அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும்

களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் பின்படிப்பு பிரிவின் கட்டிட திறப்பு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு.
  • இந்நாட்டு கல்வியில் பொற்காலத்தை உருவாக்க ஜனாதிபதி ரணில் அன்று முதல் கடுமையாக உழைத்து வருகிறார் – சிரேஷ்ட பேராசிரியர் வண. மெதவச்சியே தம்மஜோதி தேரர்.
  • பல்கலைக்கழகங்கள் என்பது விடுவிக்கப்படாத பிரதேசம்கள் அல்ல, நாட்டின் தலைவர் உட்பட எந்தவொரு நபருக்கும் பல்கலைக்கழகத்திற்கு வரமுடியும்  – பேராசிரியர் வண. ரளுவே பத்மசிறி தேரர்.
  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எமது தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து உருவான பட்டதாரி – சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க.
அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை இன்று (31) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகொள்ள புத்த பெருமானின் போதனைகள் மிக முக்கியமானது. அத்தகைய தர்மத்தின் ஆழத்தை அறிந்து அதனை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தேரவாத பௌத்தத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையைச் சார்ந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்காக தேரவாத பௌத்த ஆய்வு நிறுவனம் ஒன்றை நிறுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான நிறுவனங்களுக்கு தேரவாத பௌத்தத்தை உலகிற்கு கொண்டுச் செல்லவும், பௌத்த நாடுகளுடனான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வதற்குமான இயலுமை உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப யுகத்திற்கு தேவையான வகையில் இலங்கையின் கல்வியை பலப்படுத்த எதிர்பார்ப்பதோடு, அனைத்து பல்கலைக்கழங்களிலும் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு நிறுவனத்தில் கற்கும் மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க மாணவர் விடுதியொன்றை நிர்மாணிப்பதற்கான காணியையும் அரச அனுசரணையும் வழங்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது புதிய கட்டிடம் நிர்மாணிப்பதற்கு உதவிய வௌிநாட்டு நன்கொடையாளர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவு பரிசுகள் வழங்கினார்.வைக்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“2019 ஆம் ஆண்டில் இந்த கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நடுவதற்கு பிரதமராக வந்திருந்தேன். இன்று கட்டிடத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதியாக வந்துள்ளேன். கொரோனா தொற்று பரவலால் இந்த கட்டிட நிர்மாண பணிகள் தாமதமாகியிருந்தன. வித்யாலங்கார பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு ரதனசார தேரர் முன்னெடுத்திருந்த செயற்பாடுகள் சிறப்பானவையாகும். அதேபோல் கொடபிடிய ராஹுல நிறுவனத்தின் தேரரும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகொள்ள புத்த பெருமானின் போதனைகள் முக்கியமானவை. அவற்றை ஆழமாக ஆராய்ந்து உலகவாழ் மக்களுக்கு வழங்குவதற்காக இந்நிறுவனம் பெரும் பணிகளை ஆற்ற முடியும். இந்த நிறுவனம் நிறுவப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகிறது.
பௌத்த நாடுகளில் மட்டுமன்றி ஏனைய நாடுகளுக்கும் தேரவாத பௌத்தத்தைப் பற்றிய தெரிவை வழங்கக்கூடிய பொறுப்பு எமக்கு உள்ளது. மேலும், இந்த நிறுவனங்களின் மூலம் தேரவாத நாடுகளிடையே உறவுகளை வலுப்படுத்த முடியும்.
மகா விகாரையின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. லும்பினியில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்ட மாயாதேவி குழுவினரே அந்தப் பணிகளை செய்கிறார்கள். அதேபோல பௌத்த தர்மத்தை ஆழமாக ஆராய்வதற்கான ஆய்வு நிறுவனம் ஒன்றை நிறுவ எதிர்பார்க்கிறோம். அது தொடர்பிலான அறிக்கை இவ்வருட இறுதிக்குள் கிடைக்கும். அரசாங்கம் என்ற வகையில் தேரவாத பௌத்தத்தை உலகிற்கு கொண்டுச் செல்ல அவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதனால் சர்வதேச பௌத்த நாடுகளுடனான தொடர்புகள் வலுவடையும்.
அதன் ஒரு அங்கமாக தாய்லாந்து பிரமருடன் இரு பௌத்த நாடுகளான இலங்கை – தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது.
அதேபோல் புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாகவும் பௌத்த தர்மம் தொடர்பில் தேடியறிவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு செயற்கை நுண்ணறிவு உதவும். கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான கற்கை நெறிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.
தொழில்நுட்ப யுகம் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நிற்காது. வரலாற்றில் இருந்த அணுகுமுறைகள் இன்று வேறுவிதமாக வளர்ச்சியடைந்துள்ளன. தொழில்நுட்ப யுகத்தின் தேவைக்கேற்ப இலங்கையில் கல்வி முறையை வலுப்படுத்துவோம். அறிவு மற்றும் பண்புமிக்க சமூகத்தின் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாலி கற்கைகளுக்கான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் மெதவச்சியே தம்மஜோதி தேரர்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்தபோது கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்து வைத்து கல்விக்கு பெரும் சேவை ஆற்றினார். அவருடைய பொருளாதார தெரிவின் பலனாகவே அந்நிய செலாவணி நாட்டுக்கு அதிகமாக கிடைக்கிறது. இந்த புதிய கற்கை பிரிவு நிறுவப்பட்டதால் இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி மேலும் வலுவடையும். தற்போதும் பெருமளவான மாணவர்கள் இங்கு கற்கின்றனர். இந்த நிறுவனத்திற்கு இன்று பொன்னான வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.
பௌத்த கலாசார பிரிவு பீடாதிபதி பேராசிரியர் மிரிஸ்வத்தே விமலஞான தேரர்,
இந்நிறுவனத்தின் மிக முக்கியமான நாளாக இன்றைய நாளைக் குறிப்பிடலாம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிறுவனம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்தது. இன்று முதன்முறையாக அரச ஆதரவுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் எங்களுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு வந்திருக்கிறோம். அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்கும் நிறுவனமாகவும், கல்வியின் மூலம் அதிக வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய நிறுவனமாகவும் இது இருக்கும். இந்த பணிக்காக அரசாங்கத்திடமிருந்து குறிப்பாக ஜனாதிபதியிடமிருந்து எமக்குக் கிடைத்த ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்றார்.
பௌத்த சிந்தனைப் பிரிவின் பேராசிரியர் வண. ரகுவே பத்மசிறி தேரர்,
பாலி மற்றும் பௌத்த பட்ட பின்படிப்புக்கான அரசாங்கத்தின் ஒரே நிறுவனம் இதுதான். இந்த கட்டிடத்தைத் திறந்து வைக்க வருகை தந்த நாட்டின் ஜனாதிபதிக்கு எமது ஆசிகளைத் தெரிவிக்கிறோம். நாட்டின் தலைவரோ அல்லது எந்த ஒரு அரசியல்வாதியோ பல்கலைக்கழகத்திற்கு வரக் கூடிய சூழல் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் என்பது விடுவிக்கப்படாத பிரதேசங்கள் அல்ல. இந்த நிறுவனத்திற்கு கட்சி, பேதம் கிடையாது. தர்மத்துக்கும் கட்சியோ, நிறங்களோ கிடையாது.” என்றார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க,
இன்றைய திறப்பு விழா முழு நாட்டுக்கும் விசேடமானதாகும். நாட்டில் 17 பல்கலைக்கழகங்கள் இருப்பதோடு அதில் 19 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் பட்டம் வழங்கும் நிறுவனங்கள் 09 மட்டுமே உள்ளன. அவற்றுள் ஒன்று தான் களனி பல்கலைக்கழகத்தில் உள்ள பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிறுவகம் ஆகும்.
கடந்த சில நாட்களாக களனிப் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பதற்றமான சூழல் காணப்பட்ட போதிலும், இன்று அமைதியான சூழல் காணப்படுகிறது. திறப்பு விழா பணி இன்று சிறப்பாக நடைபெற்றது. தேசிய பல்கலைக்கழகத்தின் ஊடாக உருவான எமது மாணவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்.” என்றார்.
பாலி மற்றும் பௌத்த பட்டப் பின்படிப்பு நிறுவன பேராசிரியர் வசந்த பிரியதர்சன,
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது இந்த நிறுவனத்திற்கு அடிக்கல் நட்டார். இன்று அவர் ஜனாதிபதியாக வருகை தந்து அதனை திறந்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று தெரிவித்தார்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ சங்க சபையின் அனுநாயக்க தேரர் பேராசிரியர் வண. கொடபிட்டியே ராஹுல அனுநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், களனி பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா உள்ளிட்ட விரிவுரையாளர்கள், மியன்மார் தூதுவர் ஹன் தூ உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.