நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

  • கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் மதத் தலைவர்களுக்கான பரந்த அளவிலான பணியுள்ளது – தேசிய சர்வமத மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

இனவாதமும் மதவாதமும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் மதத் தலைவர்கள் தமது பதவிகளில் நீடிப்பதற்கும் குறுகிய வழியாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட கால கசப்பான அனுபவமானது நாட்டைப் பயங்கரமான போருக்கு இழுத்துச் சென்றதையும் நினைவு கூர்ந்தார்.

எனவே நாட்டில் நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெற்ற “நல்லிணக்கத்துக்கான மதங்கள்” தேசிய சர்வமத மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

17 மாவட்டங்களை உள்ளடக்கி 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட “மோதல்களைத் தவிர்ப்பதற்கான பன்முக நடவடிக்கைகள்” திட்டத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த சர்வமத மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் போது மாவட்ட பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார்.

மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

மதத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் உள்ள தொடர்பை நாங்கள் நன்கு அறிவோம். எங்களுக்கு இனவாதம் மற்றும் மதவாதம் பற்றிய அனுபவம் உள்ளது. இதன் விளைவாக, நாங்கள் ஒரு பயங்கரமான போரை எதிர்கொண்டோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் சகவாழ்வு தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அனைத்து மதத் தலைவர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. நம் எண்ணங்களில் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் வாதிகளின் எண்ணம் அதிகாரத்தைப் பெறுவதிலே உள்ளது. அந்தந்த இடங்களில் இருக்க வேண்டும் என்பதே மதத் தலைவர்களின் சிந்தனை. இதற்கெல்லாம் குறுக்குவழி இனவாதம் மற்றும் மதவாதமாகும். 1930 முதல் நம் நாட்டில் இது நடந்து வருகிறது. இறுதி முடிவு என்ன என்பதை நான் குறிப்பிடத் தேவையில்லை.

உதாரணமாக, சிங்கப்பூரில் இனவாதமோ மதவாதமோ இல்லை. பல மொழிகள் பேசுவோர் இருந்தாலும், சிங்கப்பூர் இன்று துரித வளர்ச்சியை அடைந்துள்ளது.

தற்போது யுத்தம் இல்லாததால் நாட்டின் அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுகின்றது. எனவே சகவாழ்வில் கவனம் செலுத்த வேண்டும். இதுபற்றி பாராளுமன்றத்திலும் ஆராய்ந்து வருகிறோம். இலங்கையில் தேசிய மற்றும் மத சகவாழ்வை உறுதிப்படுத்தும் குழுவின் தலைவராக கரு ஜயசூரிய செயற்பட்டார். 2018 மார்ச்சில் முஸ்லிம்கள் தொடர்பான மோதல்கள், 2017 இல் காலியில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் 2014 இல் பேருவலயில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்தத் தெரிவுக் குழுக்களால் பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. அந்த முன்மொழிவுகளை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றினோம். அப்படியானால், அந்த உடன்பாட்டின் படி நாம் நடக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இறுதியில் பல பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் தலைவர்கள் இமயமலைப் பிரகடனத்தை கையளித்தனர். அந்த அறிக்கையின் பிரகாரம் செயற்பட்டு வருகிறோம். தற்போது நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான கடைசிப் பகுதியில் இருக்கிறோம். குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் எம்.பி.க்களுடன் இது குறித்து ஆலோசித்து வருகிறோம். எஞ்சியுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். காணாமற்போனோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அறிவிப்போம். மேலும், இது தொடர்பாக சிறையில் இருந்த சிலரை விடுவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதே இப்போதுள்ள பிரதான கேள்வியாகும்.இதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) அமைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளோம். காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பல அறிக்கைகள் உள்ளன. அவை தொடர்பில் ஆராய்ந்து நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸிடமிருந்து தனியொரு அறிக்கை பெறப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வரைவை நாங்கள் நிறைவேற்றிய பின்னர், தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா இந்த வேலைத் திட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார். ஏனைய நாடுகளிடமிருந்தும் அதற்கான உதவிகள் கிடைக்கின்றன. அதற்கமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் பின்னர் அரசியல் பிரச்சினைகள் உள்ளன. காணிப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மஹியங்கனை உள்ளிட்ட பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன.

அனைத்து தரப்பினரையும் அழைத்து, இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தேட எதிர்பார்க்கிறோம். 1985 வரைவின்படி செயற்படுமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். மேலும், அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ் கட்சிப் பிரதிநிகளைச் சந்தித்து இது குறித்து கலந்துரையாடவுள்ளேன். பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர் மேலும் பல காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். இதே முறையில் முன்னோக்கிச் செல்ல முடியும்.

அடுத்த பிரச்சினை அதிகாரப் பகிர்வு. அதற்குள் அதிகாரப் பகிர்வின் 3ஆவது பட்டியலின் அதிகாரங்களை வழங்குவதே இங்கு முதன்மையான கோரிக்கையாகும். பொலிஸ் அதிகாரத்தில் நாம் தலையிடப் போவதில்லை. அதனைப் பின்னர் பார்க்கலாம். காணிச் சட்டத்தை சமர்பிக்க வேண்டும். மேலும், 3ஆவது பட்டியலில் உள்ள மற்ற விடயங்களை வழங்குவதில் எமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. அதற்காக மற்றைய கட்சிகளுடன் கலந்துரையாடி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் இணக்கம் எட்டப்பட்டு வருகிறது.

அதேவேளை, மாகாண கல்விச் சபையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் தற்போது கலந்துரையாடி வருகின்றோம். ஒவ்வொரு மாகாணத்திலும் மாகாண தொழில் பயிற்சி நிலையங்களை நிறுவ எதிர்பார்க்கிறோம். சுற்றுலா சபை, விவசாய நவீன மயப்படுத்தலுக்கான மாகாண மட்ட குழுக்களை நியமிக்கவும் எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், இருபது அமைச்சுகள் செய்ய வேண்டிய பணியை 05 மாகாண அமைச்சுக்களின் கீழ் செய்ய முயற்சிக்கிறோம். இதன்போது, சாதாரணமான முறையில் செயற்பட முடியாது. எனவே
அதற்கேற்றவாறு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கிறேன்.

அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்த பின்னர் வரவு செலவு திட்டத்தின் ஊடாக பண்முகப்படுத்தப்பட்ட நிதி தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். அதேபோல் செனட் சபை தொடர்பிலான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை. ஆனால் அரசியலமைப்பு உருவாக்கப்படும் போதே அதனை செய்ய முடியும். அதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படலாம். அது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்க்கிறேன்.

அதனுடன் நாட்டுக்குள் புதிய சூழலைக் கட்டமைக்க வேண்டும். இந்த விடயத்தில் பெரும் பொறுப்புகள் மதத் தலைவர்களைச் சார்ந்துள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் கலந்துரையாடி சாத்தியமான பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மகா சங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்கள், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (Dr.Felix Neumann), இலங்கைக்கான தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டல் எட்வின் சல்க் (Sandile Edwin Schalk), ஐரோப்பியச் சங்கத்தின் உதவித் தலைவர் யொஹான் ஹெஸ் (Johann Hesse) உள்ளிட்டவர்களும், தூதரக பிரதிநிதிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் மஹேஷ் கட்டுலந்த, மாற்றுக் கொள்கைக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜோ விலியம் உள்ளிட்ட அதிகாரிகள், “மோதல்களைத் தவிர்ப்பதற்கான பன்முக நடவடிக்கைகள்” வேலைத் திட்டத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.