எதிர்கால நோக்குடன், புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டுள்ளது
- கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் இலங்கை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
- பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு – சுவிட்சர்லாந்து வர்த்தகர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.
எதிர்கால நோக்குடன் புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கை வெற்றிகரமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், பிரதான கடன் வழங்குநர்கள் கொள்கையளவில் அதற்கு இணங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2023 டிசம்பரில் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கை தொடர்பான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வுக்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலம், 2024 இல் இலங்கை ஸ்திரத்தன்மையிலிருந்து மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு நகர்வதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனம் என்பன இணைந்து நேற்று (15) சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகத் துறையினருடனான சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 54 ஆவது வருடாந்த கூட்டத்துடன் இணைந்ததாக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளில் எட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க செயற்திறனைப் பெற்றுள்ளதாக தெரிவித்ததையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவு கூர்ந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், கடன் வழங்குநர்களை கையாள்வதில் அவ்வாறான ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வெளிநாட்டு நேரடி முதலீடு உள்ளிட்ட முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் சேவைகள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இலங்கை எதிர்கொண்ட அண்மைய பொருளாதார நெருக்கடியானது வர்த்தகங்கள், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வர்த்தகத்திற்கான தடைகள் மட்டுமன்றி மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கான இடையூறுகளை அகற்றுவதற்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புளையும் இங்கு சுட்டிக்காட்டினார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது, வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களில் பணப்புழக்கத்தை மீளமைத்த்து மற்றும் 1977இற்குப் பின்னர் முதல் முறையாக கொடுப்பனவுகளின் முதன்மை இருப்பு மேலதிக நிலைக்கு பதிவு செய்யப்பட்டது உள்ளிட்ட பல விடயங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து நிதி ஸ்திரத்தன்மை ஏற்படல், பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் மறைப் பெறுமான பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் உள்ளிட்ட சாதகமான குறிகாட்டிகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகத்தை எட்டுவது குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் அடையாளம் என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகளுடனான வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.
பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (RCEP) இணைவதற்கான இலங்கையின் முன்முயற்சி மற்றும் ஐரோப்பிய சந்தையை அணுகுவதற்கு GSP+ வழங்கும் நன்மைகள் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, விவசாய நவீனமயமாக்கல், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்றவற்றில் அரச – தனியார் பங்காளித்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டுக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சந்தை பிரவேசத்தை மேம்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் குறித்தும் ஜனாதிபதி குறிப்பிட்டார். முதலீடு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார்.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார மற்றும் அரச துறைகளை உள்ளடக்கிய விரிவான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசாங்கம் பல விரிவான மாற்றங்களை ஆரம்பித்துள்ளதாகவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த செயல்முறை நிறைவடையும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆரம்ப நடவடிக்கைகளுக்குப் பின்னர், நிர்வாகச் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான ஒரு விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்போது ஊழல் எதிர்ப்புச் சட்டம் போன்ற முக்கியமான சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சாகல ரத்நாயக்க மேலும் வலியுறுத்தினார்.
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட வேண்டிய ஆணையாளர்களை அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும் செயல்முறையையும் அவர் விளக்கினார்.
இது தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப தரத்தை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் என்றும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்.
ஆட்சிப் பொறிமுறைக்கு கணிசமான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும், அவற்றில் சுமார் 20 சட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.
எதிர்காலத்தைப் பார்த்து, தொழிலாளர் சட்டங்கள் உட்பட 40 முதல் 50 புதிய சட்டங்கள் வரைவு செய்யப்படும் என்றும், தற்போதுள்ள 40 முதல் 50 சட்டங்கள் நவீன மற்றும் முன்னோக்கு கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் தலைவர் திலசான் வீரசேகர, ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிரகாஷ் ஷாப்டர், இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் பர்னார்ட், எகன்ஸ்பென்ஸ் நிறுவனத்தின் பிரதி இணைத் தலைவர்/ முகாமைத்துவப் பணிப்பாளர் ஸ்டஷானி ஜயவர்தன, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிருஷ்ணன் பாலேந்திரா, கோல்ஃபேஸ் குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கார்டினர், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே, எக்ன்ஸ்பென்ஸ் நிறுவனத்தின் பிரதித் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க, டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, கொமர்ஷல் வங்கி பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி/ முகாமைத்துவப் பணிப்பாளர் சனத் மனதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, நிதி அமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல், இலங்கை முதலீட்டு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஆணைக்குழு ரேவன் விக்ரமசூரிய, முதலீட்டுச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் (முதலீட்டு ஊக்குவிப்பு) பிரசஞ்சித் விஜயதிலக ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.