நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலியா வாழ். இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலிய பேர்த் நகரில் வசிக்கும் அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை இன்று (09) சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது மற்றும் நவீனமயப்படுத்துவது குறித்து புலம்பெயர் இலங்கையர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அவற்றுடன் தொடர்ச்சியாக இணைந்துகொள்ளுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கையைக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் வேலைத் திட்டத்தைப் பாராட்டிய புலம்பெயர் இலங்கையர்கள், காலநிலை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது புலம்பெயர் இலங்கையர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, நாட்டின் முன்னேற்றதிற்காக நீண்டகால கொள்கைத் திட்டங்களைச் செயற்படுத்த அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும் என்றும் தெரிவித்தார்.
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் உள்ளிட்ட புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தௌிவூட்டினார்.
புலம்பெயர் இலங்கையர்களுக்கான அலுவலகம் ஒன்றை பேர்த் நகரில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இங்கு சுட்டிக்காட்டிய தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கை புலம்பெயர் சமூகம் அதனூடாக அரசாங்கத்துடன் வலுவான முறையில் தொடர்புகளைப் பேண முடியும் என்றும் தெரிவித்தார்.
கடந்த வருடம் வெளியிடப்பட்ட நிர்வாக தீர்மானங்கள் தொடர்பான அறிக்கை உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த சாகல ரத்நாயக்க, இந்த மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு புலம்பெயர் இலங்கையர்களின் ஆதரவை தொடர்ந்தும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக வௌிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டம் குறித்து வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியும் இங்கு விளக்கமளித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகள் சித்ராங்கனி வாகீஷ்வர, பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, மேற்கு அவுஸ்திரேலியாவின் இலங்கை கொன்ஸூலர் ஜெனரல் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.