அரசியலமைப்புக்கு அமைவாக பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

  • நிறைவேற்று, சட்டவாக்கம், நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் அந்த பொறுப்பு உள்ளது.
  • ஒத்துழைக்கத் தவறுவது அரசியலமைப்பு மீறலாகும்.
  • இறக்கும் தருவாயில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளி இப்போது மெல்ல குணமடைந்து வருகிறார்.
  • அதற்கான வேலைத்திட்டத்திற்கு வழிகாட்டி ஆதரவளித்த மகா சங்கத்தினருக்கு நன்றி – கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட “குருதேவ சுவ அரண” பிக்குகளுக்கான நிலையத்தை திறந்து வைத்து ஜனாதிபதி உரை.
  • “குருதேவ சுவ அரண” பிக்குகளுக்கான நிலையத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்ல சுதேச வைத்திய அமைச்சு ஆதரவளிக்கும்.
  • ஜனாதிபதி நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்ததாலேயே இவ்வாறான சமய நிகழ்வுகளை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக நன்றி தெரிவிக்கிறோம் -வண. பிடிகல சோனுத்தர நாயக்க தேரர்.

அரசியலமைபிற்கு அமைவாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த கொள்கையை பாதுகாக்கும் பொறுப்பு நிறைவேற்று, சட்டவாக்க, நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் இருப்பதை எவரும் மறுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

எவரேனும் அதனை மாற்ற விரும்பினால் உடனடியாகச் சென்று அரசியலமைப்பை மாற்றுமாறு ஜனாதிபதி கூறினார்.

ஹோமாகம, கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட “குருதேவ சுவ அரண” பிக்குகளுக்கான நிலையத்தை (01) திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் நிறைவேற்று, சட்டவாக்க, நீதித்துறை உள்ளிட்ட 3 துறைகளுக்கும் பௌத்த கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கு ஆதரவளிக்காதது அரசியலமைப்பை மீறும் செயல் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளதெனவும் வலியுறுத்தினார்.

மக்கள் இறைமை, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குதல், ஒருமைப்பாட்டைப் பேணுதல் என்பனவே இந்நாட்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை கோட்பாடுகளாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த கோட்பாடுகளைப் பாதுகாத்து எப்பொழுதும் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் அவற்றுக்கு எதிராகப் பேசுவது அரசியலமைப்பை மீறுவதாகும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், இறக்கும் நிலையில் உள்ள நோயாளியை குணப்படுத்தும் பொறுப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது நோயாளி படிப்படியாக குணமடைந்து வருவதாகவும், அந்த வேலைத்திட்டத்திற்கு இலங்கை மகா சங்கத்தினரிடமிருந்து கிடைத்த வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

கொஹுவளை விகாரையின் விகாராதிபதியாகவும், இலங்கை ரமண்ய நிக்காயாவின் தலைமைப் பதிவாளராவும் இருந்த, மறைந்த வண. மாபாலகம சிறி சோமிஸ்ஸர நாயக்க தேரரின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை மற்றும் வெளிநாட்டு பிக்குகளுக்காக இந்த “குருதேவ சுவ அரண” நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாடிக் கட்டிடம் கொண்ட இந்த நிலையத்தில், 3 மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிலையத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது பிக்குகள் சிகிச்சை பெறலாம். அலுவலக அறைகள், வார்டு, அம்யூலன்ஸ், மருந்தகம், மருத்துவர்களுக்கான தங்குமிடங்கள், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் இங்கு உள்ளன.

பிக்குகளுக்கான தியான வசதிகளும் இங்கு காணப்படுவதோடு, இந்த நிலையத்தை அமைக்க, கொரியாவில் வசிக்கும் விஜிதவங்ச தேரர், கொரிய உல்சான் பௌத்த வைத்தியசாலையின் பணிப்பாளர் Neunghaeng பிக்குனி மற்றும் தாய்வான் கொசோன் Long Fong ஆசிரமத்தின் சிந்தாவோ (SinDaw) பிக்குனியும் இந்த நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.
குருதேவ சுவ அரண பிக்கு வைத்திய நிலையத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார்.

இதன்போது, வைத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்காக காணியை நன்கொடையாக வழங்கிய சந்தியா காந்திலதாவுக்கு ஜனாதிபதியால் நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“இலங்கையில் பிக்குகளுக்காகக் கட்டப்பட்ட முதலாவது வைத்தியசாலை இதுவாகும். நம் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பிக்குகளுக்கான வார்டுகள் மட்டுமே இருந்தன. இந்த மருத்துவமனை நோய்வாய்ப்பட்ட பிக்குகளுக்காகக் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி.

இதன் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சுதேச வைத்திய அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் இதன் அபிவிருத்திக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும்.

இப்போது அரசாங்கத்தையும் பௌத்தத்தையும் பிரிக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் சட்டத் தன்மை பற்றி சிந்திக்கும்போது, நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அவரவர் விருப்பப்படி ஒரு மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. மேலும் எந்த மதத்திலும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கான உரிமையும் உள்ளது.

மேலும், எந்தவொரு அரசாங்கமும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அந்தப் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கும் உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான நிறைவேற்றுத் துறை, சபாநாயகர் தலைமையிலான சட்டவாக்கத் துறை, பிரதம நீதியரசர் தலைமையிலான நீதித்துறை உள்ளிட்ட 3 துறைகளும் பௌத்த கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது அவசியமாகும்.

இதற்கு ஆதரவளிக்கத் தவறுவது அரசியலமைப்புக்கு எதிரானதாகும். எம்.பி.க்கள் அனைவரும் அரசியலமைப்பை பின்பற்றுவோம் என உறுதிமொழி எடுத்துள்ளோம். எனவே, இந்த நாட்டில் யுத்தம் இடம்பெற்றிருந்தாலும் இவ்வாறானதொரு கோரிக்கை இதுவரை முன்வைக்கப்படவில்லை. அது பற்றிப் பேசப்படவும் இல்லை.

சட்ட ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கலாம். ஆனால், கோட்பாடுகள் தொடர்பில் விவாதிக்க முடியாது. அரசாங்கம் என்ற வகையில் அதனைப் பின்பற்ற வேண்டும். இதை மாற்ற விரும்புவோர் அரசியலமைப்பையே மாற்ற வேண்டும்.

இறக்கும் நிலையில் உள்ள நோயாளியை குணப்படுத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது நோயாளி படிப்படியாக குணமடைந்து வருகிறார். அது பற்றி தொடர்ச்சியாக ஆலோசிக்கிறோம். உலகில் எந்த நோயாளியும் ஒரே தடவையில் குணமடைந்ததில்லை.

இந்த நோயாளியை குணப்படுத்த இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்தப் பணியை மேற்கொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வேலைத்திட்டத்திற்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கொஹுவளை ஸ்ரீ தாதுமாலு விகாரையின் விகாராதிபதி வண.பிடிகல சோனுத்தர நாயக்க தேரர்:
நாட்டில் நெருக்கடியான நிலைமை காணப்பட்டது. மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமை இருந்தது. ஆனால் ஜனாதிபதி இந்த நாட்டை பொறுப்பேற்றதன் காரணமாகவே இன்று இந்த நிலையை அடைய முடிந்துள்ளது. சந்தேகமில்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததால்தான் இன்று இந்த சமய விழாவை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை எப்போதும் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

அமைச்சர் பந்துல குணவர்தன,

இந்நாட்டில் புத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் விசேட தியாகங்களைச் செய்த மகா சங்கத்தினருக்கு பண்டைய காலத்தில் விசேட வைத்தியசாலைகள் கட்டப்பட்டமை வரலாற்றில் பதிவாகியுள்ளது. அண்மைக்கால வரலாற்றில், சுதந்திரத்திற்குப் பிறகு, பல்வேறு அரசாங்கங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மருத்துவமனைகளில் துறவிகளுக்கு தனி வார்டுகளை தயார் செய்துள்ளன.

மூன்று ஆயுர்வேத வைத்தியசாலைகள் மற்றும் உள்ளூர் மேற்கத்திய வைத்தியசாலைகளில் பிக்குகளுக்கான வார்டுகள் இருந்தாலும், அவர்களுக்கு தனியான வைத்தியசாலை கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகா சங்கத்தினர், சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, ஸ்ரீ தலதா மாளிகை தியவடன நிலமே நிலங்க தெல பண்டார மற்றும் உள்நாடு வெளிநாட்டு பக்தர்கள், தென்கொரிய பௌத்த பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.