நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப விவசாயம் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்!
- கடந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் விவசாயம் பெரும் பங்கு வகித்தது.
- முறையான திட்டங்கள் ஊடாக பிரதான விவசாய பயிர் ஏற்றுமதியாளராக இலங்கையை முன்னேற்றுவோம்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய மாநாட்டின் 37 ஆவது அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைமைத்துவம் 2026 வரை இலங்கைக்கு!
விவசாயத் துறையில் விரைவான மாற்றத்துடன் விவசாயப் பயிர்களின் பிரதான ஏற்றுமதியாளராக இலங்கையை உயர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் விவசாயம் பாரிய பங்களிப்பை ஆற்றியதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை விரைவாக மீளக் கட்டியெழுப்பக்கூடிய இரண்டு பிரதான துறைகளாக விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் (20) ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய மாநாட்டின் 37 ஆவது அமர்வின் ஆரம்ப அமர்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (UN FAO) பணிப்பாளர் நாயகம் (Dr. Qu Dongyu) கூ டோங்யுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் 46 நாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 34 நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் ஆரம்பமான மாநாடு (21) நிறைவடைகிறது.
2022 இல் பங்களாதேஷ் இந்த மாநாட்டை நடத்தியது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
1955ஆம் ஆண்டில் 2 ஆவது மாநாட்டை இலங்கை நடத்தியதுடன், 69 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை இலங்கை மீண்டும் இந்த மாநாட்டை நடத்துவது விசேட அம்சமாகும்.
“விவசாய உணவுக் கட்டமைப்பில் மாற்றம்” என்ற தொனிப் பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டில், சத்தான உணவு உற்பத்தி, உணவு நுகர்வுப் பாதுகாப்பு, உணவு உற்பத்தியை அதிகரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணுதல், பசுமைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், பிராந்திய நாடுகளில் காலநிலை மாற்ற அபாயத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.
ஆரம்ப அமர்வின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் எடுத்துக் கொண்ட குழு புகைப்படத்திலும் இணைந்து கொண்டார். மாநாட்டில் கலந்துகொண்ட அங்கத்துவ நாடுகளின் விவசாய அமைச்சர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
”உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், நிலையான உற்பத்திக்கான விவசாய உணவு முறைகளை மாற்றுதல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்குப் பொருத்தமான நிலையான மற்றும் நெகிழ்ச்சியான சிறு விவசாயிகளின் விவசாயக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு குறிப்பிடத்தக்க பங்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில், நாட்டின் பொருளாதார மாற்றத்தில் விவசாயம் பெரும் பங்காற்றி வருகிறது.
இலங்கைப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சமயத்தில் தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். 2022 இல் பயிர்ச் செய்கைக்குப் போதுமான உரம் இருக்கவில்லை. நாட்டில் உணவுப் பற்றாக்குறையும், அந்நியச் செலாவணி தட்டுப்பாடும் ஏற்பட்டிருந்தது.
அத்தகைய காலகட்டத்திற்குப் பிறகு, இன்று நாம் ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். மிக விரைவில் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் குழு மற்றும் பெரிஸ் கிளப்புடன் எங்களது இறுதி கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்பார்க்கிறோம். பின்னர் நாம் வங்குரோத்தடைந்த நாடாக இருக்க மாட்டோம். ஆனால் அது போதுமானதல்ல.
துரிதமான பலன்களைப் பெறக்கூடிய பிரதான துறைகளாக விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறை காணப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, USAID எங்களுக்கு உரம் பெற உதவியது. இது எங்கள் விவசாயத்தை வலுப்படுத்த உதவியது.
இரண்டாவதாக, அண்மைக் காலமாக நவீன விவசாய முறைகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அதற்கு 10 – 15 வருடங்கள் ஆகும். இருப்பினும் 10 வருடங்களில் அந்த இலக்கை அடைவதே எமது நோக்கமாகும். அதற்காக புதிய விவசாய முறைகளை நாம் நாட்டிற்குள் கொண்டு வருவோம்.
ஆனால் எமக்கு இன்னொரு பிரச்சனை உள்ளது. இளைஞர்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு வருகிறார்கள். அவர்கள் பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. விவசாயத்தை நவீன மயப்படுத்துவதன் மூலம் அவர்களை மீண்டும் கிராமங்களிலேயே தக்கவைத்துக் கொள்ள முடியும். அதற்கமையவே 03 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த விவசாய அமைச்சின் விடயப்பரப்புக்கள் ஒரு அமைச்சரின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும், அது தொடர்பான நிறுவனங்களின் கட்டமைப்பையும் மறுசீரமைப்பு செய்ய ஆரம்பித்துள்ளோம். அதன் முதல் அங்கமாக விவசாயிகளுக்கு சிறந்த சேவையை வழங்க எதிர்பார்க்கிறோம். மேலும், நாடு முழுவதும் உள்ள விவசாய சேவை மையங்களை விவசாய நவீனமயமாக்கல் மையங்களாக மாற்றும் பணியை முன்னெடுத்து வருகிறோம். அதற்காக பொது மக்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம்.
மேலும், விவசாயப் பொருட்கள் கொள்வனவு, புதிய விநியோக வலையமைப்பு, குளிரூட்டல் களஞ்சியம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அந்த வசதிகளை ஏற்படுத்துவோம். இது விவசாயத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், இந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய தனியார்மயமாக்கலை நாம் ஆரம்பித்துள்ளோம். இதன்கீழ், மகாவலி திட்டத்தின் பின்னர் எஞ்சிய காணிகளையும் விவசாயிகளின் தேவைகளுக்கமையப் பகிர்ந்தளிக்க உள்ளோம். புதிய விவசாயத்தில் நுழைய விரும்பும் அனைவருக்கும் நாங்கள் நிலங்களை வழங்குவோம்.
1935 முதல் விவசாயிகளுக்கு நிலம் வழங்கியுள்ளோம். இந்த காணிகள் அனைத்தும் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழான அனுமதி பத்திரத்துடன் மட்டுமே வழங்கப்பட்டன. எனவே, இந்த நிலங்களில் விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ உரிமை இருக்கவில்லை. இப்போது அவர்களுக்கு அந்த நிலங்களுக்கான முழு உரிமத்தை வழங்குகிறோம். அதன்படி, இந்த வருடத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச காணி உரிமை கிடைக்கும்.
அதேபோல் பால் உற்பத்தி உள்ளிட்ட கால்நடைத் தொழிலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். கால்நடை வளர்ப்புத் துறையில் ஒரு விலங்கிடமிருந்து 2 லிட்டர் பால் மட்டுமே பெறப்படுகிறது. அதை மாற்றுவதற்கானத் திட்டங்களை இப்போது ஆரம்பித்திருக்கிறோம். அரசாங்கத்திற்குச் சொந்தமான MILCO நிறுவனத்துடன் ‘அமுல்’ நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவிருக்கிறது.
ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் தரக்கூடிய 2 மில்லியன் கால்நடைகளை வளர்ப்பது குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதன்படி, அதன் மூலம் மட்டும் 20 மில்லியன் லிட்டர் பால் பெறப்படும். இத் திட்டத்தினால் 2 இலட்சம் விவசாயிகள் பயனடைவர். அதற்கு இணையாக வேறு நிறுவனங்கள் பலவும் முன்வந்துள்ளன.
நெஸ்லே, போன்டெரா உள்ளிட்ட நிறுவனங்களும், அம்பேவெல பார்மிங் நிறுவனமும் அதற்காக முன்வந்துள்ளன. ஒரு கால்நடையிடமிருந்து 28 லிட்டர் வரை பாலைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
மேலும், நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும் உவர்நீர் மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம். அதன்படி உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் இலங்கை பல திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.
2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையைப் பார்க்கு போது, அந்த காலம் வரையில் நாம் உயிருடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஈரானில் இருந்து இந்தோனேசியா வரை மக்கள் தொகை 500 முதல் 600 மில்லியன் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவருக்கும் அதிக வருமானத்துடன் உயர்ந்த வாழ்க்கைத் தரம் இருக்க வேண்டும். மறுமுனையில் ஆபிரிக்கா, கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உணவுத் தேவை அதிகமாக இருக்கும்.
காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக இலங்கை மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. அதற்காக இரண்டு முன்மொழிவுகளை முன்வைத்துள்ளோம். இந்து சமுத்திரம் உள்ளிட்ட வெப்ப வலய பகுதியை கார்பன் அற்ற வலயமாக மாற்றும் திட்டமும் அதனில் உள்ளடங்கியுள்ளது.
சர்வதேச நாடுகள், தத்தமது நாடுகளில் புல்வெளிகள் மற்றும் காடுகளில் தனியார் துறை முதலீடுகள் செய்யப்பட வேண்டும். அதற்குள் நாமும் இணைய வேண்டும். இங்கிலாந்திலிருந்து எவரும் மாலிக்கு இராச்சியத்துக்கு நிதி வழங்கப் போவதில்லை. அதேபோல் பின்லாந்திலிருந்து எவரும் இலங்கைக்கு நிதி வழங்கப்போவதில்லை. எனவே அதற்காக சந்தர்ப்பத்தை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். தற்போது இலங்கையில் காலநிலை மாற்றம் குறித்த கற்கைகளுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான முன்னெடுப்புக்களை ஆரம்பித்திருக்கிறோம். அதற்குத் தேவையான காணி ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன் நிர்மாணப் பணிகள் குறித்து தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், மேலும் பல தரப்பினரும் இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்துடன், இலங்கையில் உள்ள அனைத்து விவசாய ஆராய்ச்சி நிலையங்களையும் விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர எதிர்பார்க்கிறோம். இந்த அனைத்து செயற்பாடுகளும் இந்நாட்டின் விவசாயத் துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டவையாகும். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் பங்களிப்பு அதற்கு கிட்டுமென எதிர்பார்க்கிறோம்.” என்று தெரிவித்தார்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர
”1954 ஆம் ஆண்டு இந்தப் பயணத்தை நாங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் ஆரம்பித்தோம். இலங்கை 69 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்குவதையிட்டு நான் பெருமையடைகிறேன்.
உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயத்தின் மேம்பாட்டுக்கான சவால்களை எதிர்கொள்வதற்கான எமது கூட்டு அர்ப்பணிப்பை இந்த மண்டபம் பிரதிபலிக்கிறது. 2022 இல் இலங்கையின் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் ஜனாதிபதியும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் வழங்கிய ஆதரவு பாராட்டுக்குரியதாகும்.
இந்த மாநாட்டில் நமது கலந்துரையாடல்கள், ஒத்துழைப்புகள், நிலையான விவசாயம், கிராமப்புற மேம்பாட்டிற்கான நமது கூட்டு அர்ப்பணிப்பும், ஆசிய-பசுபிக் வலயத்தின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.” என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் (UN FAO) கூ டோங்யு
(Dr.Qu Dongyu),
”இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புக்கும் இடையில் மிக நீண்ட உறவு உள்ளது. 1950 ஆம் ஆண்டில் இலங்கை அதில் அங்கத்துவம் பெற்றது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் முதலாவது முகவர் அலுவலகம் 1979 ஆம் ஆண்டில் இலங்கையில் திறக்கப்பட்டது. இலங்கை விவசாயம் மற்றும் விவசாய வனப் பரப்புகள் மற்றும் மீன்வளர்ப்பு துறைகளில் இலங்கை பெருமளவு வலுவைக் கொண்டுள்ளது.
இத்துறைசார் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதை கௌரவமாக கருதுகின்றேன். இதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வலுவான வழிகாட்டல் மற்றும் இலங்கையின் கிராமப் புறங்களில் விவசாயத்தை நவீனமயமாக்கும் வேலைத்திட்டம் என்பன மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய யோசனைகளைக் கொண்டுள்ளன. அந்த திட்டங்களுக்கு நாமும் ஆதரவளிப்போம்.” கூ டோங்யு தெரிவித்தார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களாக டீ.பீ.ஹேரத், மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, லொஹான் ரத்வத்தே, காதர் மஸ்தான் உள்ளிட்டவர்களும் அமைச்சுக்களின் செயலாளர்களும், அரசாங்க அதிகாரிகளும், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகளும், உள்நாட்டு வௌிநாட்டு இராஜதந்திர பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.