முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதி பங்​கேற்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத் தலைவரும், மேல் மாகாணத்துக்கான பிரதான சங்கநாயக்கருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஜனன தினமான இன்று (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

அந்த நிகழ்வில் இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றிய, முருத்தெட்டுவே ஆனந்த தேரர், மக்கள் நலனுக்காக முன்னெடுக்கும் அனைத்து திட்டங்களிலும் ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினரின் ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

எனவே பஞ்ச சீல கொள்கையை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தையும் நீங்கள் உருவாக்கித்தர வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், பௌத்த சாசனத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஏராளமான விடயங்கள் நடந்து வருவதாகவும் இவற்றைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்றளவில் சில ஊடகங்களினாலும், காவியைப் போர்த்திக்கொண்டவர்களாலும் புத்த தர்மத்திற்கு பொருத்தமற்ற பலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புத்தத்துவத்தை பெறுவதற்கு சில கால அர்பணிப்புக்கள் தேவை. ஒரே இரவில் புத்தத்துவம் பெறுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் சாசனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சாசனத்திற்கு பாதிப்புக்களை தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் மகா சங்க அமைப்பு அல்லது மறுசீரமைப்பினை விரைந்து மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அபயாராமய, அரசியல்வாதிகள் அடிக்கடி வந்துச் செல்லும் இடமாகும். அரசியல் வாதிகள் இந்த விகாரைக்கு நன்கொடைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையாகவே அரசியல் வாதியாகவும் நாட்டின் தலைவராகவும் இந்த விகாரைக்கு நன்கொடை வழங்கியவர் நீங்கள் மட்டுமே. உண்மையான பௌத்தர் என்ற வகையில் உங்கள் கடமையை செய்துள்ளீர்கள் வேறு எந்தவொரு அரசியல்வாதியும் அபயராமவிற்கு உதவியதில்லை என்பதை தௌிவாக கூறுகிறேன்.

அரசாட்சி இல்லாவிட்டாலும் இந்நாட்டின் அரசராக நீங்களே உள்ளீர்கள். நீங்கள் நினைத்ததை செய்யக்கூடியவர். சொல்வதை செய்யும் தலைவர். நீண்ட நேரம் கலந்தாலோசிப்பதில்லை. நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள். ஆனாலும் இன்று மகா சங்கத்தினர் சிலரின் செயற்பாடுகள் பௌத்தர்ளின் மனதை புன்படுத்துவதாகவும் அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு மகா சங்கதினரை முன்நிறுத்திய சங்க மறுசீரமைப்பை விரைவில் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காக மகா சங்கத்தினர் முன்னிலையாக வேண்டும். அதன் போது உங்களுடைய ஒத்துழைப்பு கிடைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் பல்வேறு விடயங்களை கூறி மக்கள் எண்ணங்கள் திரிபுபடுத்தப்படுகின்றன. அது தொடர்பிலான விரிவான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற வேண்டும்.

சாசனத்தை பாதுகாத்தல், மக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட மக்கள் நலன் கருதிய அனைத்து செயற்பாடுகளிலும் மகா சங்கத்தினர் உங்களுக்கு ஆதரவளிப்பர். எனவே பஞ்ச சீல கொள்கையை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தையும் நீங்கள் உருவாக்கித்தர வேண்டும்.

அதேபோல் எமது தாதியர் சங்கத்திற்கு மறக்க முடியாத பணியை ஆற்றியுள்ள நீங்கள் தாதியருக்கான டிப்ளோமாவை வழங்கினீர்கள். பல்கலைக்கழகங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் நீண்ட காலம் நிலவிய நிலையில் நீங்கள், உங்கள் பேனா முனையில் அதற்கான தீர்வை வழங்கினீர்கள். அவற்றை நாங்கள் என்றும் மறக்கப்போவதில்லை. ” என்று தெரிவித்தார்.

மகா சங்கத்தினர், பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தொழிற்சாலைகள் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.