மடு தேவாலயத்தை இடையூறின்றி வழிபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்

  • மடு தேவாலய நுழைவு வீதியின் இரு புறங்களும் விரைவில் அபிவிருத்திச் செய்யப்படும்.
  • மன்னாருக்கு கிடைக்காமல் போன அபிவிருத்தி விரைவில் கிட்டும்.
  • மன்னார் வைத்தியாசாலைக்கு மிக விரைவில் CT ஸ்கேன் இயந்திரம் வழங்கப்படும்.
  • அரசியல் தேவைகளுக்குள் சிக்கிகொள்ளாமல் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றுவோம்.
  • மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு.
  • பல வருடங்களுக்கு பின்னர் மன்னார் அபிவிருத்திக்கு அதிகூடிய தொகையை ஒதுக்கியுள்ளமைக்காக ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராட்டு.

மன்னார் – மடு ​தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவாற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மடு மற்றும் சிவனொலிபாத மலை போன்ற புனித தளங்களுக்கான நுழைவு வீதிகள் அவற்றை வழிப்பட வருவோருக்காகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்து தண்டப்பணம் அறவிடுவது நியாமற்றதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மடு தேவாலயத்தில் வழிபாட்டுக்காக வருவோர் கைது செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக அது குறித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவிக்கும்படியும் ஜனாதிபதி இதன்போது அறிவித்தார்.

மன்னார் மாவட்டச் செலயகத்தில் இன்று (16) நடைபெற்ற விசேட மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மடு தேவாலயத்தை வழிபட வருவோருக்காக தேவாலய நுழைவு வீதியின் இரு புறங்களையும் தூய்மைப்படுத்தி அபிவிருத்தி பணிகளை செய்யுமாறு இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி, அந்த பணிகளுக்காக மன்னார் மறை மாவட்ட ஆயரின் பிரதிநிதி ஒருவர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் பொலிஸாரை தொடர்பு படுத்திக்கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.

எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும் மடு தேவாலயத்தின் உற்சவத்திற்கு முன்னதாக தூய்மைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மன்னாரின் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மாவட்ட சுகாதார,கல்வி,நீர்ப்பாசனம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காணப்படும் பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதியிடம் நேரடியாகச் சுட்டிக்காட்டப்பட்டதோடு, அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் ஜனாதிபதி அவ்வப்போதே வலியுறுத்தினார்.

அதேபோல் மன்னார் வைத்தியசாலையில் குறைப்பாடாக காணப்படும் CT ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுத்தருமாறு வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனமெடுத்து விரைவில் அதனை பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

மேலும் மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்காமல் போன் அபிவிருத்தியை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் இவ்வருடத்திலேயே ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

எதிர்வரும் ஐந்து தசாப்தங்களில் ஏற்படப்போகும் காலநிலை மாற்றங்களுக்கான தீர்வுகளை முன்கூட்டியே இலங்கை அறிந்துகொள்ள வேண்டியிருப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அடுத்த ஐம்பது வருட காலத்திற்கு உலர் வலயத்திற்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் அதேநேரம் வெப்ப வலயங்களுக்குள் மழைவீழ்ச்சி பதிவாகாத நிலைமை ஏற்படக்கூடுமென கணிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், மாற்றம் கண்டுவரும் உலகத்தின் நகர்வுகளுக்கமைய பொருளாதார, சமூக, கல்வி மற்றும் விவசாய துறையாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று வளர்ச்சி கண்டு வருகிறது. இம் மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும். இம்மாவட்டத்தில் சுற்றுலா, மீன்பிடித் தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பெற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன.

அதேபோல் இப்பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகவே உள்ளன. தேவை மிகுதியான வலுசக்தியை இந்தியாவுக்கு விற்பனை செய்வது குறித்து அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

வடமாகாணமானது பசுமை சக்தியை பெருமளவில் கொண்டுள்ளது. குளங்கள் மற்றும் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையங்களை அமைப்பதன் மூலம் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அந்த சக்தியை இந்தியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் விற்பனை செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவும் முடியும். பசுமை வலுசக்தி மற்றும் பச்சை ஹைட்ரஜன் என்பவற்றை கொண்டு பசுமை பொருளாதாரத்தையும் உருவாக்க முடியும்.

மன்னாரில் புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதி எதிர்காலத்தில் வழங்கப்படும். புத்தளம் – மன்னார் வீதியை திறப்பது குறித்தும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க முடியும்.

மன்னார் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரம் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவீன விவசாயத்தை உருவாக்குவதற்கான முறையான திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அபிவிருத்திக் குழு கூடி கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்குமாறு அறிவுறுத்துகிறேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள குளங்களைப் பாதுகாப்பதற்கும் மல்வத்து ஓயா திட்டத்தில் இருந்து மன்னாருக்கு வரும் நீரைப் பாதுகாப்பதற்கும் முறையான வேலைத்திட்டமொன்று விரைவாக தேவைப்படுகிறது.

அடுத்த ஐந்து தசாப்தங்களுக்குள், உலர் வலய பகுதிகள் மழை அதிகரிக்கும் என்றும், வறண்ட பகுதிகளுக்கு மழை கிடைக்காமல் போகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்வுகளை இப்போதிருந்தே தேட ஆரம்பிக்க வேண்டும்.

மடு மற்றும் சிவனொலிபாத மலை போன்ற புனித தளங்களின் நுழைவு வீதிகள் அவற்றை வழிப்பட வருவோருக்காகவே அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அங்கு வரும் யாத்ரீகர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முப்பது லட்சம் அபராதம் விதிப்பது நியாயமான செயலாக இருக்காது.

மன்னார் மறை மாவட்ட ஆயரின் பிரதிநிதி ஒருவர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் பொலிஸாரை தொடர்பு படுத்திக்கொண்டு மடு தேவாலயத்தை வழிபட வருவோருக்கான தேவாலய வீதியின் இரு புறங்களையும் தூய்மைப்படுத்தி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் மடு தேவாலய உற்சவத்திற்கு முன்னதாக அந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எனவே, மன்னார் மறைமாவட்டம், வன பாதுகாப்பு திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பிரதிநிதிகள் இணைந்து இந்த வீதியை சுத்தம் செய்து அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு முன்னதாக நிறைவுபெற வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சோதனைச் சாவடியை ஒரேயடியாக அகற்ற முடியாது. பாதுகாப்புப் படையினருடன் கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மன்னார் மாவட்டத்திற்கு தேவையான அபிவிருத்திகளை வழங்குவோம். இந்த ஆண்டு அதற்கான அடிப்படைச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.

மன்னாரைச் சுற்றி முன்னெடுக்கப்படவிருக்கும் விரிவான அபிவிருத்தி தொடர்பில் உங்களை தெரியப்படுத்த வேண்டியிருந்தது. அதனால் எவரிடத்திலும் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. இப்பிரதேசத்தில் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மாவட்டமாக மன்னார் மாவட்டத்தை கட்டியெழுப்புவோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன்,

ஜனாதிபதி இன்று மன்னாருக்கு வந்து இங்குள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கினார். மன்னார் மாவட்டத்தில் முழுமையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை அவர் வகுத்துள்ளார். அதற்காக மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிகிறேன்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டது. மேலும், கடந்த 4 ஆண்டுகளாக மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்த வித நிதியும் ஒதுக்கப்படவில்லை. மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தி இவ்வருடம் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பெருமளவு நிதியை ஒதுக்கியமைக்காகவும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் லீதிபன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.