தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று (03) இரவு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட குழுவினரை பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்றார்.பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அதன் பின்னர் இரு தரப்பினரும் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஜனாதிபதி மாளிகையில் உள்ள புராதன ஓவியங்களையும் பார்வையிட்ட தாய்லாந்து பிரதமர், அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பை இட்டார்.

தாய்லாந்து பிரதி பிரதமரும் வர்த்தக அமைச்சருமான பூம்தாம் வெச்சயாசாய் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரன, நிமல் சிறிபால டி சில்வா, காஞ்சன விஜேசேகர, ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.