தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது
தேசிய புத்தரிசி விழா (06) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது.
பாரம்பரியமாக பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அடமஸ்தானாதிபதி வண. பல்லேகம ஹேமரதன தேரரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினால் 57 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த சம்பிரதாயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து, “மழை, விளைநிலங்கள் செழிக்க” வேண்டியும், விவசாயத்தில் நாடு தன்னிறைவு அடைந்து வளமான பொருளாதாரம் ஏற்பட வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.
அடமஸ்தானாதிபதி வண. பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், தங்கப் பாத்திரத்தில் புத்தரிசியை நிரப்ப ஆரம்பித்ததுடன், மகா சங்கத்தினரின் பிரித் பாராயனத்துக்கு மத்தியில் தங்கப் பாத்திரத்தில் அரிசியை நிரப்பும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.
தேசிய புத்தரிசி விழாவின் நினைவுப் பதிப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அநுராதபுரம் மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர் புஞ்சிரால விவசாயி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விவசாயப் பிரேரணையை முன்வைத்தார். ஆதிவாசித் தலைவர் வன்னில எத்தோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேன் வழங்கினார்.
அடமஸ்தானாதிபதி கண்டி களவிய பிரதம சங்கநாயக பூஜ்ய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர் இங்கு விசேட அனுசாசனை உரை நிகழ்த்தியத்துடன், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவும் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்களான டி.பி ஹேரத், செஹான் சேமசிங்க, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க, இஷாக் ரஹ்மான், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித், முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன், ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.