பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்.
- நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி.
சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
தற்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமையே நாட்டுக்கு அவசியப்படுகின்றதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவதா இல்லையா என்பது தற்போதைய பிரச்சினை அல்லவெனவும், நாட்டுப் பொருளாதாரத்தின் எதிர்கால போக்கை தீர்மானிப்பதற்கான வாய்ப்பை மக்கள் இழந்துவிடக்கூடாதெனவும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (26) நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழகத்தின் 2023/24 வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த வருடாந்த மாநாடு ஏப்ரல் 26/27 திகதிகளில் கொழும்பில் நடைப்பெறுவதோடு, மாநாட்டில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையை நிகழ்த்தினார்.
1929 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட, இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழகம் 17,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கும் இதன் பங்களிப்பு கிடைத்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1994 முதல் கொழும்பு சர்வதேச ரோட்டரி கழகத்தின் மாவட்ட 3220 மேற்கு பிரிவின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
“இலங்கை பயணிக்க வேண்டிய பாதையை தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதன்போது எந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்பதை இந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். நாம் இங்கிருந்து நகர்வோமா? நாம் இங்கேயே நின்றுவிடுவோமா? அல்லது பின்னோக்கி செல்ல வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
இன்று நான் சந்தித்த ஒரு இளைஞர் நாட்டிற்கான உங்கள் திட்டங்கள் என்னவென கேட்டார். இந்த நாட்டின் படித்த மக்களுக்காக என்ன திட்டங்களை எடுத்துள்ளீர்கள்? நாட்டின் பௌதீக உட்கட்டமைப்பை மேம்படுத்த நீங்கள் என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? அந்த அப்படி எந்த திட்டமும் இல்லை என்றேன். நான் சந்தைப் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும் என்று நான் அவரிடம் கூறினேன்.
அதன்போது சந்தை சக்திகள் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முடிவு செய்யும். நமது கொள்கை கட்டமைப்பு என்ன என்பதை நாம் தீர்மானிக்கலாம். அதன்படி, அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து, செயல்படுத்தி, தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.
ஆனால், எங்களுக்கு வளர்ச்சியைத் தரும் ஒரு நிலையான திட்டம் குறித்து நீங்கள் சிந்தித்தால், அதைச் செய்ய முடியாது என்று நான் அவரிடம் சொன்னேன். சந்தை செயற்பாடுகளில் எவ்வாறு தாக்கம் செலுத்துவது வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தை சக்திகளை எவ்வாறு கையாள்வது அல்லது சந்தை சக்திகளை எவ்வாறு இயக்குவது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஒரு அரசாங்கம் நியமிக்கப்பட்ட பிறகு ஒரு ஐந்தாண்டு திட்டம் முன்வைக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின்படி அரசாங்கமே அனைத்தையும் வழங்குகிறது. எமக்கு இவ்வளவு காலமும் திட்டங்கள் மாத்திரமே இருந்தன. அதனால் தான் இன்னும் வறுமையில் வாடுகிறோம்.
யுத்தத்திற்குப் பிறகு, வியட்நாம் நம்மை விட மோசமான நிலையில் இருந்தது. 1991இல், வியட்நாமின் தொழில்துறை அமைச்சர் வந்து, வெளிநாட்டு முதலீட்டை எப்படி ஊக்குவிக்கிறோம் என்று கேட்டார். அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பது எப்படி என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள இன்று நான் வியட்நாம் செல்ல வேண்டும். அவர்கள் மாறினர். நாங்கள் ஒரே இடத்தில் இருந்தோம்.
உங்களுக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூர் பற்றி என்ன கூற முடியும்? இந்த ஒவ்வொரு நாடுகளையும் பற்றி நாங்கள் பேசுகிறோம். அந்த நாடுகள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க விரும்புகிறோம். ஆனால் அந்த நாடுகளின் நிலையை அடைய, தேவையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இப்போது நாம் அத்தகைய நிலையை அடைந்துள்ளோம்.
இனிமேலும் தேவையான முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. எந்த மாதிரியான பொருளாதாரம் வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, அதை ஒரு மாதிரி மூலம் மாத்திரமே செய்ய முடியும். இது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம்.
இந்தியா, சீனா, அமெரிக்கா அல்லது ரஷ்யாவில் எங்களுக்கு பெரிய சந்தை இல்லை. பல நாடுகளில் உள்ள கனிய வளங்கள் நம்மிடம் இல்லை. நாம் அதிர்ஷ்டவசமாக இந்து சமுத்திரத்தில மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஒரு சிறிய தீவு.
இப்பகுதியில் பொருளாதார மையமாக மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிப்பட்ட உலகில் நாம் எப்படி முன்னேறுவது? நாம் இனி கற்பனை உலகில் வாழ்கிறோமா? அல்லது தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோமா என்பது நீங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
ஏனெனில் நாம் மேற்கொண்டுள்ள பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் இந்த வருடத்துடன் முடிவடையும். நாங்கள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் பெரிஸ் சமவாயத்துடன் கலந்துரையாடி வருகிறோம். கடன் வழங்குநர்களுடன் அடைய வேண்டிய பெரும்பாலான விடயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் ஒரு விடயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். அதுவும் விரைவில் தீர்க்கப்படும்.
ஆனால் நாம் இங்கிருந்து எங்கு செல்வது? பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம். நாம் உறுதிப்படுத்திய பொருளாதாரம் இறக்குமதி சார்ந்த பொருளாதாரம். இந்த இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் நாம் முன்னேறிச் செல்கிறோமா? அப்போது நான் கடந்த காலத்தில் செய்த காரியங்கள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்.
ஏனென்றால் இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் இதுபோன்ற நெருக்கடியை மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே இந்த முடிவை நீங்கள் அனைவரும் எடுக்க வேண்டும். அதை யாரும் தவறவிட முடியாது.
இதுதான் இன்று நாடு எடுக்க வேண்டிய முடிவு. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தொடர்வதா அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதா என்ற பிரச்சினை இல்லை. இரண்டாவதாக கவனிக்கப்பட வேண்டிய கேள்விகள் அவை. நான் குறிப்பிட்டது போல் மக்களுக்கு பல பிரச்சினைகள் எழுகின்றன.
நமது கல்வி முறை என்ன? நாம் அதை மாற்ற வேண்டுமா இல்லையா? அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நமது எதிர்காலம் என்ன? அதற்கான முடிவுகளை எடுக்க நாம் தயாரா?
ஏற்றுமதி சார்ந்த, அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை நாம் விரும்பினால், அதை எவ்வாறு அடைவது? போட்டி மிகுந்த பொருளாதாரம் வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். நீங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க விரும்பினால், நீங்கள் போட்டியை எதிர்கொள்ள வேண்டும். போட்டியை எதிர்கொள்ளாமல் போட்டித்தன்மையுடன் இருக்க முடியாது. இலங்கையில் வர்த்தகத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாம் அதை உருவாக்க முடியும். எங்களுக்கு கடினமான காலங்கள் குறுகிய காலம். ஆனால் நாம் அதை முறியடிக்க முடியும் என்று நான் நம்பிக்கையுடன் பரிந்துரைக்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சர்வதேச ரோட்டரி கழக பிரதிநிதிகள், மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.