ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை – இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பண கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்தோடு சகலருக்கும் தமது கருத்துக்களை வெளியிட வாய்ப்புள்ள ஜனநாயக பாராளுமன்ற முறையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் (26) நடைபெற்ற இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் 09 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 100 வலயங்களில் நிறுவப்பட்ட அனைத்து வலய மாணவர் பாராளுமன்றங்களிலிருந்தும் அதிக வாக்குகளைப் பெற்ற தலா இரு உறுப்பினர்கள் தேசிய மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கிளையின் ஒத்துழைப்புடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலில் தேசிய மாணவர் பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர், பிரதி சபாநாயகர் மற்றும் 10 அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய ஜனாதிபதி அலுவலகம் உட்பட கொழும்பில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து வெளியிடப்பட்ட ‘பிபிதுனு சிசு மெதி சபய’ நூலை ஜனாதிபதி செயலக உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக்க தங்கொல்ல ஜனாதிபதிக்கு கையளித்தார்.

மேலும் இச்சந்தர்ப்பத்தை முன்னிட்டு கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசில் ஒன்றும் வழங்கப்பட்டது.

தேசிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டின் அரசியல் தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்க ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியதுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தருவதற்கும் ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்.

தேசிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சான்றிதழ்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வழங்கி வைத்தார்.
தேசிய மாணவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்கேற்கும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை என்பதால் எமது நாடு விசேடமான ஒரு நாடாகும். 1833ஆம் ஆண்டில் எமது நாட்டின் சட்டமன்றம் நிறுவப்பட்டது. அன்று வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆளுநரால் இலங்கையர்கள் சிலர் இதற்கு நியமிக்கப்பட்டனர்.

1912 இல் இலங்கையர் ஒருவரை உறுப்பினராகத் தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. சொத்து மற்றும் கல்வி அடிப்படையில் சுமார் ஐயாயிரம் பேருக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் 1931 இல் இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்தது. அதன்படி, 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்ற ஆசியாவின் முதல் நாடாக நாம் திகழ்ந்தோம். அன்று முதல் எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் கட்சியினால் தடை விதிக்கப்படாத ஒரே ஆசிய நாடாகஇலங்கை காணப்படுகிறது. 1931 க்குப் பிறகு, ஏனைய அனைத்து நாடுகளிலும் எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை இழந்துள்ளன. எம்மை எவ்வளவுதான் விமர்சித்தாலும், குற்றம் சாட்டினாலும், பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை பாதுகாத்து வருகிறோம்.

பின்னர் டொனமோர் முறைமையின் கீழ் எங்களுக்கு ஏழு அமைச்சுப் பதவிகள் கிடைத்தன. மூன்று அமைச்சுப் பொறுப்புகளை வெள்ளையர்கள் வகித்தனர். பின்னர் அதற்கும் இலங்கையர்கள் நியமிக்கப்பட்டனர். இச்சபையினால் ஏழு குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றிலிருந்து ஏழு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அமைச்சர்களாக பணியாற்றினர். ஏனென்றால் அப்போது அரசியல் கட்சிகள் இருக்கவில்லை. உலக மகா யுத்தத்தின் போது யுத்த நடவடிக்கைகள் தவிர அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டன. ஏனெனில் அப்போது இலங்கை பிரித்தானியா, அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டது.

அதன் பிறகு சோல்பரி அரசியலமைப்பின் படி சுதந்திரம் கிடைத்தது. நீங்கள் இருக்கும் கட்டிடம் அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்திற்காக கட்டப்பட்டது. பின்னர் இந்த சபையில் டொனமோர் ஆணைக்குழு நிறுவப்பட்டது. பின்னர் இது மக்கள் பிரதிநிதிகள் சபை மீண்டும் செயல்பட்டது. செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபை ஆகியவையும் இந்த இடத்தில் செயற்பட்டன.

1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது, ​​இது தேசிய அரசாங்க சபையாகியது. 1977ல் தேசிய அரசாங்க சபைக்கு நான் தெரிவானேன். தேசிய அரசாங்க சபையை பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு பேர் இன்று பாராளுமன்றத்தில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் 1970 இலும் 1977ஆம் ஆண்டில் ஆர். சம்பந்தனும் நானும் இங்கு வந்தோம். 1977 இல், நாடு நிறைவேற்று ஜனாதிபதி முறைக்குள் பிரவேசித்தது. 1982 இல் நாங்கள் புதிய பாராளுமன்றத்திற்குச் சென்ற பிறகு, இந்த கட்டிடம் ஜனாதிபதி அலுவலகமாக மாறியது.

இந்தப் பின்னணியில் உலகப் போர்கள், உள்நாட்டுப் போர் நடந்தாலும், ஜனநாயகத்தையும், அரசாங்கத்தின் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டையும் நாம் ஒருபோதும் இல்லாமலாக்கவில்லை. இந்த முறையால், அனைவரின் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. இந்த பாராளுமன்ற அமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும்.

முழு ஆசியாவுக்கும் மற்றும் ஆப்பிரிக்காவில் இரண்டு நாடுகள் மாத்திரமே இதைச் செய்துள்ளன. ஒன்று இலங்கை மற்றொன்று மொரிஷியஸ். அப்படியானால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதைப் பாதுகாக்க வேண்டும். பிரிட்டன், அயர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்வீடன் மட்டுமே ஐரோப்பாவில் ஜனநாயகத்தைப் பேணின. ஜனநாயகத்தைப் பேணுவது பற்றி நமக்கு அறிவுரை கூறும் ஏனைய அனைத்து நாடுகளும் அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சியின் கீழ் வந்தன.

இந்த பொறிமுறையை எவ்வாறு பேணுவது என்பதை கற்றுக்கொள்ள இங்கு இருக்கும் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். மேலும் இங்கு அரசியலில் ஆர்வம் உள்ளவர்களும் இருக்கலாம்.அதற்கு தேசிய மாணவர் பாராளுமன்றம் அடிப்படையாக அமையும் என நம்புகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த சில கருத்துக்கள் கீழே தரப்படுகின்றன,

  • ஜனாதிபதி அவர்களே, இந்த நாட்டிலுள்ள பொறிமுறைமையில் பிரச்சினை இல்லை. நீங்கள் குறிப்பிட்டது போல் இலங்கை மக்களின் கண்ணாடியைப் போன்று ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நாடு. மேலும் 100% சர்வஜன வாக்குரிமை உள்ள நாடு. இந்நாட்டு மக்களின் அரசியல் உணர்வில் சிக்கல் உள்ளது. ஒரு தேர்தலில் நாம் ஏன் விருப்பு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியவில்லை. ஒரு வேட்பாளருக்கு எந்த அடிப்படையில் விருப்பு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்த விடயத்தில் எங்களுக்கு ஒரு பரிந்துரை உள்ளது. இந்த நாட்டில் உயர்தரத்தில் தான் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கப்படுகிறது. ஐரோப்பாவைப் எடுத்துக்கொண்டால், 15 வயதுக்குப் பிறகு, அவர்கள் அரசியல் பற்றி நிறைய அறிவைக் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த நாட்டு மக்களுக்கு அந்த அறிவு கிடைப்பதில்லை. இதனால் எந்த முறைமை இருந்தாலும் விதைக்குத் தான் நாம் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களின் அரசியல் அறிவைக் கட்டியெழுப்பிய பின்னர், தற்போதுள்ள முறைமையுடன் சர்வசன வாக்குரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் என்ற நமது இறுதி இலக்கை நோக்கி நாம் செல்ல முடியும்.
  • ஜனாதிபதி அவர்களே, ஏனைய நாடுகளைப் போல இந்தக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தும் திறன் நம்மிடம் இருந்தால், இந்த நிலையை மாற்ற முடியும் என்று கருதுகிறேன். புத்தகத்துடன் ஒட்டிய கல்வி முறைக்கு பதிலாக, இணை பாடத்திட்டம் மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயல்பாடுகள் மூலம் சிந்திக்கப்படும் கற்றல் வகையிலிருந்து அதை மாற்ற முடியும். வருடக்கணக்கில் படித்துவிட்டு வெளிநாட்டுக்குச் செல்லாமல், இலங்கைக்குள் ஏதாவது செய்து எமது நாட்டை உலகுக்கு எடுத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடிய கல்வி முறைமை அவசியம்.
  • ஜனாதிபதி அவர்களே, இந்த நாட்டில் அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும். ஆனால் அதிக அளவில் அரசியல் கட்சிகள் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், அனைவரையும் மதிக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஒரு மனிதக் குழுவாக நமக்கு முக்கியமான மற்றும் நாம் எதிர்பார்க்கும் தலைமைத்துவத்தை உருவாக்கும் ஒரு அரசியல் கட்சியில் நாம் இணைந்தால், அங்குதான் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். இலங்கை ஒரு அழகான, வளர்ந்த நாடு என்ற நிலை அங்கே தான் இருக்கிறது.
  • ஜனாதிபதி அவர்களே, ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த எனக்கு ஜனாதிபதியைப் பார்ப்பதும், அவருடன் நேருக்கு நேர் பேசுவதும் ஒரு பெரிய கனவாக இருந்தது. உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே என்று பிரபல தத்துவவாதிகள் கூட கூறுகிறார்கள். ஒரு பிள்ளை மகிழ்ச்சியாக இருக்கும் இடம் என்ற லத்தீன் வார்த்தையான “ஸ்கோலா” என்பதிலிருந்து உருவான “ஸ்கூல்” என்ற வார்த்தையின் அர்த்தம்.ஆனால் நான் உட்பட இவர்கள் அனைவரும் பாடசாலையை எப்படி உணர்கிறோம் என்று தெரியும். கல்வி முறைமை நம்மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள கல்வி சீர்திருத்தம் நமக்கும் தேவை. ஒரு நாடாக நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அதைச் செய்ய முடியும். நாம் ஒன்று சேர்ந்தால் எம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை.
  • ஜனாதிபதி அவர்களே, நமது கல்வி முறை பரீட்சையை மையமாகக் கொண்டது. தொழில் சார்ந்த கல்வியை நோக்கிச் சென்றால், நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், நாம் கற்றுக் கொள்ளும் சில விடயங்களைக் கொண்டு எதிர்காலத்தில் என்ன செய்ய முடியும் என்பதை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

இலங்கை பாராளுமன்றத்தின் பணிக்குழாம் பிரதானியும் பிரதிப் பொதுச் செயலாளருமான சமிந்த குலரத்ன, இலங்கைப் பாராளுமன்றத்தின் உதவிப் பொதுச் செயலாளர் ஹன்ச அபேரத்ன, பிரதமரின் மேலதிகச் செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் மேலதிக செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.