பர் 2023இற்குள், இந்த 52 நிறுவனங்களும் 313 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. ஆனால் இந்நிறுவனங்கள் கடன் சுமையை தாங்க முடியாத நிறுவனங்களாக காணப்படுகின்றன.
தெரிவுசெய்யப்பட்ட கடனைச் செலுத்த முடியாத நிலையை 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அந்த சமயம் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு பூஜ்ஜியம் வரை சரிந்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. 2023 டிசம்பர் நிலவரப்படி, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
குறுகிய காலத்தில், சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். 2022 ஆம் ஆண்டில் நம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 ஆகும். 2023 இல் அந்த எண்ணிக்கையை 1,487,303 ஆக அதிகரிக்க முடிந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் 200,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
மேலும், 2023இல் பல சாதகமான நகர்வுகளை முன்னெடுத்தோம். கோட்டா முறையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. மீனவர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.
வாகனங்கள் தவிர அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளன. நாட்டுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும், உற்பத்தித் தொழிற்துறைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விநியோக வலையமைப்பில் எந்தத் தடையும் இல்லை.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக சுருங்கியது. 2022 முதல், தொடர்ந்து 6 காலாண்டுகளில் எதிர்மறையாக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.6 சதவீத வளர்ச்சியை எட்டினோம்.
நமது பொருளாதாரம் விண்கல் வேகத்தில் சரிந்தது. ஆனால் தற்போது எமக்கு அதனை மாற்ற முடிந்துள்ளது. அதை மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளோம். நாங்கள் வீ(V) வடிவ மீட்பு அல்லது வீ(V) வடிவ மீட்சியைப் பெற்று வருகிறோம்.
நாம் அடைந்த விசேடமான வெற்றியாக அதனைக் குறிப்பிடலாம். வீழ்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதார மீட்சி மிகவும் கடினமானது மற்றும் வேதனையானது. ஆனால் ஏனைய நாடுகளைப் போல நீண்ட கால சிரமங்கள் மற்றும் வலிகள் இல்லாமல் நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மால் முடிந்தது.
நான் ஒரு உதாரணத்தைக் கோடிட்டுக் காட்டுகிறேன்.
கிரேக்கம் கடன் செலுத்த முடியாமல் 2009ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதன் பின்னர் முழு நாடும் மிகவும் கடினமான சூழ்நிலையில் தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தது. அந்தக் காலத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. மீண்டும் அந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சுமார் 10 வருடங்கள் தேவைப்பட்டது.
நமது நாடு குறுகிய காலத்தில் இத்தகைய விதிவிலக்கான சாதனைகளை எட்டுவது உண்மையில் உலக சாதனையாகும். எங்களால் எப்படி அவ்வாறான சாதனைப் படைக்க முடிந்தது?
2022ஆம் ஆண்டு முழுவதும் பொருளாதாரம் சரிந்தது. 2022 ஆம்ஆண்டை விட 2023இல் ஓரளவு பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடிந்தது. இது தற்செயலாக நடந்ததல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.
மேலும், நாங்கள் தயாரிக்கும் கொள்கைகள், நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தையும் அவ்வப்போது நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். மக்கள் முன்னிலையிலும் அவ்வப்போது பகிரங்கமாக அறிவித்தேன். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவை பற்றி கலந்துரையாடவும் விவாதிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தக் கொள்கைகள் ஒருபோதும் மறைக்கப்படவில்லை. ஒவ்வொரு நடவடிக்கையையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்துள்ளோம்.
அரசியல் ஆதாயத்துக்காக நான் ஒருபோதும் முடிவுகளை எடுக்கவில்லை. ஒவ்வொரு முடிவையும் நாட்டு நலன் கருதியே எடுத்தேன். எமக்கு பாதகமாக இருந்தாலும் நாட்டுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுக்க நாங்கள் தயங்கவில்லை. தனிப்பட்ட இலாபங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்கு சரியான கொள்கைகளை செயற்படுத்தினோம்.
பாராளுமன்றத்திலுள்ள சில தரப்பினர் அந்த முடிவுகளை எதிர்த்தனர். ஆனால் பெரும்பான்மையானோர் தமது தனிப்பட்ட அரசியல் நலன்களையும் இலக்குகளையும் பொருட்படுத்தாமல் நாட்டின் நலனுக்காக அந்த முடிவுகளுக்கு ஆதரவாக கையுயர்த்தினர்.
எதிர்காலத்தில் தேசத்தின் பாராட்டை அவர்கள் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
நாங்கள் இந்தப் பயணத்தில் படிப்படியாக முன்னேறிச் சென்றோம். 2022ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அன்றிருந்த நாட்டின் உண்மையான நிலைமையை நான் எடுத்துக் காட்டினேன். பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதே இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை நிலையான பாதைக்கு வழிநடத்தும் பல திட்டங்களை முன்வைத்தேன். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த தேவையான மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்டமாக 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
சிரமத்துடனும் சில சமயங்களில் தயக்கத்துடனும் நாங்கள் செயல்படுத்திய பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கைகள் காரணமாக, நாங்கள் தற்போது நிலையான பொருளாதாரத்தை நிறுவுவதற்கான பாதைக்கு பிரவேசித்திருக்கிறோம். அத்தோடு சர்வதேச நிதி நிறுவனங்கள் எங்கள் இலக்குகள் மற்றும் பயணம் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளன.
இருண்ட பொருளாதார சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த நாம் தற்போது சுரங்கத்தின் முடிவில் வெளிச்சத்தைக் காண்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பொருளாதாரம் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டு மக்கள் பலர் நினைத்துப் பார்க்க முடியாத இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. சிலர் தொழில்களை இழந்தனர். மேலும் சிலர் தங்கள் வருமான வழிகளை இழந்தனர். சிலர் தொழில் வாய்ப்புகளை இழந்தனர். இன்னும் சிலர் உரிமைகளை இழந்தனர். பெரும்பாலான துன்பங்கள் சாதாரண மக்களுக்குத்தான் சொந்தமானது.
இழந்த வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு வழங்க தற்போது நாம் முயற்சிக்கிறோம். மக்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் வேலைத் திட்டத்தை ‘உரித்து’ என்ற பெயரில் அண்மையில் ஆரம்பித்தோம். உரித்து வேலைத் திட்டத்தின் ஊடாக இரண்டு அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றோம். ஒன்று காணி மற்றது வீடு.
இங்கு காணி உரிமை பிரதான இடத்தைப் பெறுகிறது. 1897 தரிசு நிலச் சட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையை காலனித்துவப் பிரித்தானிய அரசு பெற்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கமும், பறிக்கப்பட்ட காணி உரிமைகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த காணி உரிமையை மீள வழங்கும் பணியை நாம் ஆரம்பித்துள்ளோம். இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக எமது சமூகத்தில் இணைக்கின்றோம். இது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த மற்றும் புரட்சிகரமான நகர்வாகும். அரிசியில் தன்னிறைவு பெற பல தசாப்தங்களாக விவசாயிகள் அனுபவித்த கடின உழைப்பக்கு வழங்கப்படும் ஒரு கௌரவமாகும்.
மேலும், இந்நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு முறையான வருமானம் கிடையாது. பொருத்தமான வீடு இல்லை. இந்த மக்களுக்கு வருமான வழி மற்றும் வீட்டு உரிமை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம். நகர்புர, குறைந்த வருமானமுடைய 50,000இற்கும் மேற்பட்டோருக்கு முழுமையான வீட்டுரிமை வழங்கப்படும்.
வெற்றிகரமான பொருளாதார அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் போது நாட்டின் அனைத்துத் தரப்பினர் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக வறிய மற்றும் நிர்க்கதியான மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் மக்கள் நலனுக்காக நடவடிக்கை எடுத்தோம்.
இந்த ஆண்டு அஸ்வெசும ஊடாக 24 லட்சம் பேருக்கு நன்மைகள் அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். நமது நாட்டின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை நிதி மானியம் வழங்கப்படவில்லை. வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும்.
2022 ஓகஸ்ட் மாதமளவில், ஜனாதிபதி நிதியம் முற்றிலும் செயலிழந்தது. 9,000இற்கும் மேற்பட்ட மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள், பணம் இல்லாமல் குவிந்திருந்தன. ஓகஸ்ட் முதல் டிசம்பர் வரை மேலும் 4,000 விண்ணப்பங்கள் வரை கிடைத்தன. அவை அனைத்திற்கும் பணம் செலுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் 4,917 நோயாளர்களுக்கு 915 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.
தற்போது பணம் செலுத்துவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மூன்று அல்லது ஜந்து வேலை நாட்களுக்குள் பணம் செலுத்தும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து மருத்துவ உதவிகளையும் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உதவித் தொகைகளுக்கு மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு நாம் விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்கினோம். ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளத்தை உயர்த்தினோம். 2016 முதல் 2020 வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடு உள்ளது. அந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்கு சமாந்தரமாக நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் அடைந்துவரும் வளர்ச்சி சமூகத்தில் பேசப்படும் தலைப்புகளில் பிரதிபலிக்கிறது. சில காலம் முன்பு மின் வெட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசினோம். அப்போது, எவ்வளவு கொடுத்தாலும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இன்று நாம் மின்சாரக் கட்டணத்தைப் பற்றி பேசுகிறோம். சில காலத்திற்கு முன்பு கறுப்பு சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோல் 3000 ரூபாவிற்கு வாங்கப்பட்டது குறித்து பேசப்பட்டது. எரிபொருள் வரிசைகளில் மூன்று அல்லது நான்கு நாட்கள் செலவிடுவது பற்றி பேசப்பட்டது. இன்று நாம் இலங்கையில் முதலீடு செய்யும் புதிய எரிபொருள் நிறுவனங்கள் பற்றி பேசுகிறோம். காய்கறி வாங்க வழியில்லை என்று பேசிக்கொண்டனர். இன்று ஒரு கேரட்டின் விலை பற்றி பேசுகின்றனர்.
புத்தகம் அச்சடிக்க காகிதம் இருக்கவில்லை என்று அன்று கூறப்பட்டது. இன்று வற் வரி பற்றிப் பேசுகிறோம்.
ஆம். வற் வரி பலருக்கு சுமையாக உள்ளது. இந்தப் பிரச்சினையை நாம் உணராமல் இல்லை. அந்தப் பிரச்சினைக்கு நாம் படிப்படியாக தீர்வுகளை வழங்கி வருகிறோம். 2022 இல் 437,547 வரிக் கோப்புகள் இருந்தன. 2023 இறுதியில் வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 1,000,029 ஆக உயர்ந்துள்ளது. இது 130 சதவீத அதிகரிப்பு. வரி வலையமைப்பு விரிவடையும் போது, ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ ஏற்படும் வரிச்சுமை குறையும். மேலும், நமது பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதைத் தொடரும்போது, பொருளாதாரம் ஸ்திரமாகும்போது, வரிச்சுமையைக் குறைப்போம். “வற்” வரியின் சதவீதத்தை திருத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
மலையளவு கடனைச் சுமந்துகொண்டுதான் இதையெல்லாம் செய்கிறோம். கடந்த காலம் முழுவதும் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முறை குறித்து மீள் திட்டத்தைத் தயாரிப்பதில் நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். முதல் கட்டமாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டமாக, வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டது. தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த சிக்கலான மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம். இது நமது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படையாக அமையும். மேலும் கடன் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பாதையின் மையமாக இது மாறிவிட்டது.
IMF, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இந்த ஆண்டு 2% முதல் 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்று கணித்துள்ளன. 2025இல் அதை 5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
2021 ஆம் ஆண்டில், தீயில் விழிந்திருந்த நாட்டை மீட்பதற்கான பணிகளை நாம் ஆரம்பித்தோம். 2021 ஐ விட சில விடயங்களை 2022ஆம் ஆண்டு மேம்படுத்திக் கொண்டோம். 2022 ஐ விட 2023 எல்லா வகையிலும் மேம்படுத்திக் கொண்டோம். 2024. இது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால், 2025 இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஆனால் அதில் மாத்திரம் திருப்தி அடைய முடியுமா?
வெளிநாடுகள் மற்றும் வெளி வணிக தளங்களில் இருந்து பெற்ற எந்த கடனையும் நாங்கள் இன்னும் செலுத்தவில்லை. ஆனால் மறுசீரமைப்புக்குப் பிறகு நாம் கடனைச் செலுத்தத் தொடங்க வேண்டும். கடனை மீளச் செலுத்த ரூபாவைப் போன்று டொலர்களும் எம்மிடம் இருக்க வேண்டும்.
2023 செப்டெம்பர் மாத மளவில் மொத்தக் கடன் 91 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. இந்த கடன்களை செலுத்த நீண்ட காலம் அவசியப்படும். அதற்காக நாம் தேசிய மட்டத்தில் வருமானம் ஈட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாம் மீண்டும் கடன் பிடிக்குள் சிக்கிக்கொள்வோம்.
கடன் மறுசீரமைப்பு காரணமாக வருடமொன்றிற்காக நாம் செலுத்த வேண்டிய தொகையை குறைத்துக்கொள்ள முடியும். ஆனாலும் நாம் வருடத்திற்கு 3 பில்லியன் டொலர்கள் வரையில் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கடனில் சிக்கியிருக்க முடியாது. அதேபோல் கடன் பெறவும் முடியாது.
அதேபோல் எமது வரவு செலவுக்கு இடையிலான சமநிலையை உருவாக்குவதற்கான துரித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது வரவு செலவு திட்ட துண்டுவிழும் தொகை பாரதூரமானது. இவ்வருடத்தில் 4,127 பில்லயன்களை அரசாங்கம் வருமானமாக ஈட்டியிருந்தாலும் அரசாங்கத்தின் செலவு 6,978 பில்லியன்களாக உள்ளது. அவற்றில் 2,651 பில்லியன்கள் கடனுக்கான வட்டியாக செலுத்துவதற்காகவே செலவிடப்படுகிறது. இதன்மூலம் எங்களின் கடன் சுமையை உணர முடியும்.
1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாங்கள் தொடர்ந்து கடன் வாங்கிவந்துள்ளோம். எல்லாவற்றுக்கும் கடன் வாங்கியுள்ளோம். ஆட்சியாளர்களும் கடன் வாங்கப் பழகினர். மக்களும் இந்தக் கடன் பொருளாதாரத்துக்கு ஏற்றார்போல் இசைவாக்கமடைந்தனர். அரிசி இலவசமாக வழங்கப்படும், மின் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும், சம்பளம் அதிகரிக்கப்படும், இலட்சக்கணக்கில் அரச வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இவ்வாறான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததும் அவை கடன் பெற்று நிறைவேற்றப்பட்டன.இந்தக் கடன் மனப்பான்மையில் இருந்து விடுபட வேண்டும். கடன் பொருளாதாரத்தில் இருந்து விடுபடாவிட்டால் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. எதிர்காலம் ஒன்று இல்லாமல் போகும்.
எனவே கடன் பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு நமக்கான வலுவான பொருளாதாரத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.
இவற்றை அடைவதற்கு ஏற்றுமதி வருமானத்தையும், வெளிநாட்டு முதலீடுகளையும் விரைவாக அதிகரிப்பது இன்றியமையாதது. அதற்குத் தேவையான அடித்தளத்தை அமைத்து, பல பொருளாதார சீர்திருத்தங்களை தற்போது செயல்படுத்தி வருகிறோம். போட்டிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது பிரதான எதிர்பார்ப்பாகும். அதேபோல் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரத்தையும் உருவாக்க எதிர்பார்க்கிறோம்.ஊழலை ஒழித்தல் மற்றும் சமூக நவீன மயமாக்கல் என்பனவே இந்த செயல்முறையின் முக்கிய அம்சங்களாகும்.
இந்த நாட்டில் ஊழல் ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், முறைமையான சட்ட விதிகளால் மாத்திரமே ஊழலை ஒழிக்க முடியும் என்பதை பலர் உணரவில்லை. திருடர்கயைப் பிடியுங்கள் என்று கூச்சல் போடுவதால் மாத்திரம் திருடர்களைப் பிடிக்க முடியாது. திருடர்களைப் பிடிப்பதற்கு, வலுவான சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மற்றும் அறிவியல் முறைகள் தேவை. அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய பயிற்சி பெற்ற அதிகாரிகளும் தேவை.
ஊழல்வாதிகளை நீதியின் முன் நிறுத்தினால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். இது ஒரு மாயை. ஊழலைத் தடுக்கவும் கடுமையான சட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும் ஊழல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஊழலை ஒழிக்க இந்த இரண்டு விடயங்களும் ஒன்றாக செயல்படுத்தப்பட வேண்டும்.
அதற்காக, ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றினோம். தற்போது சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் ஒருபோதும் அரசியல் அல்லது பிற அழுத்தங்களைப் பிரயோகிக்க மாட்டோம். அது தற்போது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் சமூக நவீனமயமாக்கலில் நாம் கவனம் செலுத்தும் சில முக்கிய விடயங்கள் குறித்தும் இந்த கௌரவ சபைக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
சுற்றுலாத்துறையை எம்மால் எளிதாக அபிவிருத்தி செய்ய முடியும். அந்தத் துறையில் முன்னேற்றத்திற்கு தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்தவும், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை வருடத்திற்கு 05 மில்லியனாக அதிகரிப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
நமது நாடு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் நிறைந்த நாடு. அந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சர்வதேச தொழில்நுட்பத்தைப் பெற்று, நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்தால், வலுசக்தி ஏற்றுமதி செய்யும் நாடாக அந்நியச் செலாவணியைப் பெறலாம்.
பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உற்பத்தியில் நாம் உயர்ந்த நிலையை அடைய வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஆரம்ப கட்டத் திட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றம் குறித்து நாம் ஏற்கனவே கவனம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் இருந்து தற்போது வரை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். பயிரிடுகின்றோம். ஆனால் இன்னும் காலாவதியான முறைகளையே பின்பற்றி வருகிறோம். பல தசாப்தங்களாக எந்த விவசாய நவீனமயமாக்கல் பணிகளையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை.
அடுத்த மூன்று, நான்கு போகங்களில் உலர் வலயத்தில் விவசாய நிலங்களின் உற்பத்தியை இரண்டு, மூன்று மடங்கினால் உயர்த்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதற்கான கொள்கை ரீதியிலான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். இம்மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டு இப்பணிகள் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு, உலர் வலயத்தில் விவசாயப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், ஈரவலயப் பகுதியில் உள்ள நிலத்தை ஏனைய வர்த்தகப் பயிர்களுக்குப் பயன்படுத்தவும் வாய்ப்புக் கிடைக்கின்றது.
எழுபதுகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட பயனுள்ள பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் தற்போது வீணாகிவிட்டன. சில நிலங்களில் உரிய பயனைப் பெறுவதில்லை. சில நிலங்கள் முற்றாகப் பயன்படுத்தப்படவில்லை. ஜனவசம, பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் போன்ற பல்வேறு அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகள் வீணாகி வருகின்றன. அது மாத்திரம் அல்ல. இந்த அரச நிறுவனங்களைப் பராமரிக்க பில்லியன் கணக்கான அரச பணம் செலவிடப்படுகிறது. இரு பக்கத்திலும் நாட்டிற்கு இழப்பு. பாரிய வீண்விரயம் இடம்பெறுகிறது.
இந்த நிலங்களிலிருந்து அதிகபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கு பயனுள்ள வேலைத் திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த நிலங்கள் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு ஏற்றுமதி வணிக பயிர்ச்செய்கைக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.
அவசியம் ஏற்பட்டால், அந்த தொழில்முனைவோர் வெளிநாட்டு தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டைப் பெற அனுமதியும் வழங்குவோம். முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகப் போகும் நிலங்களை அந்நியச் செலாவணி ஊற்றுக்களாக மாற்றி பொருளாதார வளர்ச்சிக்கு வலுவாகப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
கடந்த சுதந்திர தினத்திற்கு பிரதம அதிதியாக இங்கு வருகை தந்த தாய்லாந்து பிரதமர், தனது நாட்டில் முன்னெடுத்த விவசாய புரட்சி குறித்த விடயங்களைக் குறிப்பிட்டார். தாய்லாந்து பாரம்பரிய முறைகளில் சிறைப்பட்டிருக்காமல் நவீன தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துவதால் விவசாயத்தின் மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது. அவற்றிலிருந்து நாமும் பாடம் கற்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். நமது பொருளாதாரத்தை விரைவாக வலுப்படுத்த வெளிநாட்டு முதலீடுகள் ஊடாக பாரிய உந்து சக்தி கிடைக்கிறது. ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரத் தயங்குகின்றனர்.
இலங்கையில் முதலீடு செய்வது ஒரு தலைவலி. பிரச்சினை. அனுமதி பெறுவதில் பல உத்தியோபூர்வ தடைகள் உள்ளன. அது மட்டும் அல்ல. சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாரிய அளவில் கவரும் வகையில் வேலைத் திட்டங்களை நாம் தற்போது தயாரித்துள்ளோம். ஒரு எளிய செயல்முறை மூலம் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதை இது சாத்தியமாக்குகிறது. இது ஊழலை மோசடிகளைத் தடுக்கிறது.
சீனா, வியாட்நாம் போன்ற நாடுகளில் முதலீடு செய்வதற்கான அனைத்து அனுமதிகளும் வசதிகளும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஒரே கூரையின் கீழ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிலம் மட்டுமின்றி, மின்சாரம், நீர் வசதிகள், வீதிக் கட்டமைப்பும் மிக விரைவாக செய்து தரப்படுகிறது. பெரும்பாலான பணிகள் கணனி மூலம் செய்யப்படுவதால், சட்ட விரோத செயல்களுக்கு வாய்ப்பில்லை. இந்த அனைத்து விடயங்கள் மற்றும் சர்வதேச தரங்களின் அடிப்படையில், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான அடிப்படை பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பரந்த அளவில் நடைமுறைப்படுத்தப்படும் பலவிதமான முதலீட்டு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் இந்த ஆணைக்குழு மூலம் செயல்படுத்தப்படும்.
அதேபோல் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே இலங்கையின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் அடிப்படை சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அக்காலத்தில் நாம் காலணித்துவ நாடாக இருந்தோம். அப்போது நாம் மிகவும் வறுமையான நாடாக இருந்தோம். எனவே, அத்தகைய சமூகத்திற்காக வடிவமைக்கப்பட்ட கல்வி மற்றும் சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் நவீன உலகத்தை அணுகுவது சாத்தியமற்றது. இவற்றின் மூலம் 21ஆம் நூற்றாண்டின் சவால்களை சமாளிக்கவும் முடியாது.
அதனால் சர்வதேச அனுபவம், நடைமுறைகளின் அடிப்படையில், இரண்டு துறைகளுக்குமான புதிய அணுகுமுறைகள் மற்றும் புதிய சட்டத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். புதிய சூழலுக்கு ஏற்ற வகையில் மனித வளம் மேம்படுத்த வேண்டும். வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் பாதுகாப்பிற்காக துரித நவீனமயமாகக்கல் வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விசேடமாக கல்வி மறுசீரமைப்புக்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
உலகின் எதிர்காலம் புதிய தொழில்நுட்ப அறிவின் மீதே தங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் திறன் மிக்க இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும். அதற்காகவே உயர்தரத்தில் சித்திபெறும் மாணவருக்குசெயற்கைக் நுண்ணறிவுக் கல்வியை வழங்குவதற்கான கொள்கையைத் தயாரித்து வருகிறோம். அதற்கான பல அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களை நிறுவும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சாதாரண தரம், உயர்தரத்தில் சித்தி பெறாத அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்லூரிகளை உருவாக்குவோம்.
புதிய அறிவு மற்றும் புதிய தொழில்நுட்பத் தெரிவுடன் கூடிய புதிய சந்ததியை உருவாக்குவதற்கு அவசியமான பின்னணியை நாம் ஏற்படுத்துவோம்.
அதேபோல் எமது நாடு ஒரு தீவாகும். அதற்கு உகந்த வகையிலான பாதுகாப்பை உறுதி செய்யும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு வலையமைப்புக்களும் அதற்கேற்ப நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சி முறைகள், படையினர், இராணுவ உபகரணங்கள், மூலோபாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும், நாட்டில் ஏற்படக்கூடிய பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்தி வருகிறோம்.
நமது வெளிநாட்டு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும். அதே போல் பூகோள அரசியல் நகர்வுகளின் மாற்றங்களுக்கு ஏற்ப பொருளாதார வாய்ப்புக்களைப் பெறும் வகையில், உரிய பலன்களைப் பெறும் வகையில் மறுசீரமைக்க வேண்டும். எனவே, அனைத்து நாடுகளுடனும் அணிசேராக் கொள்கையுடனும் நட்புறவு அடிப்படையிலும் வெளிநாட்டு உறவுகளைத் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நமது வெளியுறவுக் கொள்கைகள் காலோசிதமானதாக மாற்ற வேண்டும்.
அதேபோல், பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்கிகொள்ள புதிய முறையிலான வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கமைய எமது வெளியுறவுக் கொள்கைகளை காலத்திற்கேற்ற வகையில் மறுசீரமைத்துக் கொள்வோம்.
நமது தயாரிப்புகள் வெளிநாட்டு சந்தைகளைச் சென்றடைவதற்கு அவசியமான அனுமதியை பெற்றுத் தரக்கூடிய வகையில் பொருளாதார உறவுகளை கட்டமைப்போம். அதற்காக பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கைசாத்திட ஆரம்பித்துள்ளோம். இதற்கமைய அண்மையில் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொண்டோம். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், முழுமையான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்படும். சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சீனா, இந்தோனேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கைசாத்திட எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோல் வலயத்தின் பரந்துபட்ட பொருளாதார கூட்டமைப்பான RCEP இல் இணையவுள்ளோம். அதேபோல் ஐரோப்பிய சங்கத்தின் வர்த்தகத்துக்கான பொது முறைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவோம்.
இவ்வாறு பல்வேறு துறைகளை நவீனப்படுத்துவதன் பலனாக நாட்டு மக்களின் வாழ்க்தைத் தரம் மேம்படும். நாட்டின் அனைத்துப் தரப்பினருக்கும் பலன்கள் கிடைக்கும் வகையில் வெற்றிகரமான திட்டத்தைச் செயல்படுத்தும் அதேநேரம் நல்லிணக்கமும் சமூக நீதியும் உறுதிப்படுத்தப்படும்.
நாங்கள் மற்றொரு விடயம் குறித்து கவனம் செலுத்துகிறோம். இன்று எமது பொருளாதாரம் கொழும்பு நகரையும் மேல் மாகாணத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. நாட்டின் 46 வீதமான பொருளாதாரம் மேல் மாகாணத்திலிருந்தே முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். மேல் மாகாணத்திற்கு வெளியே பொருளாதாரம் விரிவுபடுத்தப்பட வேண்டும். யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி உள்ளிட்ட நகரங்களிலும் எமது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான வேலைத் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம். தற்போதும் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
மேலும், ஒன்பது மாகாணங்களினதும் பொருளாதாரத்தைப் பலப்படுத்த அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசியலமைப்பில் மாகாண சபை அதிகாரங்களின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவோம். தொழிற்கல்வி, விவசாயம் போன்ற துறைகளை உதாரணமாகக் கூறலாம். அதன் மூலம் ஒவ்வொரு மாகாணத்திலும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும். மாகாணங்களுக்கு இடையில் பொருளாதாரப் போட்டித் தன்மையை உருவாக்குவதன் மூலம், ஒன்பது மாகாணங்களும் ஒரே நேரத்தில் அபிவிருத்தியடைவதற்கான வாய்ப்பு உருவாகும்.
எமது நாட்டின் புவியியல் அமைவிடத்தை மையப்படுத்தி உயரிய பலனை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம். அதற்காக மூன்று துறைமுகங்களில் புதுவிதமான அபிவிருத்தியை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். அதனால் இந்து சமுத்திரத்தின் சேவை மத்தியஸ்தானமாகவும் பொருளாதார மத்திய நிலையமாக மாற்றுவதற்கும் எதிர்பார்க்கிறோம்.
அதற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் கொழும்பு துறைமுக நகரத்தை விசேட நிதி வலயமாக பிரகடனப்படுத்துவோம். அதற்குள் வெளிநாட்டு நிதி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சட்டத்திட்டங்களை உருவாக்குவோம்.
எமது நாட்டின் தேசிய வளம் எமது இளம் சமூகத்தினர் என்பதை அடிக்கடி நினைவுகூறுகிறேன். அந்த வளத்தைப் பாதுகப்பது எமது ஒருமித்த நோக்கமாகும். இளம் சமூகத்தின் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பிற்கு நிகரானதாகும். கடந்த காலங்களில் இளம் சமூனத்தினர் நாட்டை விட்டுச் சென்றனர். அந்த நிலை தற்போதும் உள்ளது. அதனால் எமது இளம் சமூகத்தினருக்கு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரையும் சார்ந்துள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை. பொருளாதார ரீதியான தீர்வே உள்ளது. அறிவியல் தீர்வை தேட வேண்டும். அதனைவிடுத்து சில அரசியல் குழுக்கள் பழைய அரசியல் தீர்வுகளை கூறி பிரசித்தமடைய முயற்சிப்பது கவலைக்குரியதாகும்.
இவ்விடத்திலிருந்து முன்னேறிச் செல்வதற்கு புதிய வலுவான பொருளாதாரத்திற்கு நாம் மாற வேண்டும். அதற்கான பொருளாதார மாற்றச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். அதற்குரிய புதிய நிறுவனத்தையும் உருவாக்க வேண்டும்.
அரசியல் அபிலாஷைகளை மனத்தில் வைத்துக்கொண்டு, தேர்தலில் பெறும் வாக்குகளை இலக்காகக் கொண்டு, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி அல்லது வீண்கதை பேசி எம்மால் முன்நோக்கிச் செல்ல முடியாது. மாறாக எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான வேலைத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த மாற்றத்தைக் குறுகிய காலத்தில் செய்துவிட முடியாது. அதற்காக நீண்ட கால முயற்சியும் அர்ப்பணிப்பும் அவசியப்படும். அதே பாதையில் தொடர்ந்து சென்றால் 2048 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறலாம். எந்த நெருக்கடிக்கும் குறுகிய கால தீர்வுகள் இல்லை. இரண்டு நாட்களில் எந்த இலக்கையும் அடைய முடியாது.
புத்த பெருமான் ஞானம் பெறுவதற்காக மிக நீண்டகாலம் ஆனது. ஞானம் பெற்ற பின்னரும் அவர் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதனைப் புரிந்து கொண்டு நாம் நிதானமாகவும் திட்டமிடலுடனும் முன்னேறிச் செல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் புத்தரின் பிரசங்கம் ஒன்றைக் கூறினேன். புத்தரின் பிரசங்கத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்துவுக்கு முந்தைய ஐநூறாம் ஆண்டுகளில் சீனாவில் வாழ்ந்த தத்துவஞானி கன்பூசியஸ் என்பவர்” உலகைக் கட்டியெழுப்ப முதலில் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். தேசத்தை கட்டியெழுப்புவதற்கு முன் குடும்பத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
குடும்பத்தைக் கட்டியெழுப்பும் முன்னதாக எமது தனிப்பட்ட வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு முன்னதாக எமது மனதைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
எனவே, இந்த சபையில் உள்ள அனைவரும் முதலில் மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க, அவர்களுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப, நாம் அனைவரும் சரியான பாதையில் செல்ல வேண்டும். அதற்காக நம் மனதைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டால் மட்டுமே நமது பயணத்தைத் துரிதப்படுத்த முடியும். தமக்குக் கிடைக்கும் அந்தஸ்த்துகள் பற்றி கனவு காணும் சிலர், அந்த நாட்டை விடவும் பதவிகளை அதிகமாக நேசிக்கின்றனர். அந்த பதவிகளுக்காக நாட்டுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். நாட்டையும் மக்களையும் ஏமாற்றுகின்றனர். நடைமுறையை உணராமல் கனவுப் பாதையில் செல்ல முற்படும் பட்சத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்ள நேரிடும்.
நாட்டைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன். அதற்காக ஒற்றுமையாக கலந்துரையாடுவோம். நாங்கள் செயல்படுத்தும் முறையை விட சிறந்த மாற்று முறைகள் இருந்தால், அவற்றைக் கூறுங்கள். அவற்றை ஆழமாகப் ஆராய்வோம். அது குறித்தும் கலந்துரையாடுவோம். அவற்றில் நாட்டுக்குச் சிறந்தென கருதப்படும் யோசனையைச் செயற்படுத்துவோம். அவ்வாறான பேச்சுக்களில் கலந்துகொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம். அவ்வாறான பேச்சுக்களுக்குக்கு தயார் எனில், அந்தக் கலந்துரையாடல்களுக்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் பிரதானிகளையும் அழைப்பிக்க முடியும்.
கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் தொடர்பில் இரு உதாரணங்களைக் கூற விரும்புகிறேன்.
19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் எழுத்தாளரும் பேச்சாளருமான எலன் கெல்லர் “தனியாக நாம் சில விடயங்களை மட்டுமே செய்ய முடியும். ஒன்று பட்டால் பல விடயங்களை செய்யலாம்.”
19 ஆம் நூற்றாண்டில் மகாகவி பாரதியார் தனது நாடு பற்றி எழுதிய கவிதையொன்று நினைவிற்கு வருகிறது. அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன
”முப்பது கோடி முகமுடையாள்
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்”
அவ்வாறான எண்ணம் எமக்கு ஏன் வரவில்லை? பல்வேறு எண்ணங்கள் இருந்தாலும் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும், பல்வேறு பிரச்சினைகள், நம்பிக்கைகள் இருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், எமது நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் ஒருமித்த எண்ணத்துடன் ஒன்றுபட முடியாமல் இருப்பது ஏன்? எமது நாட்டு இளைய சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட முடியாதிருப்பது ஏன்?
மீண்டும் – மீண்டும் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பொது நோக்கத்துடன் ஒன்றுபடுங்கள். மாற்றத்தை நம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமக்கு நாமே ஔியாவோம்.
இந்தச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பல தசாப்தங்களாக என்னை விமர்ச்சித்தவர்களே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளனர். நாட்டின் நன்மைக்காகவும், இளையோரின் எதிர்காலத்திற்காகவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாளானவர்கள் பழைய பகையை மறந்துவிட்டு ஒன்றுபட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் என்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள். நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களும் உள்ளனர். நாட்டுக்கான பொது பயணத்தில் இணைந்துகொள்ள பொதுஜன பெரமுனவால் முடியுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியால் அதனை செய்ய முடியாதிருப்பது ஏன்?
மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எம்முடன் நெருக்கமாக செயற்பட்டது. ஊழல் ஒழிப்பு பிரிவின் அலுவலகத்திற்கு ஆனந்த விஜயபாலவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அவ்வாறிருக்க நாட்டின் பொது முன்னேற்றத்திற்கான பயணத்தில் இணைய முடியாதிருப்பது ஏன்?
இந்தச் சபையில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளன. எனினும், நாட்டிற்காக இந்தக் கட்சிகளுக்கு பொதுப் பயணத்தில் ஏன் இணைந்துகொள்ள முடியாது.
நாம் தேர்தலில் வெவ்வேறாக போட்டியிடுவோம். ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்துகொள்வோம்.
அதனால் நாட்டை முன்னேற்ற பொது நிலைப்பாட்டுடன் – பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வாருங்கள் என மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமது மனங்களைத் திருத்திக்கொள்வோம். எமக்கு நாமே ஔியாவோம். நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். தனிப்பட்ட நோக்கங்களுக்காக அன்றி நாட்டின் பொதுக் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம். அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம். எம்மீது சாட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவோம். பல்வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இந்த பொறுப்புக்களைப் புறக்கணித்தால் வரலாற்றில் நாம் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவோம். அதனால் புதிய பயணத்தைத் தொடர்வோம். புதிய எதிர்காலத்தை, புதிய நாட்டை உருவாக்குவோம்.
வாருங்கள் ஒன்றுபட்டு நாம் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்….!