கைத்தொழில் துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

  • சிறு மற்றும் நடுத்தர தொழில்களை வலுப்படுத்துவதற்கு “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற பெயரில் புதிய நிறுவனம்.
  • நீதிமன்றத்திற்கு செல்வதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.தேசிய கொள்கையின் ஊடாகவே முன்னோக்கிச் செல்ல வேண்டும்- சர்வதேச தொழில் கண்காட்சி 2024″ தொழில் கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும் என்றும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்த “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும் சிலர் நீதிமன்றத்தை நாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனவும் இவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், தேசிய கொள்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்டர்நெசல் இன்டஸ்ரியல் எக்ஸ்போ- 2024 (சர்வதேச கைத்தொழில் கண்காட்சி) இன்று (19) ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவின் ஆலோசனையின் பேரில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சி, இன்று முதல் ஜூன் 23 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச தொழில் முனைவோர் மற்றும் உள்ளூர் பாரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினர் இதில் பங்கேற்கின்றனர். 1307 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கிய இக்கண்காட்சியில் பசுமை தொழில்துறை வளாகம் தனி வலயமாக சேர்க்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்த கண்காட்சிக்கு இணைந்ததாக பசுமை தொழில்மயமாக்கல் குறித்த நிபுணத்துவ மாநாடும் நடைபெறும்.

“சர்வதேச கைத்தொழில் எக்ஸ்போ 2024” கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி, கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின் போது Ceylon Plaza கணினி மென்பொருள், சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு,

”இந்நாட்டின் கைத்தொழில் துறையின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன விசேட கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றார். அதன் ஒரு கட்டமாக இந்த தொழில் கண்காட்சியைக் குறிப்பிடலாம். இது நாட்டிலே நடத்தப்படும் மிகப்பெரிய கண்காட்சியாகும்.

கடந்த காலத்தில் நமது நாடு வங்குரோத்தடைந்த நாடாக மாறியிருந்தது. ஆனால் அடுத்த சில வாரங்களில் நாம் வங்குரோத்தடைந்த நாடு என்ற அவப்பெயரில் இருந்து முற்றிலும் விடுபடுவோம். இது தொடர்பான ஒப்பந்தமும் அடுத்த சில வாரங்களில் எட்டப்பட உள்ளது. இதன்மூலம், தனியார் கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதாகிறது. எனவே இந்த பணியை இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்வோம்.

ஆனால் இதில் மட்டும் திருப்தி அடைய முடியாது. இந்தக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் பெற்ற கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு 2042 வரை கால அவகாசம் கிடைக்கும் என நம்புகிறேன்.

இறக்குமதிப் பொருளாதாரம் காணப்படுவதால் இறக்குமதிக்கு பணம் கொடுக்க வேண்டும். அதற்கான அந்நியச் செலாவணி நம்மிடம் இல்லை. அதனால் அவர்கள் மீண்டும் கடன் வாங்க வேண்டும். இந்த முறை அமுல்படுத்தப்பட்டால் இன்னும் 15-20 ஆண்டுகளில் மீண்டும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.

ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு மாறுவதில், உற்பத்திப் பொருளாதாரம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. உருவாக்கப்படும் பொருளாதாரம் போட்டித்தன்மையுடன் டிஜிட்டல் பொருளாதாரமாகவும் இருக்க வேண்டும். மேலும், பூஜ்ஜிய காபன் உமிழ்வு என்ற இலக்கை நோக்கி நகர்வதில் பசுமைப் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.

முதல் பணியாக, அந்தத் திட்டங்களின்படி தற்போதுள்ள தொழில்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒரே இரவில் யாராலும் போட்டித்தன்மையை உருவாக்க முடியாது. நமது அண்டை நாடான இந்தியா தற்போது பெரும் கைத்தொழில்துறையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இதே வளர்ச்சியைக் கண்டுள்ளன. நாமும் அதனுடன் இணைந்திருக்க வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் உலகின் மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறோம். எனவே, முதலில் செய்ய வேண்டியது தொழில்களை போட்டி நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்குத் தேவையான நிதியை வழங்க அபிவிருத்தி வங்கி ஒன்றை நிறுவுவது குறித்து ஆலோசிக்கிறோம். 1960 இல் எம்மிடம் DFCC வங்கி இருந்தது. 1980 இல், NDB வங்கி நிறுவப்பட்டது. தனியார்மயமாக்கலுக்குப் பிறகு, இந்த இரண்டு வங்கிகளும் நம் நாட்டில் பெரிய வணிக வங்கிகளாக மாறிவிட்டன. குறிப்பாக இந்த வங்கிகள் அப்போது இல்லாவிட்டால் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் 200 ஆடைத் தொழிற்சாலைகள் வேலைத் திட்டம் வெற்றியடைந்திருக்காது. எனவே, புதிய வங்கியொன்றை தொடங்க எதிர்பார்க்கிறோம்.

அதற்குள் வட்டி விகிதத்தை குறைந்த மட்டத்தில் பேண வேண்டும். மேலும், இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார ஆணைக்குவொன்றும் ஸ்தாபிக்கப்படும். மற்ற நடுத்தர மற்றும் சிறிய அளவிலான வர்த்தகர்களுக்காக “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய அமைப்பை ஸ்தாபிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவன அமைப்பு இந்த நாட்டில் உள்ள அனைத்து தொழிலதிபர்களுக்காக உருவாக்கப்பட்டது. அடுத்த 5 – 10 ஆண்டுகளில், இதே வழியில் நாம் முன்னேற வேண்டும்.

மேலும், பங்களாதேஷ், மியான்மர் போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு உற்பத்தியை மேற்கொள்ள விரும்பினால், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பைப் பெறலாம். இதுவே எமது கொள்கை. இந்த செயற்பாடுகளின் போது, ​​இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளேன். அதேபோல், நாளைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் கலந்தாலோசிக்கவுள்ளோம்.

நாட்டில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கும், பசுமை ஹைட்ரஜனைப் பெறுவதற்கும் இந்தியா ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வடக்கு கடல் பரப்பைக் கொண்டு அந்த நன்மையை அடையவோம். அதன் முதல் படியாக அதானி இலங்கை வந்தார். இதுபோன்று புதிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.

நாட்டில் சிலர் ஒவ்வொரு விடயத்துக்காவும் நீதிமன்றம் செல்கின்றனர். அதனால் சட்டத்தரணிகள் மட்டுமே பயன் பெறுவார்கள். நீதிமன்றத்திற்கு செல்வதால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. எமது தேசிய கொள்கையின் படி நாம் முன்னேற வேண்டும். இத்தொழில்களின் முன்னேற்றத்திற்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றை கலந்துரையாடி தயாரிக்குமாறு தொழில் அமைச்சருக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன். அந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் பொருளாதார மாற்ற சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்திருக்கிறோம்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன,

”2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு பொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கடியானதாக அமைந்தது. ஆனால் நாட்டில் உள்ள அனைத்து தொழில்துறையினரும் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தொழில்துறையை மேம்படுத்த பாடுபடுவோர் தேசத்தின் பாராட்டுக்கு உரித்தானவர்கள்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைத்தொழில் அமைச்சராக இருந்த போது இந்நாட்டின் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றினார். இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவி சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளார்.

தற்போது, ​​இலங்கையின் ஏற்றுமதியில் பெரும்பாலானவை ஆடை ஏற்றுமதி மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் தொடர்பான பொருட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஒரு நாடாக, இந்த கண்காட்சியில் உணவு தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு, பொதியிடல், வாகன பாகங்களை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட பல துறைசார் திறன்கள் உள்ளன. ஒரு நாடு என்ற வகையில் எமது வலுவை பயன்படுத்த வேண்டும். அது குறித்து சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.” டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித குணரத்ன மஹிபால, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும, தொழில் மேம்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் எச். எம். எஸ். சமரகோன், மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி ஸ்ரீலங்கா ஏயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள், கூட்டுத்தாபன தலைவர்கள் மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.