“பாரத்-லங்கா” வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்! ஒரே நாளில் 1300 வீடுகளுக்கு அடிக்கல்!
- மலையக தமிழ் மக்களின் பொருளாதார, சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பங்காற்றும் – ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கட்சி பேதமின்றி மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்த எதிர்பார்க்கும் முன்மொழிவுகளை அடுத்த மாதத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் ‘பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து இன்று (19) நிகழ்நிலை மூலம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பாரத்-லங்கா வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில், 45 தோட்டங்களில், 1300 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டும் வகையில் ஒன்லைன் ஊடாக நினைவுப் பலகை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
”10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான முதல் கட்டமாக 1300 வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கத்தின் நன்கொடைகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை முன்னெடுக்கிறோம். மலையக தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்திய அரசாங்கம் இந்த வீட்டுத்திட்டத்தை வழங்கியது. அதற்காக இந்திய அரசுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்கள் தங்களுக்கென காணியும் வீடும் இல்லாமை பெரும் குறைபாடாக இருந்தது. உண்மையில், குறிப்பிட்ட காலம் அவர்களுக்கு வாக்குரிமை கூட இருக்கவில்லை. எனினும், அந்த அரசியல் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பொருளாதார, சமூக உரிமைகளை வழங்க வேண்டியிருக்கிறது. இதில் ஒரு பகுதியை நாம் இன்று முன்னெடுத்துள்ளோம்.
வீடுகளை அமைப்பதற்கு காணிகளைப் பெற வேண்டியுள்ளது. இதற்காக தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. சில நேரம் அரச காணிகளை வழங்க நேரிடும். இதற்கமைய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அடுத்து மலையக தமிழ் மக்களின் கல்வி நிலைமை ஏனைய பிரசேதங்களை பின்தங்கி இருக்கிறது. தமிழ் பிரதேச பாடசாலைகளை, ஏனைய பாடசாலைகளின் நிலைமைக்கு நிராக மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தை அனைத்துப் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகிறோம். ஏனைய மக்களைப் போல இந்த மக்களும் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மலையகத்தில் வாழும் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களல்ல. கல்வி பெறுவதற்கான உரிமையை உறுதி செய்வதோடு தொழிற்பயிற்சி பெறுவதற்கான வசதிகளை இளைஞர் யுவதிகளுக்கு வழங்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களாக அவர்களை தொடர்ந்து வைத்திருக்க முடியாது. தோட்ட ஒப்பந்தங்களுக்கு அமைய காணித் துண்டொன்றை வழங்கி சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிகராக அந்த மக்களை மேம்படுத்துவது குறித்து ஆராயப்படுகிறது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் இது தொடர்பில் அதிக ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். அதேபோல், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த அனைவரையும் இணைந்துக் கொண்டு, கட்சி பேதமின்றி, இதுகுறித்த யோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போதிருக்கும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதன்பின்னர் மலையக தமிழ் மக்களதும், முஸ்லிம் மக்களதும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். இந்தப் பயணத்திற்கு நாம் தயாராக வேண்டும். நீண்ட காலமாக நாம் துன்பங்களை எதிர்கொண்டோம். எனினும், இன்று வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வருகிறோம். இந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
உணவு இல்லாத, எரிபொருள் இல்லாத நாட்டையே நான் அன்று பொறுப்பேற்றுக் கொண்டேன். இன்று உணவு, எரிபொருள் ஆகியன தடையின்றி கிடைக்கின்றன. பொருளாதாரத்தை மேம்படுத்தி, முன்நோக்கிச் செல்லும் போதும் பிரச்சினைகள் எழும். வரி அதிகரிக்கப்பட்டதுடன் தொடர்புள்ள பிரச்சினை இருக்கிறது. எனினும், இந்தப் பிரச்சினைகள் நீண்ட காலம் நீடிக்காது. சிறிது காலம் செல்லும் போது அந்த வரிச் சுமை குறையும்.
நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகளுடன் முன்நோக்கிப் பயணிக்க முடிந்தது. இந்த உதவிகள் கிடைத்திருக்காவிட்டால், எம்மால் முன்நோக்கிப் பயணித்திருக்க முடியாது. எனவே, நாம் இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். அனைத்து நாடுகளும் தமது எல்லைகளுக்குள் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் மேம்படுத்திக் கொள்ளவே முயற்சித்தன. விசேடமாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாமும் இதிலிருந்து பயன்பெற வேண்டும். இந்தியப் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தபோது, இதுகுறித்து இணக்கப்பாட்டிற்கு வந்து, இதனை மையப்படுத்தி பணியாற்றி வருகிறோம். இதற்கமைய இந்த வீட்டுத் திட்டத்திற்கு உதவிகளை வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டதாவது,
”இந்தத் திட்டம் வெறும் 1300 வீடுகளைக் கொண்ட திட்டம் அல்ல. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பின்னர் எமக்கு வழங்க உறுதியளிக்கப்பட்ட 10,000 வீடுகள் திட்டத்தின் அங்குரார்ப்பணம் இது.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்புக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது நீண்டநாள் கனவு இன்று நனவாகிறது. நாடு பொருளாதார நெருக்கடியையும் அரசியல் நெருக்கடியும் எதிர்கொண்டது. அரசியல் சிக்கல் ஏற்பட்ட போது ரணில் விக்ரமசிங்க மாத்திரம் தான் நாட்டைக் கட்டியெழுப்ப முன்வந்தார். நாட்டின் ஜனாதிபதியாக எமது ஆதரவையும் அவர் கோரினார்.
10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பி, நமக்கு ஒரு விடிவைத் தந்திருக்கிறார். நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்ற போது 100 வீடுகளைக் கட்டக் கூட நிதி இருக்கவில்லை. ஆனால் இன்று 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க முடிந்ததை பெருமையாக கருதுகிறேன். மக்களுக்கு காணி உறுதியைப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி 4 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளார். அதற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.” என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஷா,
”இந்தியாவினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில் இந்தத் திட்டம் மிகமுக்கியமான ஒன்றாகும். இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தை ஆதரிப்பதில் இந்திய அரசினதும் பிரதமர் நரேந்திர மோடியினதும் ஆழமான மற்றும் உறுதியான அர்ப்பணிப்பை இது வலியுறுத்துகிறது.
இந்த வீடமைப்புத் திட்டமானது ஆறு மாகாணங்களில் உள்ள 250இற்கும் மேற்பட்ட தோட்டங்களில் உள்ள பின்தங்கிய சமூகங்களுக்குப் பயனளிக்கிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 4,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு மேலதிகமாகவே இந்த 10,000 வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 4000 வீடுகளில் பெரும்பாலானவை ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திட்டத்தின் ஒரு வீட்டு அலகிற்கான செலவு மூன்று மடங்காக அதிகரித்திருப்பதன் மூலம், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இந்தத் திட்டத்திற்கான எங்கள் வலுவான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. இதனால், இந்திய அரசிற்கு பெருமளவு தொகையை பொறுப்பேற்க வேண்டியுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகளை வழங்கி அவர்களை வலுப்படுத்துவதே வீட்டுத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் ஊடாக அவர்களின் நல்வாழ்வில் பாரிய மாற்றம் ஏற்படும். லயன் அறைகளுக்குப் பதிலாக இரண்டு படுக்கையறைகள் கொண்ட சொந்த வீட்டில் வசிக்கும் அவர்களின் கனவை இந்தத் திட்டம் நிறைவேற்றும்.” என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.